மோர்கன் ஸ்டான்லி முதலீட்டாளர் கருத்தரங்கில், CNBC-TV18 லதா வெங்கடேஷ், சத்குருவுடன் நிகழ்த்திய நேர்காணலில், 'முதலீடு, ஆன்மீகம், ஸ்வச் பாரத் திட்டத்தின் முக்கியத்துவம், நிறுவனங்களின் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு, அதோடு யோகா, அதை செய்வதால் நமக்குக் கிடைக்கும் பலன்கள்' என பல விஷயங்கள் பற்றி சத்குருவிடம் கேள்விகள் கேட்டார். அதன் தொகுப்பு இதோ உங்களுக்காக:

Question: 'ஸ்வச் பாரத் அபியான்', 'யோகா தினம்' போன்ற நம் அரசாங்கத்தின் முன்முனைவுகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சத்குரு:

'ஸ்வச் பாரத்' என்பதும், 'யோகா தினம்' என்பதும் வெவ்வேறு விஷயங்கள் அல்ல. நம் நாட்டின் தலைவர் இதைப் பற்றியெல்லாம் சிந்தித்து, இவையெல்லாம் நடக்கவேண்டும் என்று முயற்சிப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆம்... 'உங்களுக்குள்' எப்படி இருக்கவேண்டும் என்று ஒரு தலைவர் பேசுவதை, கடந்த சில நூற்றாண்டுகளில் இப்போது தான் காண்கிறோம். சில நாடுகளில் இது நடந்திருக்கிறது. ஆனால் நம் நாட்டில் இதை நாம் செய்ததில்லை. அதைச் செய்யும் நேரம் வந்துவிட்டது. உண்மையிலேயே நாம் முன்னேற வேண்டும், தொழிலில் வெற்றி பெறவேண்டும் என்றால், ஒவ்வொரு தனிமனிதனும் தன்னளவில் ஒரு தெளிவோடு, தன் செயல்களை ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

Question: நம் நாட்டில் தொடர்ந்து இருக்கும் மற்றொரு பிரச்சனை, உழவர்களின் துயரம். இரண்டு வருடங்களாக பொய்த்துப் போன மழை... இவ்வருடமோ மிக அதிகமாகப் பெய்து, இருக்கும் பிரச்சனையை இன்னும் அதிகமாக்கிவிட்டது. இவ்விஷயத்தில் அரசாங்கத்திற்கு உங்கள் ஆலோசனை என்ன?

சத்குரு:

அடுத்த 10-15 ஆண்டுகளில் நம் நாட்டில் உழவுத் தொழிலில் ஈடுபட்டிருப்போரின் எண்ணிக்கையை நாம் குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் தற்கொலைகளும், அதைவிட மோசமான விஷயங்களும் நடந்துவிடும். அமெரிக்காவின் மக்கட்தொகையில் 2% மனிதர்களே விவசாயத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால் அவர்களின் நிலமும், விவசாயம் செய்யும் முறையும்... நம் நாட்டின் நிலம், நாம் விளைவிக்கும் பயிர்களோடு மிகவும் வித்தியாசப்படுகிறது. அதனால் நம் நாட்டில் 25% மக்களை விவசாயத்தில் ஈடுபடச் செய்யலாம். அப்படியெனில் மீதமுள்ள 50% மக்களை என்ன செய்வது? அவர்களை எல்லாம் மும்பைக்கு வரச் சொல்லிவிடலாமா? அது சரிவராது. இருக்கும் நிலைமையை அது இன்னும் மோசமாக்கிவிடும். அதனால் நம் கிராமங்களை நகரமயமாக்க வேண்டும். இன்று நகரங்களில் கிடைக்கும் வசதி வாய்ப்புகள் எல்லாம், கிராமத்திலும் கிடைக்க வேண்டும்.

Question: நம் அரசாங்கம் செயல்படுத்த நினைக்கும் மற்றொன்று... 'நிறுவனங்களின் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு' (CSR). இந்த அரசாங்கம் மட்டுமல்ல, இதற்கு முந்தைய அரசாங்கமும் இதைச் செய்ய முனைந்தது. இதன் மூலம் நம் நாட்டை வளர்க்க முடியும் என்று, இத்திட்டத்தில் பெரும் நிறுவனங்களின் பங்களிப்பை அவர்கள் ஊக்குவித்து வருகிறார்கள். இதை நீங்களும் ஆமோதிக்கிறீர்களா?

சத்குரு:

'நன்கொடை கொடுங்கள்' என்று மக்களை வலியுறுத்துவதில் எனக்கு அத்தனை விருப்பமில்லை. பங்குபெறும் இருசாராருக்கும் பயன்படும் வகையில் இல்லாத விஷயங்கள், பல நாட்கள் நீடித்து நிலைக்க வாய்ப்பில்லை. அதனால் நன்கொடை, கூட்டாண்மை சமூகப் பொறுப்பு ஆகியவற்றிற்கு பதிலாக, பெரும் தொழில்களின் 10 சதவிகிதம், கிராமங்களில்... கிராமங்களுக்கு ஏற்ற வகையில், நடைபெற வேண்டும் என்பது போன்ற சட்டத்தை இயற்றலாம். உங்கள் லாபத்தில் 10% கிராமப்புற தொழில்களில் நீங்கள் முதலீடு செய்யவேண்டும். இவ்வாறு இருந்தால், அந்த தொழில்களில் உங்களுக்கு லாபம் வந்தாலும், யாரும் உங்களை குறை கூற மாட்டார்கள். ஆனால் ஒரே இடத்தில் எல்லா தொழில்களும் நடக்காமல், அது இந்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறும் வகையில் இருக்கவேண்டும்.

Question: எங்கள் சேனலைப் பார்ப்போருக்கு உங்கள் அறிவுரை என்ன? எங்கள் சேனலின் வாசகர்கள் என்றால்... அவர்கள் எல்லாம், தங்களிடம் இருக்கும் பணத்தை பிரயோகித்து இன்னும் அதிகமாக பணம் சேர்க்க நினைப்பவர்கள். மோர்கன் ஸ்டான்லி முதலீட்டாளர் கருத்தரங்கம் கூட முதலீட்டாளர்களிடம் பணம் பெற்று, அதை பல விஷயங்களில் முதலீடு செய்து இன்னும் அதிக பணம் சேர்ப்பது பற்றித் தான். இவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?

சத்குரு:

'முதலீடு செய்கிறேன்' என்றால், ஒருவகையில் உங்கள் பணத்தை நீங்கள் வெளியே போட்டு, பணமழை பெய்யும் என்று எதிர்பார்க்கிறீர்கள்... சில நேரம் பெய்கிறது, சில நேரம் தொலைந்து போகிறது. பணமழை பெய்யவேண்டும் என்றால் உங்களால் தெளிவான முடிவுகளை எடுக்க முடியவேண்டும். எப்போதும் சரியான முடிவுகளை எடுப்பதற்கு வழி எதுவும் இருக்கிறதா? இல்லை. ஆனால் ஆழ்ந்து அறியும் கூர்மையான நுண்ணுணர்வை நீங்கள் வளர்த்துக் கொண்டால், நிச்சயம் சரியாக முதலீடு செய்யமுடியும். முதலீட்டாளர்கள் வணிகத்தில், எல்லாப் புள்ளி விவரங்களும் அறிந்திருந்தால் லாபம் பார்த்துவிட முடியும் என்று அர்த்தமில்லை. மேலோட்டமாக இல்லாமல், அனைத்தையும் ஊடுருவி விஷயங்களை உணரும் சிலர் மட்டுமே உலகெங்கிலும் கச்சிதமான முதலீடுகள் செய்து லாபம் ஈட்டுகிறார்கள். இதுபோன்ற பலரை நான் பார்த்திருக்கிறேன்... பேசியும் இருக்கிறேன். அவர்கள் வெறும் செய்திகளைக் கொண்டு செயல்படுவதில்லை, எல்லாவற்றையும் கவனிக்கிறார்கள். மேலோட்டமான நிலைகளை ஊடுருவி பல விஷயங்களை உணர்ந்து அவர்கள் முதலீடு செய்கிறார்கள். உதாரணத்திற்கு, கடந்த சில வாரங்களாக பங்குச்சந்தையில் பங்கு நிலவரம் மட்டுமே பார்த்து அவர்கள் முடிவு செய்வதில்லை. மக்களுக்கு என்ன தேவை என்று அவர்கள் காண்கின்றனர். மக்களின் வாழ்க்கைச் சூழல், வாழ்க்கை முறையை கவனிக்க வேண்டும். இளைஞர்கள் எதை நாடுகிறார்கள், பெண்கள் எதை விரும்புகிறார்கள், அவர்களுக்கு என்ன வேண்டும்... இவர்களின் தேவை என்ன... மக்கட்தொகை என்ன, நாளை காலை அவர்கள் எதை வாங்குவார்கள்... இல்லை எதை விற்பார்கள் என்பதையெல்லாம் கவனித்தால், எங்கு முதலீடு செய்யவேண்டும் என்பதையும் நீங்கள் கண்டுகொள்வீர்கள்!