என் அன்பான ஆர்த்தி

என் அன்பான ஆர்த்தி

ஒரு தந்தை தன் கண் முன்னே, தன் ஆசை மகள் உயிர் பிரிந்ததை விளக்கும் உண்மைக் கதை…

கிருஷ்ணகுமார், திருப்பூர்.

எனக்கு ஆர்த்தி ப்ரியா என்று ஒரு மகள் இருந்தாள். அவள் பிறவியிலேயே கன்ஜெனிடல் மயோபதி (congenital myopathy) என்னும் தசை நோயால் பாதிக்கப்பட்டு பிறந்தாள். அவளால் சாதாரணமாக நடக்க முடியாது, அவளுடைய செயல்களை அவளே செய்து கொள்ள முடியாது.

காலையில் 10 மணியளவில் நான் பக்கத்தில் போய் பார்க்கிறேன், அப்போது தொப்புள் பகுதியிலிருந்து வேகவேகமாக மூச்சு மேலே வந்த மாதிரி இருந்தது.

சுமார் 20 வருடங்களுக்கு முன்பே சத்குருவுடன் நான் தொடர்பில் இருந்தேன். அப்போது ஒருமுறை, சத்குருவிடம், என்னுடைய மகள் இந்த வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று சொன்னேன். அப்போது அவளுக்கு சுமார் 4, 5 வயதிருக்கும். அதற்கு அவர், “அந்த குழந்தை ஒரு பாக்கியம் செய்ததனால்தான் உங்களைத் தேர்ந்தெடுத்துப் பிறந்திருக்கிறது. அந்த உயிர் தன் கர்மாவை கழித்துக் கொள்வதற்காக உங்களைத் தேர்ந்தெடுத்து வந்திருக்கிறது. அந்தக் குழந்தையை நீங்கள் அன்பாக பார்த்துக் கொள்ள வேண்டும்,” என்று சொன்னார். அதன் பிறகு சத்குரு அமெரிக்கா சென்றபோது, அங்கே இந்த வியாதியைப் பற்றியும், இதற்கு ஏதேனும் நவீன சிசிச்சைகள் இருக்கிறதா என்பதைப் பற்றியும் விசாரித்திருக்கிறார்.

Aarthi

பிறகு என்னைக் கூப்பிட்டு, “தற்போது இதற்கு சிகிச்சை ஏதுமில்லை,” என்று சொல்லிவிட்டு, “நீங்கள் சிகிச்சைக்காக இந்த குழந்தையை எடுத்துக்கொண்டு எங்கேயும் அலைய வேண்டாம், அவளை நீங்கள் அன்பாக பார்த்துக்கொள்வதுதான் உங்களுடைய கடமை,” என்று சொன்னார். அந்த வார்த்தையை கேட்டபின் எங்களுக்குள் அமைதி ஏற்பட்டுவிட்டது. அவளை சிகிச்சைக்கும் அழைத்துச் செல்லவில்லை.

அவள் மிகவும் துறுதுறுப்பாக இருப்பாள். கர்நாடக இசைப் பாடுவாள், கைவினை வேலைகள் அதிகம் செய்வாள். யார் வந்து பழகினாலும், அவர்களைக் கவர்ந்து விடுகிற மாதிரி அவளுடைய நடவடிக்கைகள் இருக்கும். அவளும் அந்த வியாதியைப் பற்றிக் கவலைப்பட்டது கிடையாது. தன் உடல்நிலையில் பாதிப்பு இருப்பதாகவே காட்டிக்கொள்ள மாட்டாள். நாங்கள் அவளுக்காக கவலைப்படுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தவும் மாட்டாள். அப்படித்தான் வளர்ந்தாள்.

அவள் சத்குருவிடம் அடிக்கடி தொடர்பு கொள்வாள். அவருடைய அப்பாய்ன்ட்மெண்ட் பெற்று நேரில் சென்று பார்ப்பது, அவள் பழகின பாட்டை எல்லாம் பாடிக் காண்பிப்பது, இந்த மாதிரி நடந்து வந்தது. அப்போது ஒவ்வொரு முறையும் சத்குரு ஆசீர்வாதம் பண்ணி, அவளுக்கு ஒரு பூ கொடுப்பார். அவள் அந்த பூவை எடுத்து வந்து தனது புத்தகத்திற்குள் வைத்து காய வைத்து அதை பத்திரப்படுத்திக் கொள்வாள். இதுவரை 10, 12 பூக்களை இப்படிச் செய்து தனது ஆல்பத்தில் ஒட்டி வைத்திருக்கிறாள்.

சத்குரு சில நேரங்களில் பழம் கொடுப்பார். அவளால் எப்போதும் பழத்தை ஒரே நேரத்தில் சாப்பிட முடியாது. எனவே அதை அவள் அம்மாவிடம் கொடுத்து உரித்துக் கொடுக்கச் சொல்லி 2 நாள், 3 நாள் வைத்திருந்து, அந்தப் பழம் முழுவதையும் சாப்பிட்டு முடித்து விடுவாள். சத்குரு மேல் அப்படி ஒரு நம்பிக்கை வைத்திருந்தாள்.

ஒரு முறை, அவளுடைய 15 வது வயதில், உடம்பு வலி என்று சொல்லிக் கொண்டிருந்தாள் என்று சொல்லி, எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் வந்து ரேக்கி சிகிச்சை (சக்தி நிலை சிகிச்சை) கொடுக்கலாம் என்று 2 நாட்கள் கொடுத்தார்கள். அதனால் உடம்பு வலி கொஞ்சம் குறைந்தமாதிரி இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

அந்தச் சமயத்தில் சத்குருவை சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போது ரேக்கி சிகிச்சை பற்றிச் சொன்னேன். அதற்கு சத்குரு, “அந்தச் சிகிச்சையை உடனே நிறுத்துங்கள். அவளுடைய கர்மா எல்லாவற்றையும் இந்த உடலிலேயே, இந்த ஜென்மத்திலேயே கழித்துப் போக வேண்டும். எதையும் எடுத்துக் கொண்டு போகவேண்டாம். வலியை அவளால் தாங்கிக்கொள்ள முடியும் என்றவர், ரேக்கி சிகிச்சையை (Reiki Treatment) நிறுத்தி விடுங்கள்,” என்று சொன்னார்.

அடுத்த நாள் ஆர்த்தியிடம், “சத்குரு ரேக்கி சிகிச்சை வேண்டாம் என்று சொல்கிறார், உன்னால் வலியைத் தாங்கிக் கொள்ள முடியுமா?” என்று கேட்டேன். “சத்குரு சொல்லிவிட்டால் எனக்கு வேண்டாம், அவர்களை வர வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள்” என்று சொல்லிவிட்டாள்.

சத்குருவின் சத்சங்கத்திற்காக நான் ஆசிரமத்திற்கோ அல்லது வேறெங்காவது சென்றால் வீட்டிற்குப் போனவுடன், சத்குரு என்ன பேசினார் என்பதை, அவளிடம் விபரமாகச் சொல்ல வேண்டும். நானும் நினைவுபடுத்தி அனைத்தையும் அவளிடம் சொல்வேன். மிகவும் ஆர்வமுடன் கேட்பாள். அவளுக்கு மட்டும்தான் இப்படி எனக்குச் சொல்ல வரும். மற்ற நேரங்களில் இப்படி என்னால் நினைவுப்படுத்த முடிவதில்லை. இது எப்போதும் எனக்கு ஆச்சரியத்தைத் தரும்.

சமீபத்தில் ஒரு முறை, “உங்களுடைய கடைசி நேரத்தை என் கையில் ஒப்படைத்து விடுங்கள், உங்கள் மரணம் அமைதியாக நடப்பதற்கு நான் பொறுப்பு என்பதுபோல இன்று பேசினார்” என்று ஆர்த்தியிடம் சொன்னேன். அதை ஆர்த்தி நன்றாக உள்வாங்கிக் கொண்டதை என்னால் கவனிக்க முடிந்தது. நிலைமை இப்படி சென்று கொண்டு இருந்தது.

கடந்த வருடத்தில் (2011 ம் ஆண்டில் பகிர்ந்தது) அவளுடைய உடல்நிலை மிகவும் சிக்கலாகி விட்டது. 6 மாதமாக படுத்த படுக்கையில் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் இருந்தாள். ஒரு முறை, அவளை பார்த்துக் கொண்டிருக்கின்ற டாக்டர் வந்து, மார்பு எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என்று சொன்னார். நாங்கள் அந்த எக்ஸ்ரே யூனிட்டை வீட்டிற்கே கொண்டுவந்து எக்ஸ்ரே எடுத்தோம்.

அந்த எக்ஸ்ரே பார்த்துவிட்டு, எனது 25 வருட அனுபவத்தில் இந்த மாதிரி பார்த்ததே இல்லை, உள்ளே எல்லா உறுப்புகளும் ஒன்றுமேல் ஒன்று மெர்ஜ் ஆகிவிட்டது என்று எக்ஸ்ரே எடுத்த ரேடியாலஜிஸ்ட் சொன்னார். பிறகு அந்த எக்ஸ்ரேயை பார்த்த டாக்டர் என்னைத் தனியாக அழைத்து, “மிகவும் சிக்கலாக இருக்கிறது, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். கிட்னி செயலிழக்கலாம், இரத்த ஓட்டம் நின்றுவிடலாம். கோமா ஸ்டேஜ்க்கு போகலாம், என்னால் ஒன்றும் உதவ முடியாது” என்று சொல்லிவிட்டார்.

ஆர்த்தி, “டாக்டர் என்ன சொன்னாரோ அதை அப்படியே சொல்” என்று என்னை வற்புறுத்தினாள். நிலைமை மிகவும் சிக்கலாக இருப்பதாக டாக்டர் சொன்னார் என்று சொன்னவுடன் அவள் ஒரு முடிவுக்கு வந்து விட்டதாகத் தெரிந்தது.

அப்போது இரவு 11 அல்லது 12 மணியிருக்கும். அடுத்த நாள் காலை 10 மணிக்கு அவள் என்னைக் கூப்பிட்டு, “அப்பா… சத்குருவுக்கு நான் இந்த நிலையில் இருக்கிறேன் என்று தகவல் கொடுத்து விடு” என்றாள்.

பிறகு சத்குருவிற்கு தகவல் சென்று, “ஆர்த்தி என் விழிப்புணர்வில்தான் இருக்கிறாள் (She is in my awareness), மற்றவர்களைச் சற்று அமைதியாக இருக்கச் சொல்லுங்கள்,” என்று எனக்குத் தகவல் அனுப்பினார். அதை அவளிடம் சொன்னேன். அதற்கப்புறம்தான் அவள் அமைதியானாள்.

அந்த காலகட்டத்தில், அவள் 6 மாதமாக ஆக்ஸிஜன் உதவியால்தான் சுவாசித்து கொண்டிருந்தாள். அந்த நிலையில் ஒரு இரவன்று உறவினர் ஒருவர் வந்தார். அவர் ஆர்த்தியை போய்ப் பார்த்துவிட்டு, “ஆர்த்தி, இன்று அமாவாசை, எனவே கோவிலுக்குப் போய்விட்டு வருகிறேன்” என்று சொல்லியிருக்கிறார். “ஓ, அமாவாசையா இன்று” என்று கேட்டுவிட்டு, அன்று இரவு அவள் என் மனைவியிடம், “ஆக்ஸிஜன் கொடுத்தது போதும், எடுத்து விடுங்கள்” என்று சொல்லி இருக்கிறாள்.

ஆனால் அவள் அம்மா அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அப்புறம் நான் போனவுடன், “அப்பா, நான் முடிவு செய்துவிட்டேன், எனக்கு சீக்கிரம் நடக்கவேண்டும், எனக்கு ஆக்ஸிஜனை நிறுத்திவிடு” என்று சொன்னாள். நான் “குறைத்து வைக்கிறேன்” என்று சொன்னேன். “இல்லை எடுத்து விடு” என்று சொன்னாள். நானும் எடுத்து விட்டேன். “நீங்கள் எதற்கு அவள் சொல்வதை எல்லாம் செய்கிறீர்கள்” என்று என் மனைவி கேட்டார். இல்லை, “அவள் ஏதோ முடிவு செய்திருக்கிறாள், நாம் அதற்கு உதவியாக இருக்கலாம்” என்று சொல்லி ஆக்ஸிஜனை நிறுத்திவிட்டேன்.

இரவு முழுவதுமே ஆக்ஸிஜன் இல்லாமலே சுவாசம் பண்ணி இருக்கிறாள். ஆசிரமத்திலிருந்து அனுப்பியிருந்த பிரம்மானந்த ஸ்வரூபா சிடியைப் போட்டுக் கேட்டுக் கொண்டே இருந்தாள். “நான் தனியாக இருக்க விரும்புகிறேன், என்னைப் பார்ப்பதற்கு உறவினர்கள் யாரும் வரவேண்டாம்” என்று சொல்லி விட்டாள்.

காலையில் 10 மணியளவில் நான் பக்கத்தில் போய் பார்க்கிறேன், அப்போது தொப்புள் பகுதியிலிருந்து வேகவேகமாக மூச்சு மேலே வந்த மாதிரி இருந்தது. அடுத்த அரைமணி நேரத்தில் மூச்சின் நிலை மாறிக் கொண்டிருந்தது. அவளுக்கு கடைசி நேரம் நெருங்கிவிட்டது என்று தெரிந்து கொண்டேன். கையைத் தொட்டவுடன் கையைப் பிடித்துக் கொண்டாள். உடனே என் மனைவியையும் கூப்பிட்டுக் கொண்டேன்.

சிடியிலிருந்து பிரம்மானந்த ஸ்வரூபா உச்சரிப்பு வந்து கொண்டிருந்தது. நாங்களும் அதனுடன் சேர்ந்து உட்சாடணம் செய்தோம். அரைமணி நேரத்தில், எந்த வேதனையும் இல்லாமல், அவள் தூக்கத்தில் இருந்த நிலையிலேயே உயிர் பிரிந்தது. அப்போது முகம் பார்த்தீர்கள் என்றால் அவ்வளவு தெளிவாக இருந்தது. அவளுக்கு மரணம் அவ்வளவு எளிமையாக நடந்துவிட்டது.

அவளுடைய மரணம் எப்படியெல்லாம் கொடுமையாக இருக்குமோ என்று பயந்து கொண்டிருந்தோம். ஏனெனில் எல்லா மருத்துவர்களும் அப்படித்தான் சொல்லியிருந்தனர். அன்பாக வளர்த்த குழந்தை கடைசி நேரத்தில் கஷ்டப்படுவதை எப்படி பார்ப்பது என்பதுபோல எங்களுக்குள் ஒரே போராட்டமாக இருந்தது. ஆனால் சத்குருவிடம் அவள் தன்னை முழுமையாக ஒப்படைத்ததால், அந்த மரணம் இவ்வளவு எளிமையாக, அமைதியாக நடந்துவிட்டது. அது எங்களுக்கெல்லாம் மிகவும் சாந்தியைக் கொடுத்தது.

இது நடந்தவுடனே அடுத்த நாள் சத்குருவிற்குத் தகவல் கொடுத்தோம். சத்குருவிடமிருந்து, எங்களுக்கு பதில் செய்தி வந்தது. “அவள் சரியான இடத்தை அடைந்துவிட்டாள். நீங்கள் எல்லாம் அமைதியாகிக் கொள்ளுங்கள்” என்று சொல்லியிருந்தார்.

சத்குருவிடம் எனக்கு இருந்த தொடர்பை பெரிய பாக்கியமாக நினைக்கிறேன். “உங்களை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள், உங்கள் வாழ்வு, சாவு இரண்டையும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அவ்வப்போது சத்குரு சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் அதை ஆர்த்தி மூலம் இப்போது நான் கண்கூடாகப் பார்த்து விட்டேன். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சத்குரு மேல் எனக்கிருக்கும் மதிப்பு, பக்தி பல மடங்கு பெருகிவிட்டது.

திரு. கிருஷ்ணகுமார் அவர்கள் கடந்த பல வருடங்களாக சத்குருவுடன் தொடர்பில் இருப்பவர். நம் தன்னார்வத் தொண்டர். இந்த சம்பவம் நிகழ்ந்து 2 வருடங்கள் உருண்டோடி விட்டன. காட்டுப்பூ மாத இதழுக்காக அவர் எழுதிக் கொடுத்தவற்றை இங்கே உங்களுக்காக பதிந்துள்ளோம்.

Photo Courtesy:alice_ling@flickrஇதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert