எதிரணி இல்லாமல் கிரிக்கெட் !

எதிரணி இல்லாமல் கிரிக்கெட் !

குழந்தைகளாக இருந்தபோது வெறும் கொண்டாட்டத்திற்காக மட்டுமே விளையாடினோம். மெல்ல மெல்ல விளையாட்டும் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வாய்ப்பாக மாறிவருகிறது. உதாரணத்திற்கு கிரிக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள். வேலை செய்து சம்பாதிப்பது போல விளையாடியும் சம்பாதிக்க முடிகிறது. எனவே விளையாட்டும் ஒரு வேலை என்று ஆகிவிட்டது. இந்த நிலையில், கோப்பையை வெல்லும் ஆர்வம் அவர்களுக்குள் ஊடுருவும்போது, அவர்கள் விளையாட்டை மறந்து விடுகிறார்கள். உண்மையில், விளையாடுவதே ஆனந்தம் என்று விளையாட்டு வீரர்கள் உணரும்போதுதான், அவர்களால் தங்கள் திறமையை திறம்பட வெளிப்படுத்த முடியும்.

இந்தியாவிற்காக விளையாடுவது என்பது 100 கோடிப்பேர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது. அது அவ்வளவு எளிதல்ல. எதிர்பார்ப்புகளை ஈடுசெய்வதற்காக வீரர்கள் விளையாடத் துவங்கும்போது, அவர்களது மனங்கள் அழுத்தத்திற்கு ஆளாகின்றன. அவர்களின் உடல் செயல்பாடும் ஒரு எல்லைக்குள்யேயே இருக்கின்றன.

ஒரு மனிதன் உண்மையிலேயே மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருக்கும்போதுதான் உடல்சார்ந்த செயலை அபாரமாக நிகழ்த்த முடியும். விளையாட்டிற்கான யோகாவின் முக்கிய அம்சம் இதுதான். சரியான யோகப்பயிற்சி மூலம், தங்கள் உடல் மற்றும் மனம் மீது போதிய அளவு கட்டுப்பாட்டை அவர்களால் கொண்டுவர முடியுமேயானால், சிந்தனைகள் இல்லாமல் இயல்பாக விளையாட கற்றுக் கொள்ள முடியும்.

ஒருவர் முன்கூட்டியே சிந்திக்காமல் உடல்சார்ந்து செயல்படுகிறபோது, அந்தக் கணத்திற்கேற்ப, சூழ்நிலையின் தேவைக்கேற்ப விளையாடுகிறபோது, அது மிக நன்றாக அமைந்துவிடும். விளையாட்டின் தேவைக்கேற்ப, செயல், பிரவாகம் எடுக்கும். இந்த வகையில் எதிரணியின் சவாலை அவர்களால் வலிமையோடு எதிர்கொள்ள முடியும்.

தியானம் என்றால் ஒருவர் தன்னுடைய இயல்புக்குத் திரும்புவது என்று பொருள். ஒருவர் தியானத்தில் இருக்கும்போது, அவருடைய – தான் யார், தான் எப்படிப்பட்டவர் போன்ற – மற்ற அடையாளங்கள் கரைந்து போகின்றன. ஒரு சேம்பியன் தியானம் செய்வது மிகவும் கடினம். தான் சேம்பியன் என்ற அடையாளத்துடன் ஒருவர் தியானம் செய்வது மிகவும் கடினம். அதேபோல ஒரு விளையாட்டு வீரரும், தன் அடையாளங்களை மனதில் வைத்து விளையாடும்போது இயல்பாக விளையாட முடியாது. அவர் தன் அத்தனை அடையாளங்களையும் உதிர்த்துவிட வேண்டும். ஒரு கிரிக்கெட் வீரர், தன் அடையாளங்களுக்கு ஏற்ப தன்னை கருதிக்கொள்கிற போது அவருக்கு அது ஒரு சுமையாகி விடுகிறது. தன் அடையாளத்தை 100% இழக்கிறபோது அவர் விளையாட வேண்டியதில்லை, விளையாட்டு தானாகவே நிகழ்கிறது.

ஒரு கிரிக்கெட் சாதனையாளர் எப்படி உருவாகிறார்? அவருக்குள் ஒருங்கிணைப்பு உச்சத்தில் இருக்கிறது. தன் வாழ்வில் என்ன வேண்டுமென்று அவருக்கு முழுமையாகத் தெரிகிறது. அந்த உணர்வோடு அவர் முழுமையாக இருப்பதால் அவர் விரும்புவது அவருக்கு உண்மையாகவே நடக்கிறது. கிரிக்கெட் வீரர்களால் தங்கள் சக்திநிலையை, உடலை, மனதை கூர்மையாகக் கையாள முடியுமானால் ஒவ்வொன்றும் அவர்களுக்கு சிறப்பாகவே நிகழும்.

கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு வீரர் தேர்ந்தெடுத்திருக்கிற ஒருவிதமான செயல். அவர் உடலளவில், மனதளவில், உணர்வு நிலையில், ஆன்மநிலையில் முழுவிழிப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியம். அப்படி இருந்தால் அவர் எந்த விளையாட்டை விளையாடினாலும் மிகச் சிறப்பாகவே செயல்படுவார். முட்டாள்கள் கிரிக்கெட் விளையாடும்போது, அது முட்டாள்கள் விளையாடக்கூடிய விளையாட்டாகத் தெரியும். புத்திசாலிகள் கிரிக்கெட் விளையாடும்போது, அது புத்திசாலிகளின் விளையாட்டாகத் தெரியும். யார் விளையாடுகிறார்களோ அதைப் பொறுத்தே அந்த விளையாட்டு அமைகிறது.

கிரிக்கெட்டைவிட அதை விளையாடுபவர்களின் தன்மை மிகவும் முக்கியம். தங்களுக்குள் முதலில் குறிப்பிட்ட ஒரு தன்மையைக் கொண்டு வராமல், தங்கள் விளையாட்டில் அவர்களால் அந்தத் தன்மையைக் கொண்டுவர முடியாது. அவர்கள் தங்களுக்குள் பணிவை உருவாக்கிக் கொள்ள முடிந்தால், கற்பனை செய்ய முடியாத உயரத்தில் அவர்களுடைய செயல்பாடுகள் இருக்கும். பணிவு என்றால் என்ன இருக்கிறதோ, அதை அப்படியே ஏற்பது. இந்த ஏற்கிற தன்மையின் மூலம், தங்கள் அறிவைப் பயன்படுத்தி அவர்களால் செயல்பட முடியும். ஒரு சூழ்நிலையை உள்வாங்கி, அந்த சூழ்நிலைக்கு வேண்டிய செயலை அறிவுப்பூர்வமாகச் செய்வதற்கு, ஏற்றுக் கொள்கிற இயல்பு இருப்பது மிகமிக முக்கியம்.

எனவே இன்னொரு அணியை ஏற்றுக் கொள்ளும்போது, எதிரணியின் நிறை குறைகளை ஏற்றுக் கொள்ளுதல் முழுமையாக இருக்கிறபோது, அங்கே எதிர்சாரார் என்று யாருமே இல்லை. எதிரணியை ஏற்றுக் கொள்கிறபோது அங்கே பதற்றம் இருப்பதில்லை. எதிரணியின் திறமைகளோ, அவர்கள் இது வரையிலும் செய்திருக்கிற சாதனைகளோ, உங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கப் போவதில்லை. அவர்களை முழுமையாக ஏற்றுக் கொள்வதின் மூலம் உங்கள் மனதுக்குள் அவர்களுடைய இருப்பே, நினைவே கரைந்து போயிருக்கும். இது ஒரு ஆன்மீகச் செயல்முறையும் கூட. ஏற்றுக் கொள்ளுதல் முழுமையாகிற போது இந்த முழுப்பிரபஞ்சமும் உங்களில் ஒரு பகுதியாக மாறுகிறது. இதுதான் இயற்கையின் வழி.
இதையும் வாசியுங்கள்

Tags

Type in below box in English and press Convert