தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லத்திலேயே இன்று மாலை தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.

மாலை 6.20 திற்கு துவங்கும் தரிசன நேரத்தில் நடைபெறும் நிகழ்வுகளை, சத்குரு உரையிலிருந்து சில துளிகளை, பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரஸ்ய பதில்களை, இங்கே உங்களுக்காக பதிவேற்றவுள்ளோம்! தொடர்பில் இருங்கள்…


வெந்தனலில் வெந்து போகும் வெகு தீவிரத்துடன் இன்றைய தரிசன நேரம் துவங்கியது. சத்குரு "பூதேஷ..." மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்க தெய்வீக சக்தியினை ஸ்பரிசிக்காதவர்களுக்கும் தெய்வீகம் இறங்கி வந்து அருள் கரம் நீட்டியதை இன்று உணராதவர்கள் இருந்திருக்க முடியாது.

பாவ ஸ்பந்தனா பரவசத் துளிகள்...!

உள்ளே தடைகள் உடைந்து பூப்போல் ஆகி உன்னில் நானா, என்னில் நீயா என்று புரியாத பொழுதில், ஒன்று மட்டுமே உண்மை என்று ஒரு வினாடி உணர்ந்த பொழுதில் வெடித்த அந்த போரானந்தம், உயிரில் கலந்த அந்தத் துளி, ஒருவர் வாழ்வை மாற்றிடும் அற்புதம் நிகழ்வது பாவ ஸ்பந்தனாவில் மட்டுமே.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உயிர்கள் உருமாறும் இந்த விநோத நிகழ்வில் தன்னார்வத் தொண்டு செய்வதுதான் எத்தனை பாக்கியம். பசித்தவர் சுவைத்தார் என்றால் பரிமாறியவரோ கரைந்தார்! ஒருமுறை இருமுறை அல்ல, நூறு முறை பாவ ஸபந்தனா தன்னார்வத் தொண்டு!!

சச்சின் டென்டுல்கரான ஈரோடு ராமலிங்கம் ஐயா

கரைய மிச்சம் என்ன இருக்கிறது? கிடைத்தது இன்று குருவருள் திரு. இராமலிங்கம் அவர்களுக்கு. கண்களில் அருள் வழங்கி, கைகளில் ஆசி வழங்கி, கூட்டத்தில் அங்கீகாரம் அளித்த குரு முன்னே அந்த 67 வயதான வாலிபரை, சதமடித்த சச்சினோ என்று சத்குரு அழைக்க, கூட்டம் கரவொலியில்...

புரியவில்லையா...? தொடர்ந்து 100 பாவ ஸ்பந்தனா வகுப்புகளுக்கு தன்னார்வத் தொண்டு செய்த திரு. இராமலிங்கம் முன் வரிசையில் குழந்தைபோல் வந்தமர, இன்றைய தரிசன நேரத்தில் அவரை வாழ்த்தி, அருளும் வழங்கினார் சத்குரு.

சத்குருவின் மந்திர குரலுக்கு அனைவரும் மயங்கிக் கிடக்க, பாவ ஸ்பந்தனா நிகழ்ச்சியின் ஈர்ப்பு விசையைப் பற்றி தொடர்ந்து பேசினார். பாவ ஸ்பந்தனா நிகழ்ச்சி ஏற்படுத்திய அனுபவத்தில்தான் இன்று ஈஷா ஒரு அமைப்பாக எழுந்து நிற்கிறது. தனக்குள் ஏற்பட்ட அனுபவத்தில்தான் இன்று பலபேர் ஈஷாவுடன் எழுந்து நிற்கின்றனர் என்றார்.

நம் வாழ்க்கையில், நம் வாழ்க்கைத் துணையால் ஏற்படுத்த முடியாத தாக்கத்தை, நம் குழந்தையால் ஏற்படுத்த முடியாத தாக்கத்தை, நம் பெற்றோரால் நம்மேல் ஏற்படுத்த இயலாத தாக்கத்தை ஒரு ஈஷா வகுப்பில் ஆசிரியராய் இருப்பதன் மூலமும் ஒரு ஈஷா யோகா வகுப்பில் தன்னார்வத் தொண்டராய் இருப்பதன் மூலமும் ஏற்படுத்த முடியும். மக்கள் நம் கண் முன் மலர்வதை காண்பதை விட ஒரு பேரின்பம் வேறெங்கும் கிடைக்காது. வாழ்வின் அர்த்தம் உணர்த்தும் ஒர் அற்புத வாய்ப்பு தன்னார்வத் தொண்டு என்றார் சத்குரு.

பசுமையான நினைவுகள்...

பாவ ஸ்பந்தனா நிகழ்ச்சி பற்றி பேசத் துவங்கிய சத்குரு, கொஞ்சம் தன் பழைய பாவ ஸ்பந்தனா ஞாபகங்களை அசை போட பூங்காற்றாய் நம்மை வருடிச் சென்றது அவரது அனுபவம். தான், தன் மனைவி விஜி, மற்றுமொரு சின்ன பையன் என்று மூவர் மட்டுமே தன்னார்வத் தொண்டு செய்து, வகுப்பெடுத்து, சமைத்துப் போட்ட காலங்களை வெகு நேர்த்தியாக விமர்சித்தார்.

21 பங்கேற்பாளர்கள், 3 தன்னார்வத் தொண்டர்கள் - இப்படியொரு அமைப்பில் அரங்கேறியது முதல் பாவ ஸ்பந்தனா வகுப்பு. எதேச்சையாக, இதே அமைப்புடன் முதல் முறையாக அமெரிக்காவில் நடைபெற்ற பாவ ஸ்பந்தனா வகுப்பு நிகழ்ந்ததையும் சிலாகித்து நினைவுக் கொண்டார்.

ஆனால் இப்போது, அமெரிக்காவிலும் கூட 700-900 தன்னார்வத் தொண்டர்கள் பாவ ஸ்பந்தனா நிகழ்ச்சிகளுக்கு வந்து விடுகின்றனர் என்று பூரிப்புடன் பகிர்ந்துகொண்டார். தன் எல்லைகளை உடைத்து, பிறர் மலர்வதை காணும் பாக்கியம் அனைவருக்கும் கிட்டுவதல்ல. இதுபோன்ற ஒரிடத்தில் வாழ்வதற்கு பேரருள் வேண்டும் என்றார்.

ஒரு சுதந்திர போராட்டம் நடந்தால் நம்மால் மக்களை கூட்டிவிட முடியும், ஒரு எதிர்ப்பு/ஒழிப்பு போராட்டம் நிகழ்ந்தால் நம்மால் மக்களை திரட்டிவிட முடியும். ஆனால் எவ்வித எதிரியும் இல்லாமல் தன்னை தீவிரப்படுத்திக் கொள்வதற்கு ஆட்களை திரட்டுவது வெகு சுலபமல்ல. எதையும் எதிர்க்காமல் ஒரு தனி மனிதர் மிகுந்த தீவிரத்தோடு உயிர்த்து எழுவது, நிகழும் ஒர் அற்புதமே பாவ ஸ்பந்தனா.

"மென்காற்றின் விளை சுகமே சுகத்தில் உறும் பயனே
உகந்த தண்ணீரிடை மலர்ந்த சுகந்த மணமலரே"

என்கிற அனுபவ வார்த்தைகள் புத்திக்கு புலப்பட்டது இன்று.

மற்றுமொரு தித்திக்கும் தரிசன நேரத்தின் வழியே உம்மை மீண்டும் தீண்டுவோம்! வணக்கம்.