சத்குருவுடன் சேகர் கபூர் - பகுதி 18

நாம் ஒரு கோவிலைக் கட்டிக்கொண்டிருக்கலாம். ஆனால் அந்தச் செயலை மன அழுத்தத்தோடு செய்வதால் என்ன பயன் வந்துவிடப்போகிறது?? என்ன செய்கிறோம் என்பது முக்கியமா? எப்படிச் செய்கிறோம் என்பது முக்கியமா? சத்குரு என்ன சொல்கிறார்...? தொடர்ந்து படியுங்கள்!

சேகர்: நீங்கள் இதுவரை இறந்த பின் என்ன நடக்கிறது என்று விளக்கிய விதம் மிகவும் எளிமையாக இருந்தது. ஆனால் உண்மையில் அது மிகவும் சிக்கல் நிறைந்தது என நினைக்கிறேன்.

சத்குரு: ஆம். உங்களுக்காக எளிமைப்படுத்திக் கூறினேன்.

சேகர்: சரி.

ஒருவருக்கு ஒரு வேலை மனஅழுத்தத்தைக் கொடுக்கிறது. அதே வேலையை இன்னொருவர் சுலபமாக செய்துவிடுகிறார். எனவே மனஅழுத்தம் வேலையிலிருந்து வருவதில்லை. அது உங்களை நீங்கள் நிர்வகிக்கத் தெரியாததால் வருகிறது.

சத்குரு: இந்தப் பிரபஞ்சம் ஒருமையின் அடிப்படையில்தான் இருக்கிறது. ஆனால் இப்போது நமது உரையாடல் கேள்வி, பதில் என்று இருமையின் அடிப்படையில் இருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை. ஆனால் அப்படி இரண்டு விதமாக இல்லையென்றால் பிறகு கேள்விபதில் என்பதே கிடையாது. கால்பந்து விளையாட்டு என்பது கிடையாது. திருமணம் என்பது கிடையாது. ஒன்றும் இருக்காது, சரியா? எனவே இந்த பிரபஞ்சத்தின் ஒருமைதான் எப்போதும் அடிப்படை. ஆனால் விளையாட்டு என்பது எப்போதும் இருமைதான். இருமை எப்போதும் தவறில்லை, இது விளையாட்டு மட்டுமே என்று நீங்கள் அறிந்திருக்கும் வரை.

சேகர்: நான் ஒரு படத்தில் பிரபஞ்சம் என்று ஒரு பாத்திரத்தை உருவாக்கினால் அந்த பாத்திரம் இப்படித்தான் பேசும் என்று நினைக்கிறேன், "நான் ஒன்றுதான், ஆனால் நான் விளையாடுவதாக இருந்தால் இரண்டாக மாற வேண்டும், அடிப்படையாக பார்த்தால் நான் ஒன்றுதான்"

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு: ஆமாம்.

சேகர்: கடைசியாக ஒரு கேள்வி. மன அழுத்தம் பற்றியும் சொல்லிவிடுங்களேன். ஏனெனில் அதைப் பற்றி சத்குருவிடம் ஏன் கேட்கவில்லை என்று மக்கள் என்னைக் குடைந்து விடுவார்கள்.

சத்குரு: நான் முதலில் அமெரிக்காவிற்கு சென்றபோது, ஒவ்வொருவரும் மன அழுத்தம் பற்றியே பேசிக் கெண்டிருந்தார்கள். எனக்கு முதலில் புரியவில்லை. அப்புறம்தான் புரிந்தது, அங்குள்ள மக்கள் மன அழுத்தம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதாக ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்று. மன அழுத்தம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி அல்ல. அது உங்கள் வேலையின் காரணமாக வருவதல்ல. அது உங்களை நீங்கள் நிர்வகிக்கத் தெரியாததால் வருகிறது. நாட்டின் பிரதமரிலிருந்து அடிப்படை ஊழியர்வரை அனைவருமே மனஅழுத்தம் பற்றி பேசுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் வேலையில்லாமல் இருப்பவர்கள்கூட மனஅழுத்தம் குறித்து பேசுகிறார்கள்.

ஒருவருக்கு ஒரு வேலை மனஅழுத்தத்தைக் கொடுக்கிறது. அதே வேலையை இன்னொருவர் சுலபமாக செய்துவிடுகிறார். எனவே மனஅழுத்தம் வேலையிலிருந்து வருவதில்லை. அது உங்களை நீங்கள் நிர்வகிக்கத் தெரியாததால் வருகிறது.

சேகர்: சரியாகச் சொன்னீர்கள்.

எளிமையான செயல் செய்கிறீர்களா அல்லது மிகவும் கடினமான செயல் செய்கிறீர்களா என்பதைவிட செய்யும் வேலையை எப்படி செய்கிறீர்கள் என்பதுதான் உங்கள் வாழ்க்கைத் தன்மையை நிர்ணயிக்கிறது.

சத்குரு: அடிப்படையாக, வாழ்க்கையில் நாம் என்ன செயல் செய்கிறோம் என்பதைவிட, அந்த செயலை எப்படி செய்கிறோம் என்பதில்தான் நம் வாழ்க்கையின் தன்மை அமைகிறது.

ஒரு ஊரில் மூன்று பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த ஒரு வழிப்போக்கர் முதல் நபரிடம், "நீ இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். அந்த நபர் நிமிர்ந்து பார்த்து, "பார்த்தால் தெரியவில்லையா?, நான் கல் கொத்திக்கொண்டு இருக்கிறேன். உனக்கு என்ன கண் குருடா?" என்று கேட்டார்.

உடனே அந்த நபர் அடுத்தவரிடம் சென்று, "நீ இங்கே என்ன செய்துகொண்டு இருக்கிறாய்?" என்று கேட்டார். அவர் உடனே நிமிர்ந்து பார்த்து, "ஏதோ வயிற்றுப் பிழைப்பிற்காக செய்கிறேன். அவர்கள் என்ன செய்யச் சொல்கிறார்களோ அதைச் செய்வேன், அவ்வளவுதான்" என்று சொன்னார்.

அடுத்து அவர் மூன்றாவது நபரிடம் சென்று, "நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்," என்று கேட்டார். அதற்கு அந்த மூன்றாவது நபர் மிகவும் ஆனந்தமாக எழுந்து நின்று, "நான் இங்கே ஒரு அழகான கோவிலை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்" என்று சொன்னார். அவர்கள் எல்லோருமே ஒரே வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த ஒரே வேலையை மூன்று பேருமே மூன்று விதமாக உணர்கிறார்கள். அதற்கேற்றார் போல்தான் அவர்கள் வாழ்க்கையின் தன்மையும் அமைகிறது. எனவே எளிமையான செயல் செய்கிறீர்களா அல்லது மிகவும் கடினமான செயல் செய்கிறீர்களா என்பதைவிட செய்யும் வேலையை எப்படி செய்கிறீர்கள் என்பதுதான் உங்கள் வாழ்க்கைத் தன்மையை நிர்ணயிக்கிறது.

சேகர்: மிகவும் சரி! சத்குரு, இது ஒரு துவக்கம் மட்டுமே என்று நான் நினைக்கிறேன். இன்னமும் நிறைய கேள்விகளுடன் மீண்டும் வருவதற்கு நீங்கள் எனக்கு வாய்ப்பளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

சத்குரு: (சிரிக்கிறார்) நிச்சயமாக.

சேகர்: நன்றி. மிக்க நன்றி.


அடுத்த வாரம்...

ஆசிரமத்தில், நேரடியாக சேகர்கபூர் சத்குருவுடன் நிகழ்த்திய உரையாடல் தொடர் இந்த வாரத்துடன் நிறைவடைகிறது. அடுத்து வரும் வாரங்களில், இணையதளத்தில் சத்குருவுடன் சேகர் கபூர் ஆற்றிய உரையாடலின் தொடர்ச்சி இடம்பெற உள்ளது. இந்த உரையாடல் நிகழ்ச்சியில் பொதுமக்களும் பங்கேற்று கேள்வி கேட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.