எழில் கொஞ்சும் சிங்கப்பூர்!

ஆசிரமத்தில் இரண்டு நாட்கள் மூச்சுவிடக் கூட நேரமில்லாத சூழ்நிலைக்கு இடையே, நான்கு நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றேன். இணையதளம் மூலம் இன்னர் இன்ஜினியரிங் வகுப்பு முடித்தவர்களுக்கு தீட்சை வழங்கும் நிகழ்ச்சி முதல் முறையாக இங்கு நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சிங்கப்பூர் தன்னார்வத் தொண்டர்கள் இந்த நிகழ்ச்சிக்காக மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்தது போல் தோன்றியது. நான் அங்கு சென்று இறங்கியவுடன், அவர்கள் முகங்களில் மகிழ்ச்சியும், ஆசுவாசமும் ஒருங்கே பிரதிபலித்தன. நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களின் பங்கு மிக அற்புதமாக இருந்தது.

ஆனாலும், மிகவும் மகிழ்ச்சியளித்த ஒரு விஷயம் என்னவென்றால், ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை கூட தெரியாத 12 பேர் சீனாவிலிருந்து வந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுதான். வரும்போதே ஒரு மொழிபெயர்ப்பாளரையும் தங்களுடன் அழைத்து வந்துவிட்டனர். முதலில் சிங்கப்பூரிலிருந்த நமது ஈஷா ஆசிரியரிடம் இந்த தீட்சை நிகழ்ச்சிக்காக ஆரம்பப்படிகளைக் கற்றுக் கொண்டு பிறகு மொழிபெயர்ப்பின் உதவியுடன் தீட்சையைப் பெற்றுக் கொண்டனர். கடந்த ஒரு வருட காலமாகவே அவர்கள் இணையதளம் மூலம் ஈஷாவின் செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்து வந்திருக்கின்றனர். அவர்களது தேடல், நிகழ்ச்சியில் தீவிரமாகப் பங்கேற்றது, பெற்ற அனுபவத்திலிருந்து வெளிப்பட்ட அவர்களது உற்சாகம் இவையெல்லாம் உண்மையிலேயே என்னை நெகிழச் செய்துவிட்டன. அவர்களுக்கு என்னுடன் ‘வார்த்தைகளுக்கும் அப்பாற்பட்ட’ ஒரு தொடர்பு இருந்தது.

திங்களும், செவ்வாயும் சிறிது ஓய்வு, கொஞ்சம் கோல்ப் (Golf) என்று கழிந்தது. சிங்கப்பூரில் மொத்தம் இருபத்தி நான்கு கோல்ப் மைதானங்கள் இருக்கின்றன. அதில் ஐலேண்ட் கோல்ப் மைதானம் மிக அழகான ஒன்று. மழைச் சாரலும், குளிர் தென்றலுமாக பருவ நிலை மிக அற்புதமாக, கோல்ப் விளையாட சொர்க்கமாக இருந்தது.

சிங்கப்பூர் மிக அசாதாரணமான ஒரு நாடு. எந்த பெரிய இயற்கை வளங்களும் இல்லை. ஆனாலும், புத்திசாலித்தனமான, ஒழுக்கம்மிக்க நடைமுறைகள் அந்நாட்டை மிகப் பெரிய உயரத்துக்குக் கொண்டு சென்றுள்ளன. செய்யும் எந்தப் பணியிலும் நீங்கள் அங்கே மனநிறைவை அடைய முடியும். 700 கி.மீ.க்கு சற்றே அதிகமான நிலப்பரப்பில், 45 லட்சம் மக்கள் தொகையுடன், பல்லாயிரம் கோடி பொருளாதார வளத்துடன் இருக்கும் இந்நாட்டில் தனிநபர் வருமானம் 60,000 சிங்கப்பூர் டாலராக இருக்கிறது. இந்நாட்டின் வெற்றிக் கதைக்கு ஈடு இணையே கிடையாது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மிகவும் அக்கறையுள்ள இந்நாட்டில், அதற்காக மிகவும் கடுமையான சட்டதிட்டங்கள் உள்ளன. இந்தியா இந்த சிறிய நாட்டிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு வெறும் பாடங்கள் மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.

இங்கு லிங்கபைரவி பிரதிஷ்டையும் செய்தோம். இங்கிருக்கும் சிலருக்கு நம்பமுடியாத அற்புதங்களை தேவி நிகழ்த்தி வருகிறாள். வரும் வருடங்களில் இந்தத் தீவை இன்னும் பல வழிகளில் அவள் ஆட்கொள்வாள். ஒரு பாகிஸ்தானியர் அளித்த இரவு விருந்தில் பல சுவாரஸ்யமான மனிதர்களை சந்திக்க முடிந்தது.

கோவையிலிருந்து வெறும் நான்கரை மணி நேர விமானப் பயண தூரத்தில் இருக்கிறது சிங்கப்பூர். அற்புதமான மக்களோடு இங்கு அழகான கோல்ப் மைதானங்களும் நிரம்பியுள்ளன. உங்கள் பணிச் சுமையிலிருந்து சிறிது காலம் தப்பித்துச் செல்ல இந்தத் தீவு பிரமாதமான இடம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, எங்கு சென்றாலும் தமிழ் மக்களைப் பார்க்க முடிந்தது. என்னை அடையாளம் கண்டுகொண்டு, தொடர்ந்து என்னை ‘கிளிக்’ செய்துத் தள்ளினார்கள். நான் சென்னைக்கு விமானம் ஏறியபோது, விமானம் கிளம்புவதற்கு முன்னால், விமானத்திலிருந்த பாதிக்கும் மேற்பட்ட பயணிகள் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பினார்கள். தமிழ் மக்கள் என் மேல் கொண்டிருக்கும் இந்த நெருக்கமான உணர்வு, இந்த அன்யோன்யம் என்னை நெகிழவடையச் செய்கிறது…

அன்பும் அருளும்,

Sadhguru

 
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert