இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்... பகுதி 10

இன்று ஈஷா பசுமைக் கரங்கள் தன்னார்வத் தொண்டர்களின் ஈடுபாட்டினால் தமிழகம் முழுவதும் முழுவீச்சில் பசுமைக் குடையை விரிவாக்கும் பணியை திறம்பட மேற்கொண்டு வருகிறது. ஆனால், முதன்முதலில் பசுமைக் கரங்கள் எங்கு, எப்படி பணியாற்றியது என்பதும், அதன் துவக்க கால முயற்சிகளும் உங்களில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை! இப்பதிவு ஈஷா பசுமைக் கரங்களின் துவக்க காலத்தை விவரிப்பதாக அமைகிறது!

ஆனந்த்,

ஈஷா பசுமைக் கரங்கள்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

2004ல் சுனாமி பாதிப்பு பகுதிகளில் சத்குருவின் வழிகாட்டுதலில் தன்னார்வத் தொண்டர்கள் சீரமைப்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்தி வந்தனர். குறிப்பாக சுனாமியால் பெரிதும் பாதிப்பிற்குள்ளான கடலூர் மாவட்டத்தில் ஈஷா தனது முழு ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கிக்கொண்டிருந்தது. அச்சமயத்தில் சத்குருவால் ஈஷா பசுமைக் கரங்களும் துவங்கப்பட்டது. மரங்கள் அதிகமாக உள்ள கடற்கரைப் பகுதிகளில் சுனாமியின் பாதிப்பு குறைவாக இருந்ததை அப்போது பார்க்க முடிந்தது. எனவே சத்குரு கடலூர் மாவட்டத்தில் ஈஷா பசுமைக் கரங்கள் மூலம் மரம் நடும் பணியை மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார். கடலோர பிரதேசங்களில் வளரக்கூடிய மர வகைகளை அறிந்து, அதன் விதைகளை சேகரித்து பதியம் போடத் துவங்கினோம்.

இதை அறிந்த சத்குரு, "அப்படியானால் அங்கே இன்னும் 25000 மரங்கள் நட்டுவிடுங்கள்!" என்றார்.

கடலூர் மாவட்டத்தில் பெரியகுப்பம் ஊரில் ஈஷா பசுமைக் கரங்கள் முதன்முதலாக மரம் நடும் பணியில் இறங்கியது. அங்கே சென்று உடனே மளமளவென்று யாரும் மரம் நட்டுவிடவில்லை. முதலில் அந்த ஊருக்குச் சென்று அந்த ஊர்ப்பெரியவர்கள் பஞ்சாயத்து தலைவர் என அனைவரையும் அழைத்து பேசினோம். "நாங்கள் உங்கள் ஊருக்கு மரம் நட வந்துள்ளோம்!" என்றதும் "தாராளமாக செய்யுங்கள்" என்றனர். ஆனால், நாங்கள் சில நிபந்தனைகளை விதித்தோம்.

நாங்கள் உங்கள் ஊரில் தங்கியிருந்து மரம் நடுகிறோம், ஆனால், எங்களுக்கு இருவேளை உணவும் தங்கும் இடமும் நீங்கள் வழங்க வேண்டும் என்றோம்; அவர்களும் சம்மதித்தனர். இதனால் அவர்களும் இந்த மரம் நடுதலுக்கான முயற்சியில் பங்கேற்க முடியும் என்ற நோக்கிலேயே அந்த நிபந்தனைகள் விதித்தோம். அப்போது ஈஷா இப்போதிருக்கும் அளவுக்கு மக்களிடத்தில் பரிட்சயப்படாத சமயம். அந்நேரத்தில் அவர்கள் எங்களை அனுமதித்து பெரிய விஷயமாக இருந்தது.

எங்களுக்கு தினமும் ஒரு வீட்டில் உணவு வழங்கப்படும். அந்த ஊர் மக்கள் எங்களுக்கென ஒரு வீட்டை வழங்கியிருந்தனர். அது முழுவதும் கட்டிமுடிக்கப்படாத வீடு; கதவுகள் ஏதும் கிடையாது. எங்களிடம் திருடப்படுவதற்கும் ஏதும் கிடையாது என்பதை அறிந்துதான் அந்த தங்குமிடம் வழங்கப்பட்டிருக்குமோ என நினைக்கும்போது வேடிக்கையாகத் தோன்றும்.

அந்த பெரியகுப்பம் ஊரில் எங்கெங்கு மரம் நடலாம் என ஒரு சர்வே மேற்கொண்டோம். அது கடலோர கிராமம் என்பதால் அங்கு பெரும்பாலும் மீன் உணவுகளே அதிகம் உட்கொள்ளப்பட்டது. காய்கறிகள் பழங்களை குழந்தைகள் சாப்பிடுவதென்பது அரிதாக இருந்தது. நாங்கள் அவர்களிடம் காய்கறி-பழங்கள் சாப்பிடுவதன் அவசியத்தை எடுத்துச்சொல்லியதோடு, அவர்கள் வாசலில் அல்லது கொல்லைப்புறத்தில் பழ மரங்கள் நடுவதன் மூலம் அவர்கள் அதன் பழங்களை பெறமுடியுமென எடுத்துரைத்தோம்.

அதன்பின்பு, மரம் நடுவதற்கென ஒரு நாளைக் குறித்து, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்தப் பணியில் நெய்வேலியிலிருந்து 200 ஈஷா வாலன்டியர்கள் எங்களுடன் கைகோர்த்தனர். அவர்கள் அனைவரும் வெள்ளை உடையணிந்து, தாம்பூலத் தட்டில் மலர்களோடு 2 மரக்கன்றுகளும் வைத்து, ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கினர். அன்று ஒரே நாளில் 5000 மரக்கன்றுகளை நட்டோம். இதை அறிந்த சத்குரு, "அப்படியானால் அங்கே இன்னும் 25000 மரங்கள் நட்டுவிடுங்கள்!" என்றார். அதன்பின் அங்கு தொடர்ந்து சுற்று வட்டாரங்களில் பணியாற்றி அதற்கான பணிகளை மேற்கொண்டோம். 2005ல் சுனாமி நினைவு நாளான டிசம்பர் 24ம் நாளில் 10000 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த நேரத்தில்தான் ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவது என்ற திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால் அது 8.5 லட்சம் மரக்கன்றுகளாக மாறி கின்னஸ் சாதனையான நிகழ்வை தொடர்ந்து சொல்கிறேன். காத்திருங்கள்!

இயற்கை இன்னும் பேசும்!

இத்தொடரின் பிற பதிவுகள்: இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்