தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லங்களில் இன்று தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.

இன்று மாலை 6.20 ற்கு துவங்கும் தரிசன நேரத்தில் நடைபெறும் நிகழ்வுகளை, சத்குரு உரையிலிருந்து சில துளிகளை, பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரஸ்ய பதில்களை, இங்கே சுடச்சுட உங்களுக்காக பதிவேற்றவுள்ளோம், தொடர்பில் இருங்கள்

இரவு 9 மணி

இன்றைய தரிசன நேரம் இசையுடன் தொடங்க, சில தியான அன்பர்கள் பொங்கிவரும் உற்சாகத்தைக் கட்டுக்குள் வைக்க முடியாமல் தவிப்பதைப் பார்த்து அவர்களை எழுந்து ஆடச்சொல்லிவிட்டார் சத்குரு.

ஆடலும் பாடலும் முடிந்தபின், இரண்டு நாட்களுக்கு முன்னால் துவங்கிய 'சிவாங்கி விரதம்' பற்றி சத்குரு பேசினார். விரதம் என்பது எப்படி நம் கலாச்சாரத்தின் அங்கமாக இருந்ததென்றும், இப்போதைய கல்விமுறை குழப்பத்தை ஏற்படுத்துவதால், கிராம மக்கள் மட்டுமே இதை மேற்கொள்வது பற்றியும் இன்று தரிசனத்திற்காக வந்திருந்த மக்கள் தெரிந்துக் கொண்டனர்.

 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

'சிவாங்கி சாதனா' எளிமையானது என்றாலும் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை விளக்க அவர் சொன்ன குட்டிக் கதை இங்கே...

"நேற்று நான் விமான நிலையத்தில் இருந்தபோது, ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு இளம் பெண் விமான நிலையத்தில், அனைவரும் புழங்கும் இடத்தில், அமர்ந்து கொண்டு மிகச்சிறிய கண்ணாடியை வைத்து தன் புருவ முடிகளைக் ட்ரிம் செய்து கொண்டிருந்தார். அது அவ்வளவு சிறிய கண்ணாடி. அங்கே ஆயிரம் பேர் நடந்து செல்கின்றனர் என்பதெல்லாம் அவரை தடுக்கவில்லை. அவர் ஓரத்தில் கூட அமர்ந்திருக்கவிலை, நட்ட நடுவில் அமர்ந்திருந்தார்.

அவர் இதை செய்துகொண்டிருந்த விதம் சரியா தவறா என்று நான் பார்க்கவில்லை. அவரின் ஈடுபாட்டை மட்டுமே பார்த்தேன். சிறிய கருவியானாலும் அதை முழு ஈடுபாட்டுடன் கையாண்டால் பிரமாதமானவற்றை செய்ய முடியும்," என்று கூறிய சத்குரு, "ஒரு அணு கூட சிறிதுதான், அதனை ஒரு மைக்ரோஸ்கோப் பயன்படுத்தினாலும் பார்க்க முடியாது. ஆனால் அதுதான் இந்த பிரபஞ்சத்திற்கே அடிப்படையாக இருக்கிறது. சின்ன சின்ன விஷயங்களைக் கூட முழு ஈடுபாட்டுடன் செய்தால், அது உங்களுக்குள் பல அற்புதங்களை நிகழ்த்தும்," என்று ஈடுபாட்டின் உன்னத்தை எளிமையாக உணர்த்தினார்.

அடுத்து வரும் 19 நாட்கள், நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் முழு ஈடுபாட்டுடன் இருப்பது அவசியம்," என்று அவர் சொன்னது ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தியது.

கேள்வி நேரத்தின்போது பெங்களூரைச் சேர்ந்த திருமதி ஐஷ்வர்யா, திருமணமான பெண்கள் ஏன் நெற்றியின் உச்சியில் குங்குமம் வைக்கிறார்கள் என்று கேட்டபோது...

"நம் கலாச்சரத்தில் ஒரு பெண் நெற்றி வகுட்டில் வைத்திருக்கும் குங்குமமும் அவள் காலில் போட்டிருக்கும் மெட்டியும்தான் அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதற்கு அடையாளமாக இருந்தது. அதைப் பார்த்தவர்கள், அவளைத் தொந்தரவு செய்யக்கூடாது, அவளுக்குத் திருமணமாகிவிட்டது என்று புரிந்துகொண்டனர். அது மட்டுமில்லாமல், சுத்தமான குங்குமம் மஞ்சளால் செய்யப்பட்டது, அதற்கென ஒரு தனித்தன்மை இருக்கிறது. அதை பயன்படுத்துவதால் பல நன்மைகள் உள்ளன.

நம் கலாச்சாரத்தில் திருமணமான பெண்களை எப்போதும் தேவி என்றே அழைத்தார்கள். இதற்கு முக்கியக் காரணம், ஒரு பெண்ணிற்கு திருமணமான பிறகு அவளுடைய ஹார்மோன்களின் தேவை நிறைவு பெற்றுவிடுவதால், அவளுக்குள் குடிகொண்டிருக்கும் தெய்வீகத்தை அங்கீகரிக்கும் விதமாக அவளை தேவி என்றே நம் கலாச்சாரத்தில் அழைத்து வந்தார்கள்," என்றவர் வார்த்தைகளில் இருந்த ஆழத்தை உணர்ந்த மக்கள் சற்றே மனத்தில் தெளிவு பெற்றவர்களாய் விடை பெற்றார்கள்.

இதே பகுதியில் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள், நேரடிப் பகிர்வுகளுடன் மீண்டும் மற்றுமொரு தரிசன நேரத்தில் இணைவோம்.

வணக்கம்