ஈஷா ருசி

கோகுலாஷ்டமியை முன்னிட்டு இங்கே இரண்டு ஸ்பெஷல் ரெசிபிகள் உங்களுக்காக! சுவைத்து மகிழுங்கள்.

முந்திரி கொத்து

முந்திரி கொத்து, தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் காணப்படும் ஒரு சிறப்பு உணவுப்பண்டம். இதே மாதிரியான இனிப்பு வகையை சிறிய மாற்றங்களுடன் யாழ்ப்பாணத்திலும் செய்வார்கள். இதற்கு பெயர் பயற்றம் பணியாரம். மண்டை வெல்லத்திற்குப் பதிலாக வெல்லம், சீனி சேர்ப்பார்கள். வாசனைக்கு ஏலத்துடன் லேசாக வறுத்த சீரகம், மிளகு பொடி செய்து சேர்க்கப்படும். குமரி முனையும், அதன் அருகில் இருக்கும் யாழும் விரும்பிச் சமைக்கும் பதார்த்தம் இதோ கிருஷ்ண ஜெயந்தியில் உங்களுக்காக...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தேவையான பொருட்கள்

பாசிப்பயிறு - 250 கிராம்
வறுகடலை - 150 கிராம்
பனங்கற்கண்டு - 200 கிராம்
வறுத்த எள்ளு - 50 கிராம்
தேங்காய் துருவல் - 1 மூடி
மைதா மாவு - 250 கிராம்
உப்பு - சுவைக்கேற்ப
ஏலக்காய் பொடி - சிறிதளவு
சுக்கு பொடி - சிறிதளவு

செய்முறை

பாசிப்பயிரை தோலுடன் லேசாக வறுத்து, அதை உடைத்து வைத்துக்கொள்ளவும். வறுகடலை மற்றும் உடைத்த பாசிப்பயிறு, பனங்கற்கண்டு ஆகியவற்றை தனித்தனியாக நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலை நெய்யில் நன்கு வறுத்து எடுத்துக்கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, அதில் வறுத்த எள்ளு, ஏலக்காய் பொடி, சுக்கு பொடி கலந்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து, அதை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ளவும். மைதா மாவில் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொண்டு அதில் இந்த உருண்டைகளை நனைத்து காய்ந்த எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். சுவையான முந்திரி கொத்து ரெடி.

அக்கார வடிசல்

Aug 13 கோகுலாஷ்டமி ஸ்பெஷல் ரெசிபி

"மாதவா, என் மனதுக்கு பிடித்த அரங்கனே எனக்கு மணவாளனாக வந்தால் நூறு அண்டா வெண்ணையும், நூறு அண்டா அக்காரவடிசலும் உனக்கு நிவேதனமாகத் தருகிறேன்...," திருமாலிருஞ்சோலை அழகரிடம் ஆண்டாள் இப்படி வேண்டிக் கொண்டதாகச் சொல்வார்கள். அவள் மனம் போலவே அரங்கன் அவளுக்கு மாலை சூட்டி தன்னுடன் ஐக்கியம் செய்துகொண்டது உங்களுக்கே தெரிந்திருக்கும்.

ஆண்டாள் ரசித்து தன் மனமார படைத்த அக்கார வடிசல் உங்களுக்காக...

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கப்
வெல்லம் - 2 கப்
பால் - 5 கப்
ஏலக்காய் பொடி - சிறிதளவு
நெய் - 50 மிலி
முந்திரி, திராட்சை - சிறிதளவு

செய்முறை

வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி பச்சரிசியை வறுக்கவும். அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் 4 விசில் விட்டு வேகவைக்கவும். பின்னர் அதை நன்கு மசித்து, அதில் 5 கப் காய்ச்சிய பாலை சேர்த்து வேகவிட வேண்டும். நன்கு குழைய வெந்தவுடன் அதில் வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்து கிளறி இறக்கவும். இது ஸ்ரீரங்கத்து ஸ்பெஷல் ரெசிபி.