ஈஷா ஹோம் ஸ்கூல் மற்றும் ஈஷா சம்ஸ்க்ருதியில் பயிலும் குழந்தைகள், இசையை ரசித்து உணரும் விதம் கண்டு, நான் மிகவும் வியந்து போகிறேன். அவர்கள் மிகவும் நுட்பமான இசையை ரசிப்பதோடு இல்லாமல், அது இன்ன ராகம், இந்த தாளம் போன்ற எல்லா விஷயங்களையும் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

அவர்களைப் பார்க்கும்போது, 'ஓ! இவர்கள் வயதில் நான் 'டங் டங் டங்' என்ற (மேற்கத்திய) இசையை மட்டுமல்லவா கேட்டுக் கொண்டிருந்தேன்? வேறு எதையும் கேட்கவில்லையே' என்று நினைத்து சிரித்துக் கொள்கிறேன்.

இந்தக் குழந்தைகள் தங்கள் பள்ளியில் அமர்ந்து செய்தித்தாளையோ அல்லது ஏதோ ஒரு புத்தகத்தையோ படித்துக் கொண்டிருப்பார்கள். அப்போது அந்த அறையில் மேற்கத்திய இசையை மென்மையாக ஒலிக்கவிடுவோம். அவர்கள் படிப்பதிலேயே மூழ்கி இருப்பார்கள். பின்னர் இன்னும் கொஞ்சம் ஒலியைக் கூட்டிவைப்போம். இன்னும் சிறிது நேரம் கழித்து இன்னும் அதிகமாக ஒலிக்கவிடுவோம்.

அவர்களில் ஒருவருக்கு அந்த இசை பிடிக்காது என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் அவர் தன் கால்களை அந்த தாளத்திற்கு ஏற்ப ஆட்ட ஆரம்பிப்பார். அப்போது அவரிடம், "இந்த இசையே பிடிக்காது என்று சொன்னாயே? ஆனால் உன் கால்களைப் பார்! அதை ரசித்து காலை எல்லாம் ஆட்டுகிறாயே! உனக்கு அது பிடித்துதான் இருக்கிறது. ஆனால் நீ பிடிக்கவில்லை என்று மழுப்புகிறாய்", என்று விளையாட்டாய் சொல்லிப்பார்ப்போம். அதற்கு அவர், "இந்த இரைச்சலான இசையை நிறுத்திவிடுங்களேன்... ப்ளீஸ்" என்பார்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், இந்த இசையின் லயம் எப்படி இருக்கிறது என்றால், உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ அந்த இசையைக் கேட்கும்போது உங்கள் உடல் தானாக அசைய ஆரம்பிக்கிறது. ஆனால் ஒருசில இசையைக் கேட்கும்போது, உங்கள் உடல் அசைவற்ற தன்மையை அடைகிறது. 'த்ருபத்' இசையைக் கேட்கும்போது, நீங்கள் அப்படியே நிலைத்து அமர்ந்துவிடுவீர்கள். அசையக்கூட மாட்டீர்கள்.

நீங்கள் 'த்ருபத்' இசையைக் கேட்டிருக்கிறீர்களா? இங்கு ஈஷாவில் நாம் ஒலித்தட்டுகளை ஒலிக்கவிடுவதே இல்லை. பெரும்பாலும் இங்கு இங்குள்ள பூச்சிகளும் வண்டுகளும் செய்யும் ரீங்காரங்களில்தான் இருக்கிறோம். அவ்வப்போது சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் குழு இசையைக் கேட்கிறோம். ஆனால், பாவஸ்பந்தனா போன்ற உயர்நிலை வகுப்பில் சிவன் குறித்து வரும் இசையை உங்களில் சிலர் கேட்டிருக்கக் கூடும். அதுகூட த்ருபத் இசையின் ஒரு வகைதான்; திரளான மக்கள் இருக்கும்போது ஒலிக்கப்படும் வகை.

இதில் நிறைய சொற்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால், பொதுவாக த்ருபத் இசையில் அதிகம் சொற்கள் இடம்பெறாது; நா.. ஆ.. ஆ.. என்ற ஆலாபனைதான் அதிகநேரம் இருக்கும். அந்த ஆ.. ஒலியை மட்டுமே எழுப்பி செய்யப்படும் ஆலாபனையை, அவர்கள் ஆறு மணிநேரம் கூட தொடர்ந்து பாடுவார்கள். நீங்கள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தால் அப்படியே அசையாமல் அமர்ந்துவிடுவீர்கள். உங்கள் முதுகுத்தண்டு அப்படியே நேராக நிலைத்துவிடும். ஏனென்றால் அந்த இசையே அப்படித்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் த்ருபத் இசையின் பலவிதமான லயங்கள், பல நிலைகளில் செயலாற்ற முடியும். சில உங்கள் உடல்நிலையில் செயலாற்றுகின்றன; உங்கள் உடல் அசைவற்று இருக்கிறது. மனம் சம்பந்தப்பட்ட லயத்தைத் நீங்கள் தொடும்போது, நீங்கள் ஒருவிதமாக உணர்வீர்கள். சக்திநிலை சம்பந்தப்பட்ட பகுதியைக் கேட்கும்போது, உங்கள் அனுபவம் முற்றிலும் வேறுவிதமாக இருக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.