நில்... கவனி... சாப்பிடு! - பகுதி 19

வெள்ளையாகத் தெரியும் எந்தவொரு பொருளும் உயர்ந்தது என்ற தவறான மனப்பான்மை நம்மிடையே உண்டு. அப்படித்தான் இந்த வெள்ளைச் சர்க்கரையும் நம்மை ஆட்கொண்டுள்ளது. இதனால் விளையும் கேடுகளைப் பற்றி சத்குருவே நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். மேலும் அவர், உணவு உண்ணும் முறை குறித்தும் அளவு குறித்தும் இப்பதிவில் நமக்கு தெளிவுபடுத்துகிறார்.

சத்குரு:

உணவு உண்ணும் முறை...

அதிக உணவால் வயிற்றை நீங்கள் அடைத்துக் கொள்கிறீர்கள் என்பதை விட அழித்துக் கொள்கிறீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆண்களை விட பெண்கள் குறைவாகத்தான் சாப்பிடுவார்கள். பெண்கள் எடுத்துக் கொள்ளும் உணவிலும் 40 சதவிகித உணவுதான் நான் எடுத்துக் கொள்கிறேன். ஆனால் நான் உங்களை விட அதிக சக்தியுடன் இருக்கிறேன், எப்படியென்று நினைக்கிறீர்களா? நீங்கள் ஒரு நாளில் 4, 5 வேளை சாப்பிடுகிறீர்கள். தேவையில்லாத போதெல்லாம் சாப்பிடுகிறீர்கள். இந்த உயிரே உணவால்தான் இயங்குகிறது, இல்லையா? நீங்கள் அதிகப்படியாக சாப்பிடும் உணவு உள்ளே போய் பேச ஆரம்பிக்கும். அது உங்களுக்கு எதிராக கெட்ட மொழியில் பேச ஆரம்பிக்கும். அதுதான் நோய். நோய் அப்படித்தான் துவங்குகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
எந்த உணவு உடலுக்குத் தேவைப்படுகிறதோ, சுகம் தருகிறதோ, அதைத்தான் நீங்கள் உண்ண வேண்டும்.

உணவு என்பது உடல் தொடர்பான விஷயம். எந்த உணவு உடலுக்குத் தேவைப்படுகிறதோ, சுகம் தருகிறதோ, அதைத்தான் நீங்கள் உண்ண வேண்டும். தற்போது உங்கள் உணவை மனம்தான் முடிவு செய்கிறது. மனதுக்கும் உணவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எதை உண்ண வேண்டும் என உடலைக் கவனித்து வழங்கக் கற்றுக்கொண்டால், தானாகவே நீங்கள் சரியான உணவை உட்கொள்வீர்கள்!

பழம், காய்கறி, இறைச்சி என எதுவாக இருந்தாலும், நீங்கள் இன்னொரு உயிரை உணவாக்கிக்கொண்டு இருக்கிறீர்கள். இந்த விழிப்புணர்வுடன் இருந்தால், நீங்கள் கண்மூடித்தனமாக சாப்பிடுவதை நிறுத்துவீர்கள். உங்களுக்குத் தேவையானதற்கு மேல், உண்ணமாட்டீர்கள். பூமியில் ஆழமான அன்போடும், நன்றியுணர்வோடும் வாழ்வீர்கள்!

அஸ்கா சர்க்கரை

நீங்கள் சாப்பிடும் அஸ்கா சர்க்கரை வெள்ளை நிறத்தில் வருவதற்காக சில ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த ரசாயனங்களின் எச்சங்கள் சர்க்கரையிலேயே கலந்து வருகின்றன. நீங்கள் சர்க்கரையை அதிகம் பயன்படுத்தும்போது அந்த ரசாயனங்கள் உங்கள் க்ரோமோசோம் அமைப்பைப் பாதிக்கின்றன.

க்ரோமோசோம் என்றால், ஒரு ப்ளு சிப் (blue chip) போல என்று சொல்லலாம். உங்கள் நிறம் உங்கள் தாயாரைப் போல் இருக்க வேண்டும், உங்கள் மூக்கு உங்கள் தந்தையின் மூக்கைப் போல இருக்க வேண்டும், உங்கள் கண்கள் உங்கள் தாத்தாவின் கண்கள் போல இருக்க வேண்டும் போன்ற பல தகவல்களும் இந்த க்ரோமோசோம்களில் பதிந்திருக்கின்றன.

நாம் இன்னமும் அதைப்பற்றி முழுமையாக அறியவில்லை. இத்தகைய குரோமோசோம்கள் பாதிக்கப்பட்டால், அதிலிருந்து மீள்வதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே, வெள்ளை சர்க்கரையை அதிகம் பயன்படுத்தும்போது, உங்களுடைய உடல்நலம் மட்டுமல்ல, உங்கள் சந்ததியினரின் உடல்நலமும் பாதிக்கப்படும்.

சர்க்கரைக்குப் பதிலாக நீங்கள் வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், இப்போது அதிலும் சூப்பர் பாஸ்பேட் கலந்து விடுகிறார்கள். வெல்லம் பளிச் என்று தெரிவதற்காக அப்படிச் செய்கிறார்கள். அந்த வெல்லத்தைப் பயன்படுத்துவதை விட அழுக்காகத் தெரியும் கருப்பட்டி மிகச்சிறந்தது!

உங்களுக்காக அற்புதமாகச் சமைத்து வழங்கப்படும் உணவு பரிமாறப்பட்டவுடன், முகத்தைச் சுளித்து, பழிப்பு காட்டினீர்கள் என்றால், அடுத்த வேளை உங்களுக்கு சமைக்க வேண்டுமா வேண்டாமா என்று சமைத்தவர்களுக்கு யோசனை வந்துவிடும். மாறாக, பரிமாறப்பட்டதை மகிழ்ச்சியுடனும், நன்றியோடும் ஏற்றுக்கொண்டால் எதிர்பார்ப்பதைவிட அதிகமாக மீண்டும் கிடைக்கும். வாழ்வின் ஒவ்வோர் அம்சமும் அப்படித்தான்!

(தொடர் முடிந்தது)


நில்... கவனி... சாப்பிடு! தொடரின் பிற பதிவுகள்