இந்த மாதம் (செப்டம்பர்) 20ம் தேதி கோபிச் செட்டிபாளையத்தில் லிங்கபைரவி பிரதிஷ்டை வெகு சிறப்பாக நிகழவுள்ளது. இந்த அற்புத திருப்பணி சாத்தியமானதற்குப் பின்னாலுள்ள அர்ப்பணிப்பு மிக்க செயல்பாடுகள் ஏராளம். இத்திருப்பணியில் ஈடுபட்டவர்களின் அனுபவப் பகிர்வுகளோடு, பல சுவாரஸ்ய தகவல்களை தாங்கிய படி ஒரு பதிவு உங்களுக்காக!

ஏறக்குறைய மூன்றரை வருட காலங்கள், பல ஆயிரக்கணக்கான மக்களின் எதிர்ப்பார்ப்புகள் மற்றும் அயராத அரும்பணிகளால் கோபிச் செட்டிபாளையத்தில் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி லிங்கபைரவி தேவி குடிபுகவிருக்கிறாள்.

அன்னையின் திருவுருவப்படத்தின் முன் அமர்ந்து மனமுருக, கண்களில் நீருடன் ‘தாயே… எப்படியாவது இந்த திருப்பணி நிகழ்ந்துவிட அருள்பாலிக்க வேண்டும்!’ என வேண்டினேன். அடுத்த 15 நாட்களில் அந்த அற்புதம் நிகழ்ந்தது.

விருப்பமிருந்தால் தாங்கள் தங்கள் ஊர்களில் தேவியை பிரதிஷ்டை செய்துகொள்ளலாம் என சத்குரு கூறியிருந்தார். பொதுவாக கொங்குவட்டார மக்கள் பேச்சில் மட்டுமல்ல குணநலன்களிலும் மென்மையான தன்மை கொண்டவர்கள் என்பதால் என்னவோ அங்கே தேவியின்பால் அதீத பக்தியினை பார்க்கமுடிகிறது. வாழ்வை வண்ணமயமாக்கி அருளை வாரிவழங்கும் அந்த தெய்வீகத்தின் உச்சத்தை தமது ஊருக்கும் அழைத்துச் செல்லும் அந்த ஆவல் கோபியின் மக்களுக்கு வந்ததில் ஆச்சரியமில்லை! அவர்களின் பக்தியே அவர்களை இந்த அற்புத செயலை நிகழ்த்த உந்தச் செய்துள்ளது.

லிங்கபைரவிக்கு இடம் தேர்ந்தெடுத்தது முதல் இன்று இத்திருப்பணி நிறைவடையும் தருவாயில் கொண்டுவந்திருப்பது வரை பல்வேறு அனுபவங்களை கோபியிலுள்ள தேவி பக்தர்கள் எதிர்கொண்டுள்ளனர். தேவி ஆலயத்திற்கு இடம் வேண்டும் என்றதும், ஈஷா விவசாய இயக்கத்தில் இயங்கிக்கொண்டிருந்த 5 விவசாய குடும்பத்தினர் எவ்விதத் தயக்கமுமின்றி தங்கள் இடத்தை வழங்குவதற்கு முன்வந்தனர். சத்குருவின் வழிகாட்டுதல் மூலம் அந்த இடங்களில் கோபி கொடிவேரி தங்கராஜ்-பானுமதி தம்பதியரின் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இடம் தேர்வாகிவிட்டது, இனி பணியைத் தொடங்கிவிடலாமே?! ஆனால் அது அவ்வளவு சுலபத்தில் நிகழ்ந்துவிடவில்லை! இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், இந்த கட்டிடப் பணி முழுவதும் கோபி மற்றும் சுற்றுவட்டார மக்கள் மட்டுமல்லாமல், வெளியூர்-வெளிநாட்டு மக்கள் பலரிடமும் நன்கொடை பெறப்பட்டதாலேயே சாத்தியமாயிற்று. இதில் பல தடைகளும் நேர்ந்தன! ஆனால், தேவியின் அருளாலும் அன்பர்களின் மாறாத பக்தியாலும் அந்த தடைகளனைத்தும் பனியென விலகியது!

இது குறித்து சிலர் பகிர்ந்துகொண்டபோது...

“எனக்கு பைரவி கோவிலின் கட்டிடத் திருப்பணி வரவு-செலவு கணக்குகளை பராமரிக்கும் பணி அளிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக பொருளாதார சிக்கல் ஏற்பட்டது; சரியாக சென்று கொண்டிருந்த கட்டிட திருப்பணிகள் ஒருகட்டத்தில் தடைபடும் நிலை உருவானது; பணிகளை முடிக்க ஒரு பெருந்தொகை தேவைப்பட்டது. கட்டிட பணிகள் நடைபெறும் வளாக சன்னதியில், அன்னையின் திருவுருவப்படத்தின் முன் அமர்ந்து மனமுருக, கண்களில் நீருடன் ‘தாயே... எப்படியாவது இந்த திருப்பணி நிகழ்ந்துவிட அருள்பாலிக்க வேண்டும்!’ என வேண்டினேன். அடுத்த 15 நாட்களில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. அனைத்து வேலைகளையும் முடிக்க தேவையான மிகப் பெருந்தொகையை ஒரு தனவந்தர் நன்கொடையாக ஒரு தன்னார்வத் தொண்டர் மூலம் அளித்தார். தேவியின் கருணையை எண்ணி கண்களில் நீரும், மனதில் அமைதியையும் அடைந்தேன்.” என்கிறார் திரு.துரைசாமி (கிளை மேலாளர் ஓய்வு இந்தியன் வங்கி, கோபி)


sengottayan-anna-1இதுகுறித்து மேலும் கூறிய திரு.செங்கோட்டையன் அண்ணா, “கோபி ஒரு சின்ன நகரம். அதனால் நன்கொடை வசூல் செய்வது மெதுவாகத்தான் நடந்து வந்தது. அதனால் கட்டுமானப் பணிகளும் ரொம்ப மெதுவாகத்தான் நடந்தது. இந்த மாதிரி சமயத்தில் கடந்த 4 வருடங்களாக தன்னார்வத் தொண்டர்கள் மத்தியில் தேவி திருப்பணி மேலே இருந்த ஆர்வத்தையும் அக்கறையையும் தொடர்ந்து உயிரோட்டமாக வைப்பது ரொம்ப சவாலாக இருந்தது. ஸ்வாமி பிரபோதா அவர்களும் அவ்வப்போது எங்களை உற்சாகப்படுத்தி எங்களை வழிநடத்தினார். ஒருகட்டத்தில் நன்கொடை வசூல் செய்வது சில சமயங்களில் நின்னேகூட போயிடும். ஆனாலும், தேவியோட கருணையினால் மக்கள் மத்தியில் தொடர்ந்து ஆர்வமும், உற்சாகமும் குறைவில்லாம இருந்ததாலேதான் இப்ப கோயில் நிறைவுநிலைக்கு வந்திருக்கு.”

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மேலும் அவர் கூறுகையில், பல நடுத்தர குடும்பத்தினர் கூட பக்தி மிகுதியால் தங்கள் தங்க ஆபரணங்கள் சிலவற்றை நன்கொடையாக வழங்கியதை நெகிழ்ச்சியுடன் பதிவுசெய்தார். கோபி தன்னார்வத் தொண்டர் கண்ணகி அக்கா, தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அவர்களது 6 மாத சிறுசேமிப்பை வழங்கச் சொன்னதும், குழந்தைகள் உட்பட அதில் பங்கேற்று தங்களால் இயன்ற தொகையை இதற்கு வழங்கியதாக அவர் தெரிவித்தார். சிலர் தங்கள் திருமாங்கல்யத்தை கழற்றி நன்கொடையாக வழங்க முன்வந்ததை அவர் கூறும்போது பக்தியின் ஆழம் எத்தகையது என்பதை உணரமுடிந்தது. நன்கொடை திரட்டும் பணிகளை ஒருங்கிணைப்பதில் முன்னிருந்து நிகழ்த்திய செந்தில்குமார் அண்ணா, சக்தி மற்றும் ராஜூ அண்ணா போன்றவர்களின் துணையில்லாமல் இது சாத்தியமாகியிருக்காது என்பதை அவர் நன்றியுடன் தெரிவித்துக்கொண்டார்.

நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த செந்தில்குமார் அண்ணா சொல்லும்போது, “சத்குருவின் அருளால் கோபி லிங்கபைரவி உருவாக்கத்தில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. இப்பணியில் ஈடுபடும்போது, சில தன்னார்வத் தொண்டர்களின் பல செயல்கள் எனக்கு மெய்சிலிர்க்க வைத்தன.

குழந்தைகள், கல்லூரி மாணவிகள், பெரிதாக வசதி இல்லாவிட்டாலும் தனது முதல் மாதச் சம்பளத்தினை வழங்கிய சகோதரி, தனது வாழ்வினை முழுமையாக ஈஷாவில் இணைத்துக் கொண்டாலும் சொந்த ஊர் கோவிலுக்கு தன் கை வளையலினை அளித்த ஈஷா ஆசிரியை, வாக்கு கொடுத்துவிட்ட காரணத்தால் கையில் காசில்லாமல்போனாலும் கடன் வாங்கியாவது நன்கொடை வழங்கிவிட தயாரான விவசாய குடும்பம், வளைகாப்புக்கு வந்த வெகுமதிகளை வழங்கியதன் மூலம் தனது மகனை ஜனனத்திற்கு முன்னரே வள்ளலாக்கிய பெற்றோர் என இன்னும் எண்ணற்ற நல் உள்ளங்களை கண்டபோது உண்மையான பக்தியின் சக்தியை புரிந்துகொள்ள முடிந்தது”

கட்டிட பணிகளில் கரம்கொடுத்த தேவியின் அருள்...

என்னதான் பொருளாதாரம் இருந்தாலும், அதை செயல்படுத்த உடலுழைப்பு வேண்டுமல்லவா?! என்னதான் பணியாட்களை பணியமர்த்தினாலும், நம் கைகளால் செங்கல் எடுத்து தேவிக்கு ஆலயம் கட்டுவதில் தனி மகிழ்ச்சி இருக்குமல்லவா?! இதில் பல அன்பர்கள் தங்களுக்கு கிடைக்கும் நேரங்களில் கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டனர். சிலர் முழுநேரமாக இதில் பங்கேற்றனர்.


arthi-annaஅப்படியொரு அன்பர் இதுகுறித்து பகிரும்போது, “கோபியில் லிங்கபைரவியை பிரதிஷ்டை செய்ய சத்குருவிடமிருந்து அனுமதி கிடைத்த அன்றே நான் முடிவு செய்தேன், இந்த மகத்தான திருப்பணியில் என்னை இணைத்துக்கொள்ள வேண்டுமென்று! அதன் தொடர்ச்சியாக ஈஷா கட்டுமான குழுவுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கட்டுமான பணியில் ஈடுபடும்போது சில நேரங்களில் அதிகமான வேலை பளு இருக்கும். அப்போது பைரவியின் கருணையால், எதிர்பாராத வகையில் வெளியிலிருந்து உதவிகிடைக்கும். இதை நான் கண்கூடாக உணர்ந்துள்ளேன். சத்குருவின் ஆசீர்வாதமும், லிங்கபைரவியின் கருணையும் அனைவரது ஒத்துழைப்பும் இருந்ததால் கோவில் கட்டுமானம் மிக எளிதாக முடிந்துள்ளது. இந்த மகத்தான திருப்பணியில் நானும் பங்கு கொண்டதை மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறேன்” -ஆ.அர்த்தநாரீசுவரன்.

சரி... அதென்ன தேவியின் திருவிளையாடல்?!

என்னதான் பணியாட்களை பணியமர்த்தினாலும், நம் கைகளால் செங்கல் எடுத்து தேவிக்கு ஆலயம் கட்டுவதில் தனி மகிழ்ச்சி இருக்குமல்லவா?! இதில் பல அன்பர்கள் தங்களுக்கு கிடைக்கும் நேரங்களில் கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டனர். சிலர் முழுநேரமாக இதில் பங்கேற்றனர்.

கோபி அன்பர்கள் பகிர்ந்துகொண்டபோது காரண அறிவிற்கு அப்பாற்பட்ட சில விஷயங்கள் திருப்பணிகளின்போது நிகழ்ந்ததாக பகிர்ந்துகொண்டனர்.

அஸ்திவாரம் தோண்டும்போது மண்ணிற்குள் இருந்து வெளிவந்த ஆமை அவர்களுக்கு ஒரு புரியாத சமிக்ஞயாக இருந்து வருகிறது. கட்டுமானப் பணிகளின்போது அங்கே எண்ணற்ற பாம்புகள் உலவுவதைப் பார்க்கும்போதிலும், அவை ஒருபோதும் பணிகளுக்கு எந்த தொந்தரவும் கொடுத்ததில்லை என்பதை பதிவுசெய்தனர். தன் கனவில் இந்த இடமும் தேவியும் வந்ததாகச் சொல்லி, தன் மகனுடன் வந்த ஊர்-பேர் தெரியாத ஒரு பெண்மணி அந்த இடத்தை வணங்கிவிட்டு ஒரு சிறுதொகையை நன்கொடையாக வழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார். ஆலய கட்டுமானப் பணிகளில் கடந்த 2 வருடங்களுக்கும் மேல் தன்னை முழுமையாக அர்ப்பணித்து ஈடுபட்டிருந்த சுப்பிரமணி அண்ணா, கட்டிட பணியின்போது அடிபட்டு தனது முழங்கால் சவ்வு கிழிந்துவிட்டதாகவும், கால் வலியால் அயர்ந்து படுத்திருக்கும்போது யாரோ வந்து தன்மீது வேப்பிலையை போட்டுச் சென்றதாகவும், அடுத்த ஒருசில நாட்களில் உடல்நலம் நல்ல முன்னேற்றம் கண்டதாகவும் கூறியபோது அவருக்கு மட்டுமல்ல நமக்கும் மெய்சிலிர்க்கச் செய்தது.

பொதுமக்கள் மத்தியில் தேவிக்கு வரவேற்பு...

இந்த மாதம் (செப்டம்பர்) 20ஆம் தேதி தேவி பிரதிஷ்டை நிகழவுள்ள நிலையில், பொதுமக்களிடையே தேவி எந்த அளவிற்கு சென்றடைந்திருக்கிறாள் என்பதை செங்கோட்டையன் அண்ணா சொல்லும்போது, “தேவி வருவதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், 2013ல் பூமிபூஜை செய்தபோது தேவி உற்சவத்தோடு, தேவிபூஜையும் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர்க்கு மேல் கலந்துக்கிட்டாங்க. இதில் பொதுமக்கள் முளைப்பாரி எடுத்து வந்தாங்க. இங்கே போர்வெல் போட்டபோது கூட அதையொரு வைபவமாக கொண்டாடினோம். நாங்கள் வீடு வீடாகச் சென்று தேவி பிரதிஷ்டை நிகழவுள்ளதை முதலில் வாய்மொழியாகச் சொல்லி, பின் அழைப்பிதழை வழங்கிவருகிறோம். பெரும்பான்மையான மக்கள் அழைப்பிதழைப் பார்க்காமலே ‘தேவி பிரதிஷ்டை’ என்று சொன்ன மாத்திரத்திலேயே கண்களில் கண்ணீர் பெருக நிற்கிறார்கள்!” என்றார்.

பிரதிஷ்டையை தொடர்ந்து அதே வாரத்தில் துவங்கவிருக்கும் நவராத்திரி திருவிழாவை கோபி லிங்கபைரவியில் வெகுசிறப்பாக கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நவராத்திரி நாட்களில் சிறப்பு அலங்காரத்தோடு, சிறப்பு பூஜைகளும், தினமும் மாலையில் புகழ்பெற்ற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறவிருக்கின்றன.

செப்டம்பர் 19ஆம் தேதியே வெளியூரிலிருந்து பிரதிஷ்டை நிகழ்விற்கு வருபவர்களுக்கென தங்குமிடமும் உணவு ஏற்பாடுகளும் தன்னார்வத் தொண்டர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிரதிஷ்டையில் கலந்துகொள்ள வரும் அன்பர்கள் அனைவருக்கும் மகா அன்னதானம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

அன்னதானத்திற்கு நன்கொடை வழங்குவதற்கு: 9443019569

மேலும் தகவல் பெற: 9442519898 & 9842254123

வெளியூரிலிருந்து வருபவர்கள் தங்குமிட வசதிக்கான தொடர்புக்கு: 9976022177

குறிப்பு: ‘நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்’ பயணத்தில் இருக்கும் சத்குரு செப்டம்பர் 7ஆம் தேதியன்று கோபிக்கு வருகை தருகிறார். அன்று லிங்கபைரவியில் தன்னார்வத் தொண்டர்களை சந்திக்கிறார்.