ஈஷா ருசி

சின்னத்திரையில் பிரபலமாக வலம் வரும் 'நம்பிக்கை சந்துரு' தன் உணவு அனுபவங்களைக் கூறுகிறார்...

சந்துரு:

எங்கள் குடும்பம் ஆந்திராவிலிருந்து சென்னை வந்த குடும்பம். அப்பா திரைப்படத்துறையில் தொழில்நுட்ப வேலைக்காக வந்ததால் கோடம்பாக்கத்தில் செட்டில் ஆனோம். நிறையப்பேர் குடிசையில்தான் வசித்தோம். அப்பா எப்போது பார்த்தாலும்,

actor chandru

"சினிமாதான் நம்மைக் காப்பாத்துது,
சினிமாதான் நமக்குச் சோறு போடுது..."

எனச் சொல்லிக்கொண்டே இருப்பார். அதனால் எனக்கும் சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என ஆசை. ஆனால் நானும் சினிமாத்துறைக்கு வருவதை என் பெற்றோர் விரும்பவில்லை. அதனால் வீட்டைவிட்டே வெளியே வரவேண்டியதாகிப் போய்விட்டது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வெளியே வந்த நான் சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்பட்டேன். அதனால் ஒரு கவளம் சாப்பாட்டின் மதிப்பு என்ன என்பது எனக்கு மிகவும் நன்றாகவே தெரியும். பல நாட்கள் பட்டினியாகக்கூட இருந்திருக்கிறேன். அப்போது என்னை மொபைல் அயர்ன் செய்யும் ஒருவர் ஆதரித்தார். அவரும், அவருடைய மனைவியும் பராமரித்தார்கள். அவர்களின் சிறிய குடிசையில் சாப்பிட்ட எளிமையான சாப்பாடு அவ்வளவு ருசியாக இருக்கும்.

பிறகு பல இடங்களிலும் சென்றேன். சினிமாவில் ஓரிரு வாய்ப்புகள். அப்போது படப்பிடிப்பிற்கு வரும் சாப்பாட்டை நாங்கள் எல்லோரும் பகிர்ந்து கொள்வோம். எங்களுடைய வருத்தம், அவமானம், துக்கம் அனைத்தையும் சேர்த்து சாப்பாட்டோடு விழுங்கிவிட்டு, வெளியே சிரித்துப் பேசுவோம்.

அந்த சமயத்தில்தான் சின்னத்திரையில் 'மானாட, மயிலாட' நடன ப்ரோக்ராம் வந்தது. சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டாலும் கடினமாக பிராக்டிஸ் செய்து அந்தப் போட்டியில் ஜெயித்தேன். பிறகு 'யாமிருக்க பயமேன்' சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குடிசையில் இருந்து வாடகை வீடு நிலைமைக்கு வந்தேன். வீட்டை விட்டு வெளியேறிய நான், அப்போதுதான் அம்மாவைப் பார்க்க ஆசையாகப் போனேன். அவர்கள் என்னைக் கட்டிக் கொண்டு கண்ணீர்விட்டார்கள்.

என்னை உட்கார்த்தி வைத்து 'ஆந்திரா ஸ்பெஷ'லான பப்பு சாரு (பருப்பு ரசம்), கோங்குரா (புளிச்சகீரை) தொக்கு இரண்டையும் செய்து சாப்பாடு போட்டார்கள். அம்மா கையால் நீண்ட நாளுக்குப் பிறகு சாப்பிட்ட அந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். என் இளமை நாட்கள் அத்தனையும் ஒரு கணத்தில் திரும்ப நினைவுக்கு வந்தது.

அம்மாவின் சாப்பாடே ரொம்ப ருசிதான். குறிப்பாக இந்த இரண்டு அயிட்டம் சூப்பராக இருக்கும். எப்படிச் செய்வது என்று சொல்லவா...?

கோங்குரா தொக்கு

தேவையான பொருட்கள் :

கோங்குரா (புளிச்ச கீரை) - 2 கட்டு
கடலைப்பருப்பு - ஒரு மேஜைக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 20
புளி - எலுமிச்சை அளவு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • கோங்குரா (புளிச்ச கீரை) இலைகளை மட்டும் கிள்ளி நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடலை பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும்.
  • இதை ஆறவைத்து பொடித்துக் கொள்ளவும்.
  • மீண்டும் வாணலியில் எண்ணெய் விட்டு கோங்குராவை நன்கு சுருண்டு வரும் பதம் வரை வதக்கவும். கோங்குரா ஆறியதும் புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.
  • இறுதியாகப் பொடித்து வைத்துள்ளவற்றைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கிவிடவும்.
  • சாதம், சப்பாத்தி என்று எல்லாவற்றுடனும் இந்தத் தொக்கு ஜோராக இருக்கும்.

பப்புச்சாரு

பப்புச்சாரு, Pappu charu

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு - அரை கப்
நறுக்கிய தக்காளி - ஒன்று
புளித்த தண்ணீர் - ஒரு கப்
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

உளுந்து - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - சிறிதளவு

செய்முறை:

  • பருப்பை இருபது நிமிடம் ஊறவைத்து மைய வேக வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு புளித்த தண்ணீர், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும். பச்சை வாடை போனவுடன் பருப்பை நன்கு பிசைந்து நீர்க்க எடுத்துச் சேர்க்கவும்.
  • தாளிக்க கூறியுள்ளவற்றை தாளித்துச் சேர்க்கவும். இதை சாதத்துடன் சாப்பிட பிரமாதமாக இருக்கும்.