மாயையிலிருந்து விடுபட்டு ஞானத்தை நோக்கி செல்வதே ஆன்மீகம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் எது மாயை? எது ஞானம்? என்பது முதலில் தெரிந்தால்தானே ஞானத்தை நோக்கி செல்வது சாத்தியமாகும்! ஆம்! இங்கே சத்குருவின் உரை மாயையையும் ஞானத்தையும் அறுதியிட்டு காட்டுகிறது!

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மாயை என்றால் என்ன?

முதலில் மாயை என்றால் என்ன என்று பார்ப்போம். நீங்கள் திரைப்படம் காணச் செல்கிறீர்கள். இருக்கையில் அமர்ந்தவுடன் விளக்குகள் அணைக்கப்படுகின்றன. ஏனெனில் விளக்கு அணைக்காமல் படம் திரையிட்டால் படம் பார்க்கும் உணர்வே வராது. திரையில் உண்மையில் மனிதர் எவரும் வரவில்லை. வெறும் வெளிச்சமும், சப்தமும் மட்டும் ஓடுகிறது. அதில் ரஜினிகாந்தோ வேறு யாரோ ஒருவர், அவரைப் பார்த்து, அவரையே பார்த்துப் பார்த்து உங்களுக்கு அவர் மீதே மிகவும் விருப்பமுண்டாகிவிட்டது. அதன் பிறகு வீட்டில் இருப்பவர்களைப் பிடிக்கவில்லை. பக்கத்து வீட்டில் இருப்பவர்களைப் பிடிக்கவில்லை. ஊரில் உள்ள மற்றவர்களையும் பிடிக்கவில்லை. திரையில் வெறுமனே வெளிச்சம் மட்டும் இப்படி, அப்படி ஆடுகிறது. ஏதோ சப்தம் வருகிறது. அவரையே உங்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. இது மாயை.

ஞானம் என்பது இல்லையென்றால் வாழ்க்கை முழுவதும் நமக்கு மாயைதான்.

அந்த ஆளின் உருவத்தை நேரடியாகப் பார்க்காமலேயே அவரை மிகவும் பிடித்து விட்டால் மாயைதானே இது? திரையில் முப்பரிமாணங்கள் கூட இல்லாமல் வெறும் வெளிச்சமாகவும், சப்தமாகவும் மட்டுமே கண்டு உணர்ந்த ஒருவர் மீது இவ்வளவு அன்பு. அவரின் மீது உயிரே வைத்திருக்க உங்களுக்கு முடிகிறது. அங்கே இல்லாத ஒரு ஆளின் மீது மிகுந்த அன்பு கொண்டு அவரைப் பார்த்து அழுவதும், அவரைப் பார்த்து சிரிப்பதுமாக எல்லாமே நடக்கிறது. அந்தத் திரையில் வெளிச்சம் மட்டும்தான் உள்ளது. திரையில் கை வைத்துப் பார்த்தால் நம்முடைய கைதான் தெரிகிறது. மின்சாரம் நின்று போனால் அந்த ஆளும் அவ்வளவுதான். அவ்வளவுதானே? அப்படிப்பட்ட ஆளைப் பார்த்து நமக்கு எவ்வளவோ அன்பும், வேகமும் வந்து விட்டது. இப்படி இரண்டு பரிமாணத்தில் நடக்கின்ற ஆள் மீதான அன்புதான் மாயை என்பது.

ஞானம் என்றால் என்ன?

நீங்கள் மூன்று பரிமாணத்தில் நடக்கிறீர்கள். நீங்கள் வெறும் மண்தான். இந்த மண் நடக்கிறது. இந்த மண் குவியலின் உச்சியில் ஒரு சிறிய கணிணி வைக்கப்பட்டுள்ளது. இதிலும் மண் சேர்ந்திருக்கின்றது. இந்த மண் குவியல்தான் இப்போது நாடகம் ஆடுகிறது. இதுவும் மாயைதான். இப்பொழுது இதற்கெல்லாமே அடிப்படையானது என்னவோ, அதனுடன் நமக்குத் தொடர்பு வந்து விட்டதென்றால் இது ஞானம். உள்ளே ஒரு ஆள்பவன் இருந்து கொண்டு இந்த மண்ணை சேர்த்து வைத்து விளையாடுகின்றான். அவன் கூட ஒரு தொடர்பு வந்து விட்டால் இப்போது ஞானம்.

மண்ணைப் பார்த்தே ஆள் என்று நினைத்து விட்டால் மாயைதானே? உள்ளேயே ஆள் இருக்கிறானே அவன் கூட தொடர்பு ஏற்படும்போதுதான் அதை ஞானம் என்று கூற முடியும். இந்த ஞானம் வரவேண்டுமென்றால் இதைப் பல விதங்களில் நாம் கொண்டு வர முடியும். மாரியம்மன் கோவிலில் குதித்துக் கொள்ள முடியும். ஆனால் அந்தக் குறுகிய நேரத்திற்கு மட்டும்தான் தொடர்பில் இருக்க முடியும். அதற்குப் பிறகு ஏதும் புரியாமல் போய்விடுகிறது. இப்படி இல்லாமல் நாம் அந்தத் தொடர்பினை முறைப்படியான ஒரு தொழில் நுட்பமாகக் கொண்டு வந்தால் நம் வாழ்க்கையில் 24 மணி நேரமும் அவனிடம் தொடர்பிலிருப்பது போன்று செய்து கொள்ள முடியும்.

மாயை என்பது என் உருவாக்கம் என்பது புரிந்து விட்டால் அதற்குப் பெயர் ஞானம்.

ஞானம் என்பது இல்லையென்றால் வாழ்க்கை முழுவதும் நமக்கு மாயைதான். மாயையிலேயே வாழ்க்கை நடந்து முடிந்து போகும். மாயை என்றால் நமக்கு வாழ்க்கையே புரியவில்லை என்றுதான் பொருள். மாயை என்றாலே ஏமாற்றம்தான். பிரமைதான். பிரமை என்றால் இல்லாததை இருப்பது போல நினைத்துக் கொள்ளும் தன்மை. எது இல்லையோ அது இருக்கின்றது போன்ற நினைவில் இருப்பதுதான் பிரமை. அதுதான் மாயை. இப்படி வாழ்க்கை முழுவதும் ஏமாற்றத்திலேயே நடந்து விடலாமா? மற்றவர்களை ஏமாற்ற நினைத்தால் அது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது. ஆனால் நீங்கள் உங்களையே ஏமாற்றிக் கொண்டு இருந்தால் அதற்கு என்ன அர்த்தம்? அதுதான் மாயை.

ஆனால் மாயை என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. திரைப்படங்களில் வருபவர்கள் வாழ்க்கையில் உண்மையாக இருப்பவர்களை விட உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஏனென்றால் அதுதான் மாயையின் சக்தி. மாயையின் சக்தியைத் தாண்டிப் போக வேண்டுமென்றால் ஒரு மனிதனுக்கு அவனுக்குள்ளே சிறிதேனும் ஆர்வம், முறையான நோக்கம், ஒரு தீவிரம் வேண்டும். அது இல்லாமல் அந்த மாயை என்கிற எல்லையை அவன் தாண்ட முடியாது. அதிலேயே வாழ்க்கை முடிந்து போய்விடும்.

இப்போது நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இப்படிப் பார்க்க வேண்டும். ஏதோ ஒருநாள் இறந்துவிடப் போகிறீர்கள் இல்லையா? இப்போது அடுத்த க்ஷணம் இறக்கப் போகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இது வரைக்கும் நடந்ததெல்லாமே பாருங்கள். எல்லாமே மாயை என்று அப்போதுதான் தெரிகிறது.

ஒருநாள் ஒரு பெண்மணிக்கு தூக்கத்தில் கனவு வந்தது. அந்தக் கனவில் ஆஜானுபாகுவான ஆள் ஒருவன் அப்படியே அந்த அம்மாவைத் தீவிரமாகப் பார்த்தவாறே நெருங்கி நெருங்கி வந்து விட்டான். அந்தப் பெண்மணி நடுங்கும் குரலில், "என்னை என்ன செய்யப் போகிறாய்?" என்று கேட்டார். அதற்கு அவன் "இது உன் கனவுதானே, நீதானே தீர்மானிக்க வேண்டும்?" என்றான். எனவே மாயை என்பது நீங்கள் உருவாக்கிக் கொள்வது. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். மாயை என்பது என் உருவாக்கம் என்பது புரிந்து விட்டால் அதற்குப் பெயர் ஞானம். அது புரியாமல் அதுவே உண்மை என்று நினைத்தால் அது அஞ்ஞானம் அல்லது மாயை.