தியானம் செய்ய உட்கார்ந்தாலே, எண்ணங்கள் தாறுமாறாக ஓடுகிறதா உங்களுக்கு? இந்த எண்ண ஓட்டங்களைக் கட்டுப்படுத்துவது எப்படி? சத்குரு இதில் தரும் விளக்கத்தைக் கேட்டு தெரிந்துகொள்வோம்...

சத்குரு:

ஈஷா யோகா

எண்ணங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே ஒரு எண்ணம்தான். எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது என்று தொடங்கிவிட்டால் அதற்கு முடிவே கிடையாது. அது முடிவில்லாத போராட்டம். அதற்கு ஒரு வழியே ஈஷா யோகா. எண்ணங்கள் இருக்க அனுமதியுங்கள். அவற்றைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். அது தானாகவே தொடரட்டும். எண்ணங்கள் இருக்கினறன என்ற விழிப்பு உணர்வு மட்டும் உங்களுக்கு இருக்க வேண்டும். மெல்ல, மெல்ல எண்ணங்கள் வலுவிழந்துவிடும். இது ஒரு வழி.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பிராண சக்தி

பிராணசக்தியைக் கட்டுப்படுத்தினால், எண்ணங்கள் எளிதாகக் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

இன்னொரு வழி, நீங்கள் செய்யும் பயிற்சிகள். அது பிராணசக்தியைக் கட்டுப்படுத்துவது. உங்கள் எண்ணமாக இருந்தாலும், இதயமாக இருந்தாலும் உங்கள் அணுக்களாக இருந்தாலும், உடலுக்குள் இருக்கிற அத்தனை இயக்கங்களும் உங்கள் பிராணசக்தியின் அடிப்படையான துணையோடுதான் நடைபெறுகின்றன. பிராணசக்தியை நீங்கள் கட்டுப்படுத்தினால் எண்ணம் கிடையாது. உங்கள் பிராணசக்தி மீது போதிய ஆளுமையிருந்தால், உங்கள் மனம் மீது, உங்கள் உடல் மீது, உங்கள் உடல் இயக்கங்கள் மீதெல்லாம் உங்களுக்கு ஒரு ஆளுமையிருக்கும்.

இந்தக் கட்டுப்பாடு வருவது என்பது உங்கள் தாகத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமோ, பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலமோ அல்ல. பிராணசக்தியைக் கட்டுப்படுத்தினாலே போதும். எண்ணங்களுக்கும் இதுவே பொருந்தும். பிராணசக்தியைக் கட்டுப்படுத்தினால், எண்ணங்கள் எளிதாகக் கட்டுப்பாட்டுக்குள் வரும். பிரணாயாமத்தில் கும்பகா, சூன்யகா, நிலைகளின் போது, பெரும்பாலும் அங்கு எண்ணங்கள் இருப்பதில்லை. நீங்களாக முயற்சி செய்து நினைக்க முற்பட்டாலேயொழிய, எண்ணம் அப்போது தோன்றாது. ஒருமுறை கும்பகா நிலையை இருத்தி வைத்துப்பாருங்கள். எண்ணம் இருக்காது.

நான் இப்படியே கொஞ்சநேரம் அமர்ந்திருந்தால், ஒரு எண்ணம் கூட வராமல் அமர்ந்திருக்க முடியும். அப்போது நான் தியானம் செய்வதில்லை. நான் எதுவுமே செய்வதில்லை. வெறுமனே அமர்ந்திருக்கிறேன். ஏதாவது ஒரு புத்தகத்தைப் படிக்கலாம் என்று பார்க்கிறேன். ஆனால் இப்போதெல்லாம் ஒரு மூன்று, நான்கு ஆண்டுகளாகவே ஒரு புத்தகத்தை எடுத்தால், சில வரிகளை அல்லது ஒன்றிரண்டு பக்கங்களைப் படித்தாலே போதும். அதற்குப் பிறகு அமைதியாக உட்கார்ந்து விடுகிறேன். அந்த ஒரு வரியே அந்த எழுத்தாளரின் மனம் எத்தகையது என்பதை எனக்குச் சொல்லிவிடுகிறது. எண்ண ஓட்டங்களே இல்லாமல் அதை இயல்பாகப் பார்க்க முடியும்.

இதைப்பற்றி நான் பலமுறை பேசியிருக்கிறேன். வெறுமனே பார்ப்பதற்கும், எண்ணத்தோடு பார்ப்பதற்கும் வேறுபாடுகள் உண்டு. வெறுமனே பார்ப்பதற்கு எண்ண ஓட்டம் தேவையில்லை. பார்ப்பதென்றால் வெறும் கண்களோடு மட்டுமல்ல. கண்கள் மூடிய நிலையிலும் பார்க்க முடியும். எனவே போதிய விழிப்புணர்வை வளர்த்துக் கொள்கிறபோது, நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் எண்ணங்கள் அப்போது ஏற்படுவதில்லை. நீங்கள் முழு விழிப்புணர்வோடு இருக்கிறபோது நன்றாகப் பாருங்கள். எண்ண ஓட்டங்களே இருக்காது. பொதுவாக எண்ணங்கள் வருகிறபோது உங்கள் விழிப்புணர்வு போயிருக்கும். ஒருவேளை தியானத்தின்போது, எண்ண ஓட்டங்களை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இல்லையென்றால் அது பொதுவாக அப்படித்தான். எண்ண ஓட்டங்கள் இருக்கிறபோதே, முழு விழிப்புணர்வோடு இருக்கிற சம்யமா முறையை (ஈஷாவில் வழங்கப்படும் மேல்நிலை வகுப்பு) பின்பற்றினால் தான் முடியும்.

வாழ்க்கையும் ஆன்மீகமும் வெவ்வேறா?

வெறுமனே பார்ப்பதற்கும், எண்ணத்தோடு பார்ப்பதற்கும் வேறுபாடுகள் உண்டு.

அதற்கு, செயல்முறைப் பயிற்சி தேவை. செயல்முறைப் பயிற்சி குறைகிறது என்று கருதுகிறேன். ஏனென்றால், ஆன்மீகம் என்பது ஒரு உபதொழிலாகிவிட்டது. வாழ்க்கை ஒரு புறமும், ஆன்மீகம் ஒரு புறத்திலும் இருக்கிறது. பரவாயில்லை. இப்போது உங்கள் வாழ்க்கையை இந்தவிதமாக அமைத்திருக்கிறீர்கள். ஆனால் இதன் எல்லையை நீங்கள் பார்க்க விரும்பினால், இந்த உள்நிலை உலகம் எவ்வளவு பெரியது என்பதை நீங்கள் உணர விரும்பினால், அதற்கென்று மேலும் சில தேவைகள் உண்டு. சில சின்னச்சின்ன பரவசங்கள், இந்த சின்ன சந்தோஷங்கள் உங்களுக்குப் போதுமென்றால் எந்தவித செலவும் இல்லாத, பின்விளைவு இல்லாத போதைதான் யோகா என்று நினைக்கிறீர்கள். யோகா வகுப்பிற்கு வந்து சிறிது நல்ல நிலையை உணர்கிறீர்கள். அவ்வளவுதான். சிறிது மதுவையோ அல்லது போதைப் பொருளையோ பயன்படுத்தி ஒரு பரவச நிலைக்குப் போவதுபோல, இதிலேயே நீங்கள் மகிழ்ச்சியடைந்தீர்கள் என்றால் உங்களுடைய இப்போதைய கர்மா இப்படித்தான்.

இதைத்தாண்டிப் போக வேண்டுமென்றால் இன்னும் ஆழமான ஆன்மீகப் பயிற்சி நிலைகள் வேண்டும். இதற்கு நீங்கள் முதலிடத்தைத் தரவேண்டும். அப்போது உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு பூவின் இதழ்கள் உதிர்கிற மாதிரி உங்களை நீங்கள் உதிர்த்துக்கொள்ள முடியும். நாளுக்கு நாள் அது நிகழும். எல்லாமே மறைந்துவிடும். எது உண்மையோ அது மட்டும் நிலைக்கும். உதிர்ந்து போகிற அனைத்தும் உதிர்ந்து போகட்டும். உதிர்ந்து போகப் போகிற விஷயங்களை இருத்தி வைத்துக் கொள்வதற்காக, வாழ்வின் பெரும் பகுதியை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள். எப்போதும் உங்களை விட்டு விலகிக் கொள்கிற விஷயங்களைத்தான் நிலைநிறுத்திக் கொள்ள அதிகம் முயற்சி செய்கிறீர்கள். எது விழப்போகிறதோ அது விழட்டும். எல்லாமே விழட்டும். விழ முடியாத ஒன்று உண்டு. விழவேண்டியவற்றை அனுமதித்தால், அதை நீங்கள் அணுகிவிட முடியும்.