சென்ற வாரப் பகுதியில் உணவிலும் சமையலிலும் எண்ணெயின் பங்கு குறித்து பகிர்ந்து கொண்டோம். இம்முறை எண்ணெய்க் குளியல் மற்றும் பல வகை எண்ணெய்களின் பிற மருத்துவ குணங்களையும் பகிர்கின்றோம்.

டாக்டர் சாட்சி சுரேந்தர், ஈஷா ஆரோக்யா

பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை, “தீபாவளிக் காய்ச்சல்” என்றொரு சங்கதி இருந்ததுண்டு. தீபாவளி நாளுக்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பிருந்தே தாய்மார்கள் தம் கைப்பட பலகாரங்களைச் செய்வதிலும், இளம்பெண்கள் தம் கைகளுக்கு மருதாணி இடுவதிலும், அப்பாக்கள் குழந்தைகளுக்கு பட்டாசும், புத்தாடையும் தேர்ந்தெடுக்க சந்தைக் கடைகளில் ஏறி இறங்குவதுமென, ஒவ்வொரு வீட்டிலும் களைகட்டும் உற்சாகம்தான், ஆனந்தக் காய்ச்சலாக ஊரெங்கும் தொற்றியிருக்கும்! தீபாவளி தினத்தன்று, எண்ணெய்க் குளியல், புத்தாடை, படையல், பலகாரம், பட்டாசு, உறவினர் நண்பரோடு குதூகலம் என அமர்க்களப்படும். ஆனால், சமீப வருடங்களில் ஏனோ நமது இந்தக் கொண்டாட்ட மனநிலை (Celebration Mood), அதுவும் நகரங்களில் குறைந்து வருவது நம் அனைவரது மனசாட்சியிலும் எதிரொலிக்கத்தான் செய்கிறது.

தொல்லைக்காட்சிகளின் விடுமுறை தினச் சிறப்பு நிகழ்ச்சிகள், தனிக்குடித்தனங்கள், விலைவாசி, “வசதியிருந்தால் எப்போது வேண்டுமோ புத்தாடை, வாய்ப்பிருந்தால் நாள்தோறும் பலகாரம்” என பல சமூக மாற்றங்களை நாம் காரணமாய் அடுக்கலாம். இவை ஒருபுறம் இருந்தாலும், தீபாவளியன்று மட்டுமே நம் நினைவிற்கு வரும் ‘எண்ணெய்க் குளியலின்’ பரிணாம வீழ்ச்சியை நாம் அவசரமாகத் திரும்பிப் பார்க்க வேண்டிய தருணமிது.

எண்ணெய்க் குளியல் ஏன்?

நவீன மருத்துவ அறிவியலுக்கு, நோய் வந்த பிறகு அதை குணப்படுத்துவதிலும், கட்டுக்குள் வைத்திருப்பதிலும் (Disease Management) அதிக கவனம் செலுத்தும் தன்மை உண்டு. ஆனால், நம் பாரம்பரிய வாழ்வியலில் உடலை நோய் அணுகாமல் காத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல எளிய வழிமுறைகளுக்கு (Health Mangement) சிறப்பிடம் உண்டு. இதில் ‘வாரம் ஒரு நாள் எண்ணெய்க் குளியல்’ என நம் பண்பாட்டில் ஆரோக்கியம் பேணும் வகையில் வாழ்வின் ஒரு அங்கமாகவே இருந்து வந்த வழக்கம், இன்று வெறும் தீபாவளிச் சடங்காக மாறிவிட்டதுதான் சோகம்!!

இது சோகம் என்றால், அந்த தீபாவளி நாளன்றுகூட, உடல் முழுதும் முறையாய் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கமும் போய், வெறும் 1 ஸ்பூன் எண்ணெயை தலையிலிட்டு வேலையை முடிப்பது சோகத்தின் உச்சம்!!

நமது இந்த வாழ்வியல் போக்கில் மாற்றம் கொண்டு வருவது மிக அவசியமாகிறது. ஏனெனில், புவி வெப்பமயமாதல், அதிவேக வாழ்க்கை முறை எனப் பல்வேறு காரணங்களால், நம்மில் பலருக்கு பித்தமும், உடல் சூடும் அதிகரித்தே இருக்கின்றன. இதற்கு, முறையான எண்ணெய்க் குளியல் நிச்சயம் ஒரு வரப்பிரசாதம்.

எண்ணெய்க் குளியலின் பயன்கள்:

தமிழ் மருத்துவத்தின் ஆதார நூல்களில், எண்ணெய்க் குளியலின் பயன்களாக விவரிக்கப்படுபவை:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
  • உடல் சூடு தணியும்
  • உடல் சோர்வு, உடல் வலி நீங்கும்
  • நல்ல உறக்கம்
  • மெய், கண், செவி, நாசி, வாய் என புற உலகோடு நாம் தொடர்புகொள்ள உதவும் ஐம்புலன்களுக்கும் தெளிவு
  • தோல், கூந்தல் செழுமை
  • ஆயுள் விருத்தி

உடலில் பித்தம் அதிகமாதலால் ஏற்படும் குருதி அழல் (நவீன மருத்துவத்தில் உயர் இரத்த அழுத்தம்), மூலச்சூட்டினால் உண்டாகும் உடல் உபாதைகள், மன நிலையில் சமநிலையின்மை, வெகுவான பிரயாணம், அதிக வெப்ப சூழ்நிலையில் பணி போன்ற நிலைகளில் எண்ணெய்க் குளியலின் மகத்துவம் எளிதில் விளங்கும்.

மேற்கத்திய அறிவியல் ஆராய்ச்சிகளில், ‘எண்ணெய்க் குளியல்’ பற்றிய விரிவான ஆய்வுகள் இதுவரை இல்லை. எனினும், சிறு சிறு ஆய்வுகள் மூலம் எண்ணெய்க் குளியலால் மன அழுத்தம் குறைந்ததற்கான சான்றுகள் உள்ளன.

‘எண்ணெய்க் குளியல்’ முறை:

உகந்த நாட்கள்:

ஆண்கள்: புதன் மற்றும் சனி

பெண்கள்: செவ்வாய் மற்றும் வெள்ளி

உகந்த நேரம்: காலை 5 முதல் 7 மணிக்குள்

உகந்த எண்ணெய்: தென்னிந்திய பகுதியில் வாழ்பவர்களுக்கு நல்லெண்ணெய் சிறந்தது

நல்லெண்ணெயோடு பூண்டு, சிகப்பு மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து, சீரகம் உடையும் பதத்தில் இறக்கி தாங்கும் சூட்டில் பயன்படுத்த வேண்டியது. இது எல்லா வயதினருக்கும் ஏற்றது. இதனை மொத்தமாய் காய்ச்சி வைத்தும் பயன்படுத்தலாம்.

'கபம்' சார்ந்த தொல்லை இருப்பின் இதை உடல் முழுதும் தேய்த்து, தலையில் மிகக் குறைந்த அளவில் இட்டுக்கொள்ளலாம். (மாறாக கபத்தன்மை உடையோர்க்கென பிரத்யேகமான மூலிகை தைலங்களை (பீனிச தைலம்) தாராளமாய் பயன்படுத்தலாம். இவை சைனஸ் தொந்தரவு குறைவதற்கு உதவிகரமாகக்கூட செயல்படுகின்றன.

எண்ணெய் வைக்கும் முறை:

தாங்குமளவு சூட்டில் தலை மற்றும் உடல் முழுதும் எண்ணெய் தேய்த்து, செவி ஒன்றுக்கு மூன்று துளியும், நாசி ஒன்றுக்கு இரு துளியும் இட வேண்டும். (காதில் நீர்/ சீழ் வடியும் தன்மை இருப்போருக்கு, இம்முறைக்கு மட்டும் மருத்துவ ஆலோசனை தேவை) உள்ளங்கால்களிலும் தேய்ப்பது அவசியம்.

10 முதல் 20 நிமிடம் வரை உடலில் எண்ணெய் ஊறிய பின், குளிப்பதற்கு வெந்நீரும், தேய்ப்பதற்கு சீயக்காய் சேர்ந்த பொடியும் பயன்படுத்தினால் நன்மை. உடலுக்கு பஞ்சகற்பப் பொடியை (கஸ்தூரி மஞ்சள், மிளகு, கடுக்காய்த் தோல், நெல்லி வித்து, வேப்பம் வித்து என அனைத்து பொருட்களையும் சமஅளவில் சேர்த்து அரைத்தது) பயன்படுத்துவதை தமிழ் மருத்துவம் ஊக்குவிக்கிறது. குளித்த பின் நன்றாக தலை, உடலை உலர்த்துவதும் முக்கியம்.

எண்ணெய் குளியல் நாளன்று தவிர்க்க வேண்டியவை:

எண்ணெய் குளியல் நாளன்று உடல் இயக்கத்திற்கு நல்ல ஓய்வு அவசியம். உடல் சூடு தணிந்திருக்கும் வேளையில், தயிர், பால், மோர், நீர்க் காய்கறிகள், திராட்சை, வாழைப்பழங்கள், குளிர்ந்த பானங்கள் முதலிய குளிர்ச்சி உண்டாக்கும் உணவுகள் தவிர்த்து, எளிதில் செரிமானம் ஆகக்கூடிய அரிசி உணவுகளே அன்றைய தினத்திற்கு ஏற்றது. மேலும் மாமிசம், மது, புகை, பகல் உறக்கம், உடற்புணர்வும் விலக்கப்பட வேண்டியவை.

“சனி நீராடு” என்கிறார் மஹா சித்தர் ஓளவையார். நம் உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த நம் வாழ்க்கை முறைக்குள் மீண்டும் எண்ணெய்க் குளியலை தவறாமல் கடைபிடிப்பதன் அவசியத்தை நினைவூட்டத்தான் இவ்வருட தீபாவளியும் சனிக்கிழமையில் அமைந்ததோ?!

எண்ணெய்களின் பிற மருத்துவ பயன்கள்:

நல்லெண்ணெய்:

  • மூட்டு வலி உடல் வலிக்கு நல்லெண்ணெயை மிதமான சூட்டில் தினமும் தடவி வர இழந்த நீர் மற்றும் எண்ணெய்ப் பற்றை மூட்டுக்களில் சேர்த்து வலி குறையவும், மூட்டுக்கள் பலப்படவும் உதவும்.
  • பாரம்பரிய மருத்துவ முறைகளில், வலி நிவாரண எண்ணெய்களில் (பிண்ட தைலம், உளுந்து தைலம், கற்பூராதி தைலம்) பெரும்பாலும் நல்லெண்ணையே மூலம்.
  • “கவல க்ரிஹா” எனும் பழமையான ஆயுர்வேத முறைதான், நவீன ஆயில் புல்லிங்! வெறும் வயிற்றில், சிறிது நல்லெண்ணெய்யை 10 முதல் 20 நிமிடம் வாயில் அடக்கி, கொப்பளித்து வெளியேற்றும் முறை. ஐம்புலங்களின் வாயிலாக உடலின் சமச்சீரற்ற வாத, பித்த கபத்தை சமன் செய்யவும், நாட்பட்ட நோய்களிலிருந்து மீள்வதற்கு துணை மருத்துவமாய்க் கொள்ளலாம் என்கின்றன ஆயுர்வேத மருத்துவக் குறிப்புகள். பல், ஈறுகளின் ஆரோக்கியத்தை இம்முறை பேணுவதாக நவீன அறிவியலும் சான்றளிக்கின்றன.

விளக்கெண்ணெய்:

  • அடி வயிறு (கர்ப்பப்பை, கீழ்க்குடல் மூலம்/மலச்சிக்கல்) சார்ந்த பிரச்சனைகளுக்கு தமிழ் மருத்துவம் விளக்கெண்ணெய் சார்ந்த மருந்துகளையே பரிந்துரைக்கிறது.
  • உடல் அதிக சூட்டில் அவதியுறும் சமயம், அடிவயிற்றிலும், உச்சந்தலையிலும் உள்ளங்கை, கால்களிலும் சிறிது விளக்கெண்ணெய் தடவினால் கிடைக்கும் நிவாரணம் அறிவியல் ஆதாரமற்றது என்றாலும் அனுபவத்தில் உண்மையானதே!

தேங்காய் எண்ணெய்:

  • வறண்ட சருமம், சிறு புண்கள், வெயில் பாதுகாப்பு (sun screen) தரமான தேங்காய் எண்ணெய் மட்டுமே போதுமான மருந்து!
  • மேலும் சித்த மருத்துவம் கூறும் ஆறாத புண்களுக்கான ஊமத்தன் தைலமானாலும், தோல் ஒவ்வாமை அரிப்பு (allergy) அருகம்புல் தைலமானாலும், கூந்தலுக்கான நீலிபிருங்காதி, பொடுகு, பிற தோல் நோய்களுக்கான வெப்பாலை, புங்கம், குப்பைமேனி தைலங்கள் அனைத்திலும் தேங்காய் எண்ணெய்யே முக்கிய மூலம்.
  • சித்த மருத்துவ குறிப்புகள் உதவி: சித்த மருத்துவர் புவனேஷ்வரி, ஈரோடு
  • எண்ணெய் குளியலுக்கேற்ற பாரம்பரிய எண்ணெய், குளியல் பொடிகள் மற்றும் பிற தைலங்கள் அனைத்தும் ஈஷா ஆரோக்யா மருத்துவ மையங்களில் கிடைக்கும்.

இதன் முதல் பாகம்: எண்ணெய் எத்தனை முக்கியம்?!