நதிகளை வணங்குகிற பாரம்பரியம் பாரதத்திற்கு இருந்தாலும், நதிகள் அழியக்கூடிய அபாயத்தில் இருக்கின்றன. ஏழு நதிகளின் தேசம் என்று அழைக்கப்படும் பாரதம், பாலைவனமாகிவிட்டால், பேரழிவு ஏற்படும் என்கிற எச்சரிக்கையை சத்குரு இக்கட்டுரையில் வழங்குகிறார்...

சத்குரு:

நாகரிகங்கள் உருவானபோது, புராதன பாரதம் ஏழு நதிகளின் தேசம் என்றே அழைக்கப்பட்டது. நதிகளை மக்கள் வணங்குகிற அளவுக்கு அவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. நாம் வணங்குகிறோம், ஆனால் அவற்றை பராமரிப்பதில்லை. பல லட்சம் ஆண்டுகளுக்கு இந்த நதிகள், இந்த பூமியில் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், நதிகளுக்கான பெரும் அச்சுறுத்தல் உருவாகி இருக்கும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

இன்னும் 20 ஆண்டுகளில், நதிகள் எல்லாமே பருவகாலத்தில் மட்டுமே ஓடுபவையாக இருக்கும். பல லட்சம் ஆண்டுகளாக, ஜீவநதிகளாக ஓடிக்கொண்டிருந்த நதிகளெல்லாம் இன்னும் ஓரிரு தலைமுறைகளில் எப்போதோ ஓடக்கூடிய நதிகளாகிவிடும்.

நதிகளை எப்படி பயன்படுத்துவது என்பதில் நாம் மிகுந்த கவனம் செலுத்தியிருக்கிறோம். எப்படி அணைகள் கட்டுவது, கால்வாய் வெட்டுவது, எப்படி இன்னும் பயிர்களை விளைவிப்பது, எல்லாம் நாம் செய்திருக்கிறோம். லட்சக்கணக்கானோருக்கு உணவு உற்பத்தி செய்யக்கூடிய மிகப் பெரிய சாதனையும் செய்திருக்கிறோம். ஆனால், இந்தப் பெரும் சாதனைகள் செய்கிற அதே நேரத்தில், எதிர்கால தலைமுறைக்கு உண்ணவோ, பருகவோ ஒன்றுமில்லாத சூழ்நிலையையும் நாம் உருவாக்கிவிட்டோம்.

இப்போது, நம் நதிகள் எவ்வளவு வேகமாக வறண்டு வருகின்றன என்றால், இன்னும் 20 ஆண்டுகளில், நதிகள் எல்லாமே பருவகாலத்தில் மட்டுமே ஓடுபவையாக இருக்கும். பல லட்சம் ஆண்டுகளாக, ஜீவநதிகளாக ஓடிக்கொண்டிருந்த நதிகளெல்லாம் இன்னும் ஓரிரு தலைமுறைகளில் எப்போதோ ஓடக்கூடிய நதிகளாகிவிடும். இப்போதே காவிரி கடலைத் தொடுவதில்லை. ஆண்டுக்கு நான்கைந்து மாதங்களுக்கு கிருஷ்ணா நதி, கடலை தொடுவதில்லை. இது தேசத்தின் எல்லா பகுதிகளிலும் நடக்கத் தொடங்கிவிட்டது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எந்தச் சூழ்நிலையையும் நம்மால் கையாண்டு விட முடியும், ஆனால், தண்ணீரையும், நம் மக்கள் தொகைக்கு உணவு உற்பத்தி செய்யும் திறனையும் நாம் இழந்துவிட்டால், மிகப் பெரிய பேரழிவை எதிர்நோக்குபவர்களாக ஆவோம்.

ஏறக்குறைய, 5.3 பில்லியன் டன்கள் மேல் மண்ணை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். ஆண்டுக்கு 1 மிமீ மேல் மண்ணை மொத்தமாக இழப்பதாக இதற்கு பொருள். இப்படியே போய்க் கொண்டிருந்தால், 35, 40 ஆண்டுகளுக்குள் பயிர்களை விளைவிக்கக்கூடிய மேல் மண், சுத்தமாக அழிந்து போய்விடும். இதனால், உணவு உற்பத்தி செய்யக்கூடிய திறமை வெகுவாக குறைந்து கொண்டிருக்கிறது. இப்போதே கடந்த 35 ஆண்டுகளில், 25 சதவிகித மேல் மண்ணை இழந்திருக்கிறோம். இந்நிலை தொடர்ந்தால், தேசம் பாலைவனம் ஆகிவிடக் கூடும்.

தண்ணீர் இருப்பதால்தான் மரங்கள் இருப்பதாக பலரும் நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் மரங்கள் இருப்பதால்தான் தண்ணீர் இருக்கிறது.

இப்போதே காவிரி கடலைத் தொடுவதில்லை. ஆண்டுக்கு நான்கைந்து மாதங்களுக்கு கிருஷ்ணா நதி, கடலை தொடுவதில்லை. இது தேசத்தின் எல்லா பகுதிகளிலும் நடக்கத் தொடங்கிவிட்டது.

பழங்காலத்திலிருந்தே மக்களின் நுண்ணறிவு எவ்வளவு கூர்மையாக இருந்ததென்றால், பயிர்களை விளைவித்தால், பயிர்களை மட்டும் நாம் எடுத்துக் கொள்வோம், செடியின் மிச்ச பகுதிகளும், கால்நடைகளுடைய கழிவுகளும் பூமிக்கு சொந்தமாகும். ஆனால், இன்று நாம் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்கிறோம், எதையும் திரும்பத் தருவதில்லை. வெறும் உரங்களைப் போடுவதாலேயே எல்லாம் நடந்துவிடும் என்று நினைக்கிறோம். அது அப்படி அல்ல.

நம்முடைய உணவின் தரமும் ஊட்டச்சத்தும் வெகுவேகமாக குறைந்து வருகிறது. நாம் பாலைவனமாக இந்த மண்ணை மாற்றிக் கொண்டிருப்பதால், உணவு விளைவிக்கின்ற ஆற்றலும் குறைந்துகொண்டே வருகிறது.

இவ்வளவு வளமான ஒரு பூமி, பாலைவனமாகுமா என்று நீங்கள் கேட்கலாம். ஆப்பிரிக்காவில் இருக்கக்கூடிய கெலஹரி, ஒரு காலத்தில் வளமான பூமியாக இருந்தது, இன்று மிகக் கொடூரமான பாலைவனமாகி இருக்கிறது. நதிகள் அங்கே ஒருகாலத்தில் ஓடிக் கொண்டிருந்தன. இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் பலமுறை நிகழ்ந்திருக்கிறது, இனியும் நிகழக்கூடும்.

இத்தகைய சூழலை நாம்தான் உருவாக்கி இருக்கிறோம்.

தனிமனித உற்சாகத்தால் மட்டும் இந்த நிலை மாறிவிடாது. நம்மில் சிலர், அங்கும் இங்கும் மரங்கள் நடுவதாலோ, நதிக்கரையில் மரங்கள் நடுவதாலோ இந்த மாற்றம் நிகழ்ந்துவிடாது. அது தனிப்பட்ட நிறைவாக இருக்குமே தவிர நிலையான தீர்வாக இருக்காது. எனவே, நடைமுறைப்படுத்தக் கூடிய அரசாங்க சட்டங்கள் நமக்கு தேவை. அதன்மூலம், நதிகளில் தண்ணீர் பெருகும், ஈரப்பசை பூமியில் பெருகும்.

பெரும்பாலான இந்திய நதிகள் வனங்களிலிருந்து தோன்றுபவை. மழைக் காடுகள் இந்த மண்ணில் பெருகுகிறபோது, பூமி நீர்பசை கொண்டதாக மாறும். ஏரிகளும் ஆறுகளும் நிரம்பி ஓடும். வனம் இல்லையென்றால் நதிகள் இருக்காது. இன்று இந்தியாவின் பெரும்பகுதி வயல் நிலமாகிவிட்டது. இதை நம்மால் வனங்களாக மாற்ற முடியாது. ஆனால், குறைந்தபட்சம் நதிக்கரை ஓரத்தில் ஒன்று அல்லது ஒன்றரை கிமீ தூரத்திற்கு, இருபுறமும், அரசு நிலமாக இருந்தால் காடுகள் உருவாக்குவதும், தனியார் நிலங்களில் வேளாண் காடுகள் அமைப்பதும் இதற்கு தீர்வாக அமையும்.

நம்மில் சிலர், அங்கும் இங்கும் மரங்கள் நடுவதாலோ, நதிக்கரையில் மரங்கள் நடுவதாலோ இந்த மாற்றம் நிகழ்ந்துவிடாது. அது தனிப்பட்ட நிறைவாக இருக்குமே தவிர நிலையான தீர்வாக இருக்காது. எனவே, நடைமுறைப்படுத்தக் கூடிய அரசாங்க சட்டங்கள் நமக்கு தேவை.

விவசாயி தன் வாழ்வாதாரத்திற்காக உழைக்கிறார். சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் இந்த அழிவை அவர் அறியமாட்டார். ஆனால், இதில் இருக்கக் கூடிய பொருளாதார நன்மையை அவருக்கு உணர்த்தினால், தன்னுடைய வயலில் பழமரங்களை நட்டால், அவர் அதிக வருவாய் பெறமுடியும் என்பதை உணர்த்த வேண்டும். ஆனால், வேளாண் காடுகள் வளர்ப்பில், விளைச்சல் வரத் துவங்குகிற வரையில் சில மானியங்களைத் தரவேண்டும். விளைச்சல் வரத் துவங்கிய பிறகு, தனியார் நிறுவனங்கள் அதற்கு தொடர்புடைய தொழிற்சாலைகள் எல்லாம், இந்த உற்பத்திகளை விலைக்கு வாங்க ஊக்குவிக்க வேண்டும். இந்த அடிப்படையை நாம் பார்த்துக் கொள்வோமேயானால், ஒரு பதினைந்து ஆண்டு காலங்களில், குறைந்த்து 20 சதவிகிதமாவது நதிகளுடைய நீர்கள் நிச்சயமாக பெருகும்.

நதிகளை எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலையிலிருந்து நதிகளை எப்படி மறுசீரமைப்பு செய்யலாம், புத்துயிர் பெற வைக்கலாம் என்பதை நோக்கி நம்முடைய சிந்தனை செல்லவேண்டும்.

இதற்கான தீர்வு அரசாங்க சட்டத்தின் மூலம்தான் சாத்தியம். மிகப் பெரிய மாற்றம் வரவேண்டும் என்றால், தேசிய அளவில் சில திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நம் நதிகளை காப்பதற்கான ஒரு அவசர திட்டத் தேவை இது என்பதை அனைவரையும் உணரச் செய்ய வேண்டும்.

இதற்காக செப்டம்பர் மூன்றிலிருந்து அக்டோபர் 2ம் தேதி வரை "நதிகளை மீட்போம்" விழிப்புணர்வு பயணம் ஒன்றினை நாம் மேற்கொள்கிறோம். நான் நேரடியாக 16 மாநிலங்களை கடந்து, 7000 கிமீட்டர்கள், கார் ஓட்டிக் கொண்டு செல்கிறேன். 23 பெருநகரங்களில் முக்கிய நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். இந்த விழிப்புணர்வு பயணம் புதுதில்லியில் நிறைவுபெறும். அப்போது, "நதிகளுக்கு புத்துயிர் தருவது" பற்றி சில பரிந்துரைகளை அரசாங்கத்திடம் தருவோம். இதுவரையில் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியாக இருப்பதுபோல் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், அனைத்து மாநிலங்களும் ஒன்று சேர்ந்து, ஒருமித்த கருத்தோடு ஒரு பொதுத்திட்டத்தை உருவாக்க வேண்டும்.

இந்த தீர்வு மிக எளிதானது. நதிகளை ஒட்டி பசுமைப் பரப்பினை உருவாக்க வேண்டும். மரங்களைக் கொண்டு பசுமைப் பரப்பினை உருவாக்கினால், அது தண்ணீரை பூமியில் பிடித்து வைத்துக்கொண்டு, நதிகளை புதுப்பிக்கும். இந்த விழிப்புணர்வை, எல்லோருக்கும் கொண்டு வந்து, பொதுத்திட்டங்களையும் சட்டங்களையும் உருவாக்கி, நடைமுறைப்படுத்தினால், நம் தேசத்தின் எதிர்காலத்திற்கும் வருங்கால தலைமுறைகளின் வாழ்வுக்கும் நாம் எடுக்கக்கூடிய ஒரு மகத்தான முயற்சியாக அமையும்.