Question: போதியஅளவு தேர்ச்சியில்லாத ஒருவரிடமிருந்து யோகாவைக் கற்றுக் கொள்வதால் விளைவுகள் ஏற்படுமா? அப்படியென்றால், எது சரியான யோகா?

சத்குரு:

உங்களிடம் ஒரு கார் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஏதோ ஒரு பிரச்சனை என்பதால் அதிலிருந்து என்ஜினைக் கழற்றி ஏதோ செய்து திருப்பி அதிலே பொருத்திவிடுகிறீர்கள். தினமும் அதேபோல காரிலிருந்து என்ஜினைக் கழற்றி அதிலிருந்து ஏதோ ஒரு பகுதியை வெளியே எடுத்துவிட்டு பொருத்திக் கொண்டே இருந்தால் நாளடைவில் அந்த என்ஜினில் எதுவுமே இருக்காது. வெறும் உலோகக்குவியல் மட்டும்தான் இருக்கும். இது உங்களுக்கும் நடக்க முடியும். அதேவிதமாக இல்லாவிட்டாலும் சரியான முறையில் நீங்கள் யோகப் பயிற்சிகளை மேற்கொள்ளாவிட்டால் பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

நீங்கள் அப்படிக் கற்றுக்கொள்வதை மிகவும் முக்கியமாகக் கருதினால் ஆபத்து நேர்ந்திட வாய்ப்பிருக்கிறது. ஆனால் பொதுவாக மக்கள் அவற்றை அவ்வளவு முக்கியமானதாக கருதுவதில்லை. அதைப் பற்றி பேச மட்டும்தான் செய்கிறார்களே தவிர, பயிற்சிகளை மேற்கொள்வதில்லை. அப்படியிருந்தால் பரவாயில்லை. ஆனால் அவர்கள் பயிற்சிகளை மிகவும் தீவிரமாக தொடங்கிவிட்டால், ஒரு முறையில்லாத யோகப்பயிற்சியால் பலவிதமான பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அதேநேரத்தில் அதில் அவர்கள் சில பலன்களையும் பார்க்கிறார்கள். இன்று யோகப் பயிற்சியைத் தொடங்கும்போது, அவர்களுடைய தலைவலி போய்விடும் வாய்ப்பிருக்கிறது. தலைவலி போய்விட்டதே அத்தோடு விட்டுவிட்டால் பரவாயில்லை, ஆனால் பயிற்சியைத் தொடர்ந்து செய்வதாக இருந்தால், முறையான யோகப் பயிற்சியாக இல்லாவிட்டால் பலவிதமான பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

சரியான யோகா என்றால் என்ன?

யோகா என்பது ஒரு தன்னிலை சார்ந்த பரிமாணம். இதை வெளிநிலை சார்ந்து கற்றுக் கொள்ளவும் முடியாது, வெளிநிலையைச் சார்ந்து கற்றுத் தரவும் முடியாது. எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு இதை வெளிநிலை சார்ந்து நாம் கற்றுத் தருகிறோம். ஆனால் இன்னமும் அது தன்னிலை சார்ந்த பரிமாணம்தான்.

ஈஷா யோகாவில் கற்றுத் தரப்படுவதைப்போல அதேவிதமான பயிற்சிகளை உலகெங்கிலும் நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது. மக்கள் அதேவிதமான பயிற்சிகளைத்தான் செய்கிறார்கள். இருந்தாலும் இவர்களுடைய அனுபவம் எப்படிப்பட்டது என்பதைப் பாருங்கள். அதேவிதமான பயிற்சிகளைக் கொண்டு சக்திநிலைகளில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஏனென்றால் இங்கே தன்னிலை சார்ந்த பரிமாணம் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தன்னிலை சார்ந்த பரிமாணம் திறக்கப்படவேண்டுமானால், சக்தி சலனக் கிரியா பயிற்சியை மேற்கொள்பவர், தன்னை அதில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். தன்னை முழுமையாக அதில் ஈடுபடுத்தும்போது அவருடைய எல்லாத் தன்மைகளையும் மற்றவர்களுக்கு வழங்கிட முடியும். ஆனால் அது தேவையில்லாத விஷயம். யாருக்கும் அவருடைய தன்மைகளை மற்றவர்கள் மீது பதியச் செய்யும் உரிமை இல்லை. அவர் எப்படிப்பட்ட நல்லவராக அவரைப்பற்றி நினைத்துக் கொண்டாலும் சரி அவருக்கு அது தேவையில்லாத விஷயம்.

யோகா என்பது சுய மருத்துவ முறையில்லை...

எனவே தனது சக்திகளின் மீது போதுமான ஆளுமை இல்லையென்றால் பொதுவாக தன்னிலை சார்ந்த பரிமாணம் இல்லை என்றே கருதப்படுகிறது. நீங்கள் வெறுமனே உடல்ரீதியான நலவாழ்வை மட்டும் தேடிக் கொண்டிருந்தால் அதற்கு எளிமையான சில ஆசனங்கள் நிச்சயமாக உதவும். அதனால் பலன் இருக்காது என்று சொல்லவில்லை. பலன் இருக்கும். ஆனால் யோகப்பயிற்சிகள் மருத்துவ நிவாரணத்திற்காக உருவாக்கப்படவில்லை. யோகப்பயிற்சிகள் உங்கள் வாழ்க்கையின் அடிப்படைத் தன்மையிலும், நீங்கள் யார் என்பதன் அடிப்படையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர உங்கள் சக்திநிலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தவே உருவாக்கப்பட்டன.

எனவே உங்கள் வாழ்வின் ஒரு அம்சம் மாற்றமடைந்தால் உடனடியாக அடுத்த அம்சத்தை உங்களுக்கு வழங்குவதற்கு யாரேனும் அங்கே தயாராக இருப்பார். உங்களுக்கு இதன் அடிப்படையைக் கற்றுத்தருபவர் கூட அடுத்த அம்சம் என்ன என்பதைப்பற்றி தெரியாமல் இருக்கலாம். அதுவும் கூட ஒரு பிரச்சனையாக மாற முடியும்.

அப்படியானால் யோகப்பயிற்சியை யாருமே செய்யக்கூடாது என்று நாம் சொல்லலாமா? இல்லை, யோகா ஆபத்தானதல்ல. நீங்கள் அதை முட்டாள்தனமாகக் கையாண்டால் அது ஆபத்தானது. நீங்கள் எதை முட்டாள்தனமாகக் கையாண்டாலும் அது ஆபத்தானதுதான். நீங்கள் ஒரு வண்டியை முட்டாள்தனமாக ஓட்டிக் கொண்டிருந்தாலும் அது ஆபத்தை விளைவிக்கும்.

அதே போல உள்நிலைப் பரிமாணத்திற்கு, முற்றிலும் மாறுபட்ட பரிமாணத்திற்கு உங்களை எடுத்துச் செல்லும் யோகா என்ற இந்த வாகனத்தை தவறாக உபயோகப்படுத்தினாலும் அது உங்களுக்கு தீங்கினை ஏற்படுத்தும். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சமனற்ற நிலையை ஏற்படுத்தும்.

எனவே, ஒருவர் தன்னிலை சார்ந்த பரிமாணத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால் இந்தக் குறிப்பிட்ட காலத்திற்காவது மிகவும் உறுதியான ஒரு சூழலில் இருந்து அதைக் கற்றுக் கொள்ளவேண்டியிருக்கிறது. உறுதியற்ற ஒரு சூழலில் நீங்கள் யோகாவைக் கற்றுத்தரவும் முடியாது, கற்றுக் கொள்ளவும் கூடாது.