சங்கரன்பிள்ளையின் மறதி எந்த அளவிற்கு உள்ளதென்று இந்தக் குட்டிக் கதையில் படித்து மகிழுங்கள்...

சத்குரு:

எதுக்காக முடிச்சுப் போட்டேன்...?

உங்கள் மனம் நிலையில்லாமல் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனால், உடலின் வேகம் குறைந்துவிடுகிறது. இப்படித்தான் சங்கரன்பிள்ளையின் வாழ்க்கையில் ஒரு வேடிக்கை நடந்தது.

‘ஒரு வேலையை, மாலையில் வீட்டுக்குப் போனதும் மறக்காமல் செய்ய வேண்டும்’ என்று கைக்குட்டையில் முடிச்சு போட்டுக்கொண்டார்.

ஆனால், வீட்டுக்குப் போனதும் எதற்காக அந்த முடிச்சைப் போட்டோம் என்பது அவருக்குச் சுத்தமாக மறந்துவிட்டது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

படபடப்பானார். மூளையை கசக்கினார். மொட்டைமாடியில் உலாத்தினார். நெற்றியில் தட்டிக்கொண்டார். நோட்டில் என்னென்னவோ கிறுக்கினார். ஊஹூம்... நினைவுக்கு வரவே இல்லை.

“பேசாமல் படுத்துத் தூங்குங்கள். எதுவாயிருந்தாலும் நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்,” என்று மனைவி அறிவுரை சொன்னார்.

“மாட்டேன். எதோ முக்கியமான விஷயமாயிருக்கும். அதைக் கண்டுபிடிக்காமல் எப்படித் தூங்குவது?” என்று படுக்கையில் உட்கார்ந்தே இருந்தார்.

இதுவா..... அதுவா என மண்டைக்குள் நூறாயிரம் யோசனைகள் பூச்சிகள்போல் பறந்தன. கடைசியில் இரவு 2 மணிக்குச் சலித்துப்போய் கைக்குட்டையைத் தூர எறிந்தார். சடக்கென்று ஞாபகம் வந்தது.

“இன்றைக்கு ஒன்பது மணிக்கே தூங்கப்போக வேண்டும்” என்று நினைவுப்படுத்திக்கொள்ளப் போடப்பட்ட முடிச்சு அது!

படபடப்பாக மூளையை இயங்கவிட்டால், சங்கரன்பிள்ளைக்கு நேர்ந்ததுதான் உங்களுக்கும் நேரும்.

சங்கரன்பிள்ளை பையனுக்கு பன்றிக் காய்ச்சல்!

சங்கரன் பிள்ளை பையனுக்கு பன்றிக் காய்ச்சல்!, Sankaranpillai paiyanukku panri kaichal
ஒரு முறை சங்கரன்பிள்ளையின் மகனுக்கு கடுமையான காய்ச்சல். டாக்டர் வந்தார். “இது தொற்றுநோய் கிருமியால் வந்திருக்கும் காய்ச்சல். ஏற்கனவே, இதை எவ்வளவு பேருக்கு உங்கள் மகன் பரப்பினானோ? இனி உடம்பு சரியாகும்வரை பள்ளிக்குப் போக வேண்டாம்” என்று எச்சரித்தார்.

சிகிச்சை சில நாட்கள் தொடர்ந்தது. மகன் ஒருவழியாகக் காய்ச்சல் குறைந்து குணமானான். டாக்டர் பில்லை நீட்டினார். தொகையைப் பார்த்து சங்கரன்பிள்ளை சண்டைக்குப் போய்விட்டார்.

டாக்டர் விளக்கம் கொடுத்தார். “ஒன்பது முறை, உங்கள் வீட்டுக்கே வந்து ஊசி போட்டிருக்கேன். அதுவும் விலையுயர்ந்த மருந்து!”

சங்கரன்பிள்ளை கொதித்தார்.

“விளையாடுகிறீர்களா? என் மகன் ஊரெல்லாம் காய்ச்சலைப் பரப்பியதால் தானே உங்கள் பிசினெஸ் படுஜோராகப் போய்க் கொண்டிருக்கிறது. என்னிடம் எப்படி பணம் கேட்பீர்கள்?
நியாயமாக நீங்கள் அல்லவா எனக்குப் பணம் தரவேண்டும்?”