எந்தவகை யோகாவை செய்வது நல்லது?

enthavagai-yogavai-seivathu-nallathu

‘யோகா’ என்பது பழமையான விஞ்ஞானம். ஆனால் அதற்கு இத்தனை கிளைகள் ஏன்? உண்மையில் எந்தவகை யோகாவை செய்வது நல்லது? ஏதாவது ஒன்றை செய்தால் போதுமா? அல்லது எல்லா வகை யோகாவையும் கற்க வேண்டுமா? இதில் எதை முதலில் கற்க வேண்டும்…

கேள்வி
யோகப் பயிற்சிகள் செய்வதால் உள்நிலையில் ஒரு நல்ல மாற்றம் தெரிகிறது. ஆனால் யோகாவை அஷ்டாங்க யோகா, ஹடயோகா, ராஜயோகா என்று பலவிதமான பிரிவுகளாக பலரும் சொல்லித் தருகிறார்கள். மதங்கள் போலவே யோகாவிலும் இத்தகைய பிரிவுகள் இருக்கிறதா? இவை எல்லாம் ஒன்றே தானா, வெவ்வேறா? எனக்குக் குழப்பமாக இருக்கிறது…

சத்குரு:

யோகா – ஹதயோகா!

யோகா என்றால் ‘சங்கமம்’. உலகில் உள்ள எல்லாவற்றுடனும் உணர்வளவில் ஒன்றாக நீங்கள் உணர்ந்தால், அதுதான் யோகா. இந்த நிலையை நீங்கள் அடைய பலவழிகள் உண்டு. நீங்கள் சொல்லும் அனைத்துமே அதில் அடக்கம். இதில் ஹதயோகா என்பது உடலில் இருந்து ஆரம்பிப்பது. உடலுக்கென்று தனி கட்டுப்பாடுகளும், அகங்காரமும் உண்டு. மனதிற்கு மட்டும் தான் அகங்காரம் என்றெண்ண வேண்டாம். உடலுக்கென்றும் தனியாக அகங்காரம் இருக்கிறது. அதற்கென்று சில கட்டுப்பாடுகளும் உண்டு. அதற்குக் கட்டுப்பட்டுத் தான் இன்று நீங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

யோகாவின் முழு நோக்கமும் உங்களின் தற்போதைய உணர்வு நிலையில் இருந்து, இன்னும் உயர்வான நிலைகளுக்கு உங்களை வளரச் செய்வது தான். அதாவது, உங்களுக்குத் தெரிந்த ஒன்றிலிருந்து, தெரியாத ஒன்றை நோக்கி உங்களைக் வளரச் செய்வது.
உதாரணத்திற்கு நாளையிலிருந்து காலை 5 மணிக்கு எழுந்து கடற்கரையில் நடப்பேன் என்று அலாரம் வைக்கிறீர்கள். அலாரம் அடிக்கிறது. நீங்கள் எழ முயற்சிக்கிறீர்கள். ஆனால் உடல் என்ன சொல்கிறது? “பேசாமல் தூங்கு” என்றுதானே? இது நடக்கிறதா, இல்லையா? எனவே பயிற்சியை முதலில் உடலிலிருந்து துவங்குகிறோம். ஹதயோகப் பயிற்சிகள் உடலை தூய்மையாக்கி, அதை மேல்நிலை சக்திகளுக்குத் தயார் செய்கிறது. நாம் எல்லோரும் மனிதர்கள் தான். உயிரோடு தான் இருக்கிறோம். ஆனால் நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையை வெவ்வேறு அளவில், வெவ்வேறு தீவிரத்தில் உணர்கிறோம். இதற்குக் காரணம் நம் சக்திநிலைகள் வெவ்வேறு அளவிலான தீவிரத்தில் இருப்பது தான்.

சிலருக்கு நீண்டு வளர்ந்த மரம், கண்ணில் படுவது கூட இல்லை. சிலருக்கு அது ‘ஒரு மரம்’ என்ற அளவில் தெரிகிறது. சிலர் அதை இன்னும் கூர்ந்து கவனிக்கிறார்கள். ஒரு ஓவியருக்கு, அந்த மரத்தின் இலைகளில் தென்படும் வெவ்வேறு பச்சை வண்ணங்கள் மனதை மயக்குகிறது. இன்னும் வேறு சிலருக்கோ, மரம் என்பதை தாண்டி, அதில் பிரதிபலிக்கும் இறைத்தன்மை அவர்களை ஆட்கொள்கிறது. ஒரே விஷயத்தை ஒவ்வொருவரும் பார்க்கும்விதம் வித்தியாசமாக உள்ளது. இது ஏனெனில், வாழ்வை நீங்கள் உணரும் தீவிரம் வெவ்வேறு நிலைகளில் இருக்கிறது.

யோகாவின் நோக்கம்!

யோகாவின் முழு நோக்கமும் உங்களின் தற்போதைய உணர்வு நிலையில் இருந்து, இன்னும் உயர்வான நிலைகளுக்கு உங்களை வளரச் செய்வது தான். அதாவது, உங்களுக்குத் தெரிந்த ஒன்றிலிருந்து, தெரியாத ஒன்றை நோக்கி உங்களைக் வளரச் செய்வது. உங்களுக்குத் தெரியாத ஒன்றைப் பற்றிப் பேசினால் ஒன்று நம்புவீர்கள். அல்லது நம்பாமல் இருப்பீர்கள். எப்படியானாலும், அது உங்கள் வளர்ச்சிக்கு உதவாது. எனவே உங்களுக்குத் தெரிந்திருக்கும் உடலில் இருந்து ஆரம்பிப்போம். உடலிற்கு பயிற்சிகள் தந்து, அதை நன்னிலைக்குக் கொணர்ந்து, அடுத்து நீங்கள் அறிந்திருக்கும் மனதையும் சமன் செய்து, அதற்குப் பின், அதையும் தாண்டிய அடுத்த நிலைக்கு அழைத்துப் போவதுதான் யோகா. நாம் இருக்கும் நிலையிலிருந்து ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தால், நாம் செல்லவேண்டிய இடத்தை நிச்சயம் சென்றடைவோம்.

இப்போது எங்கேயிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து அடுத்த அடியை எடுத்து வைப்பதுதான் வளர்ச்சி. உங்களுக்குத் தெரியாததைப் பேசினால் வெறும் கற்பனைதான் வளரும். கற்பனைகள் கட்டுக்கடங்காது. தெளிவும் தராது. இன்று மதத்தின் பெயரால் இருப்பவை எல்லாம் கதைகள் மட்டும்தான். எது கற்பனை, எது உண்மையென்று புரிவதில்லை. நிறைய கதைகள், ஒரு கதைக்குள் இன்னொரு கதை. எங்கே தொடங்குகிறது, எங்கே முடிகிறதென்றே தெரியாது.

யோகா எனும் விஞ்ஞானம்

எனவே யோகாவை நாம் அறிந்திருக்கும் உடல், சுவாசம், மனம் ஆகியவற்றின் அளவில் தொடங்குகிறோம். இது ஒரு ஃபார்முலா போல். ஹைட்ரஜனின் இரண்டு அணுக்களையும், ஆக்ஸிஜனின் ஒரு அணுவையும் கலந்தால் தண்ணீர் கிடைக்கும். இதை ஒரு விஞ்ஞானி கலந்தாலும் தண்ணீர்தான் கிடைக்கும். முட்டாள் கலந்தாலும் தண்ணீர்தான் கிடைக்கும். அதேபோல் யோகப் பயிற்சிகளை அறிந்தவர் செய்தாலும், அறியாமையில் செய்தாலும், செய்ய வேண்டிய முறையில் செய்தால் பலன் கிடைத்தே தீரும்.

எனவே ஆரம்பத்தில் உடலில் சில பயிற்சிகள் செய்து, பிறகு சுவாசத்திற்கு சென்று, பிறகு மனதை அணுகி, அதன்பின் உங்கள் உள்தன்மையை அணுக வேண்டும். இப்படி பல அடுக்குகளையும் நாம் சரிசெய்ய வேண்டுமென்றாலும், பயிற்சிகள் இவையனைத்தையும் ஒரே நேரத்தில் தான் அணுகுகிறது. இவை எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு பயிற்சி செய்யாவிட்டால், அவை வெறும் உடற்பயிற்சி ஆகிவிடக்கூடும். எனவே நீங்கள் சொல்வது போல் பிரிவுகள் இல்லை. யோகா என்றாலே ஒன்றியிருப்பது. பற்பல யோகப் பயிற்சிகளும் அந்த ஒருநிலையை அடைவதற்கே.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert