இந்த வார சத்குரு ஸ்பாட்டில்... வெள்ளியங்கிரி மலைதன் பெயருக்கோர் காரணமான வெள்ளி மேகங்கள் அதை சூழ்ந்திருக்க, பருவமழை பொழியும் அழகை வர்ணிக்க வார்த்தைகள் கண்டுகொண்டு களிப்புடன் பகிர்ந்துகொள்ளும் சத்குரு, நம் நாட்டில் பெண்மையை பேணிக்காத்து மலரவைப்பதன் முக்கியத்துவம் பற்றியும் சொல்கிறார்.

பருவமழை

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பருவமழை அடித்துப்பொழிந்திட
சிலசமயம் ஆக்ரோஷமாய்,
சிலசமயம் மென்மையாய்
சிலசமயம் வலிக்கவைக்கும் பெருந்துளிகளாய்
சிலசமயம் ஊசிகளாய் விழும் சாரலாய்
மண்தடங்களில் மறைந்துகொண்டு
மகிழவைக்கும் குட்டைகளாய்
மரங்களும் செடிகளும் குதூகலத்தில் குதிப்பதுபோல,
காற்றுடன் அசைந்தோ
காற்றையும் அசைத்தோ
சிலசமயம் கொந்தளிப்பாய்
சிலசமயம் நிச்சலனமாய்
உயிரும் உயிர் உருவாக்கும்
மூலப்பொருட்களும் ஆடிடும் நடனம்,
இவ்விரண்டு மாதங்களில் எவ்வளவு
அற்புதமாய் இயக்கப்படுகிறது என்பதே,
வரும் வருடத்தின் உயிர்வாழ்வை நிர்ணயிக்கும் -
இப்பகுதியில் இருக்கும் மனிதர்கள் உட்பட எல்லா உயிர்களுக்கும்.
இம்முறை பருவமழை பருவம் தவறி தாமதித்துவிட,
பல ஏக்கம்கொண்ட கண்கள் வானம்பார்த்துக் காத்திருக்கின்றன -
உயிரின் உயிர்ப்பான நடனத்தைப் பார்த்துப் பெற்றுக்கொள்வதற்கு.

இங்கே வெள்ளியங்கிரி அடிவாரத்தில் பருவமழைக் காலமே வருடத்தின் சிறந்த பருவம். 20 வருடங்களுக்கு முன் பருவமழை உச்சகட்ட தீவிரத்தில் பொழிந்தபோது நாங்கள் முதன்முதலில் இவ்விடத்திற்குப் பெயர்ந்தோம். எல்லாம் வேகம் குறைந்தாலும், எல்லாம் ஈரமாய் இருந்தாலும், சிலநேரம் முழங்கால்வரை தண்ணீர் இருந்தாலும், எலும்புகள்வரை நனைந்திருப்பது சாதாரணம் என்றாலும், தனிப்பட்ட முறையில் எனக்கு இக்காலமே மிகவும் பிடித்தமானது. காற்றின் சீற்றமும், மழையும், புத்துணர்ச்சி புகுத்தி மாற்றங்கள் விளைவிக்கக்கூடியது. நான் இங்கு இருக்கும் இரண்டு வாரங்கள் எனக்கு அற்புதமாய் இருந்துள்ளது. நேற்று மாலை இன்னர் வே நிகழ்ச்சி துவங்கிவிட்டது. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இதுபோன்ற நிகழ்ச்சிகளில் முழுவதும் பங்கேற்காமல் வெளியே நழுவிட நினைத்துக்கொண்டு இருக்கிறேன்.

தில்லியில் புதிய தலைமை பொறுப்பேற்றபிறகு, தினசரி அளவில் ஊழல்களிலிருந்து தப்பித்துவிட்ட போதிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளால் நாடு தடுமாறித் தத்தளிக்கிறது, குழந்தைகளும் விதிவிலக்கல்ல. பல்வேறு அரசியல் தலைவர்களின் மனப்பான்மைகளும் எவ்விதத்திலும் உதவவில்லை. காட்டுமிராண்டித்தனமான இந்த பாலியல் வன்கொடுமைகள் சமூகத்தை ஸ்தம்பிக்கவைத்துள்ளது. பலாத்காரம் செய்பவரின் மன அமைப்பைப் புரிந்துகொள்வது என்பது மிகவும் சிக்கலான விஷயம். நம் சமூக வாழ்க்கை, நற்குணங்கள், சமூக அமைப்புகள், பாலினம் சார்ந்த கல்வி மற்றும் விழிப்புணர்வு, என்று பல்வேறு நிலைகளில் அனைத்தையும் மறுபரிசீலனை செய்து சரிசெய்யத் தேவையாக இருக்கிறது.

நம் பெண் குழந்தையைப் பாதுகாப்பது ஒரு ஆரோக்கியமான சமூகத்தை வளர்ப்பதில் பெரும் முக்கியத்துவம் கொண்டதாய் இருக்கிறது. பெண்களை மதித்துப் பேணிக்காத்திடத் தெரியாத ஒரு சமூகம், முன்னேறவோ செழிக்கவோ இயலாது. வரும் வருடங்கள் பெண்மையை மலரவைப்பது நோக்கி இருக்குமென எதிர்பார்ப்போம்.

Love & Grace