தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லத்திலேயே இன்று மாலை தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.

மாலை 6.20 திற்கு துவங்கும் தரிசன நேரத்தில் நடைபெறும் நிகழ்வுகளை, சத்குரு உரையிலிருந்து சில துளிகளை, பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரஸ்ய பதில்களை, இங்கே உங்களுக்காக பதிவேற்றவுள்ளோம்! தொடர்பில் இருங்கள்…

ஆசிரமவாசிகள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் பெரும் எண்ணிக்கையும், ஞாயிற்றுக்கிழமை ஆனதால் பொது மக்கள் கூட்டமும் சந்திரகுண்டத்தின் முன் திரண்டிருக்க சத்குருவின் தரிசனம் துவங்கியது.

"யோக யோக யோகீஸ்வராய, பூத பூத பூதேஸ்வராய..."

மந்திர உச்சாடனையை சத்குரு துவங்கியதும் பின் தொடர்ந்து அவருடன் உச்சரித்ததில் அனைவரும் புரியாத ஒருவித தெய்வீக அதிர்வில் ஆட்கொள்ளப்பட்டனர்.

ஒருசில நிமிடங்கள் தொடர்ந்த அந்த உச்சாடனையைத் தொடர்ந்து தன் உரையை துவக்கினார் சத்குரு.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சுழற்சியை உடையுங்கள்!

"சிலரது வாழ்க்கை 20, 25 வருடங்களாக ஒரே போல்தான் நகர்ந்து வருகிறது. புதிதாய் ஒன்றும் அவர்கள் வாழ்க்கையில் உணர்ந்ததாய் தெரியவில்லை. அதே கோபம்; அதே வெறுப்பு என தொடர்ந்து ஒரே தன்மையையே இப்போதும் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். மக்கள் பலரும் இப்படி ஒரே சுழற்சியில் சிக்கி திரும்பத் திரும்ப தாங்கள் செய்ததையே செய்கிறார்கள். அவர்கள் வாழ்வில் புதிதாய் அதையும் கற்றுக்கொள்வதில்லை.

பாரம்பரியமாக இந்த சுழற்சியை 'சம்சாரா' என்று சொல்வார்கள். ஆனால் தமிழில் சம்சாரம் என்பது மனைவியைக் குறிக்கும் (அனைவரும் சிரிக்கிறார்கள்). சம்சாரா'விலிருந்து சந்நியாசத்திற்கு பரிணமிப்பதே நோக்கமாகும்.

பொருள்தன்மையுடன் அடையாளம் கொண்டிருப்பதால் இந்தச் சுழற்சியில் சிக்கியுள்ளீர்கள். ஏனென்றால் பொருள்தன்மையின் இயல்பே சுழற்சியில் இருப்பதுதான்."

இப்படி தனது நீண்ட உரையை வழங்கிய சத்குரு, பொருள்தன்மையைக் கடப்பதன் தேவையை உணர்த்தினார்.

ஞானியிடம் கேள்விகள்...

"எனக்கு 20 வயதாகிறது, இப்போது யுனிவர்சிட்டியில் படித்துக் கொண்டிருக்கிறேன், சமூகத்திலும் ஆன்மீகப் பாதையிலும் என்னை சமன்படுத்திக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?"

இப்படி அந்த வெளிநாட்டு இளைஞர் கேட்டபோது...

"தற்காலிக தேவைக்கும், கவர்ந்திழுக்கும் ஆடம்பர எண்ணத்தை நோக்கியும் உங்கள் செயல்பாடுகள் இல்லாமல், உண்மையிலேயே இந்த உலகிற்கு என்ன தேவை என்று செயல்படத் தேவை இருக்கிறது. தற்போதைய சூழ்நிலைக்காகவும் நெருக்கடிக்காகவும் இதையும் அதையும் செய்து கொண்டிருந்தால், அதில் எந்த அர்த்தமும் இருக்காது. இப்போது பலரும் இப்படித்தான் எதை நோக்கிச் செல்கிறோம் என்பதை அறியாமல், தங்கள் வாழ்கையைக் கழித்து வருகிறார்கள். பள்ளிக்கூடம், கல்லூரி, பிஹெச்.டி பட்டம் என இதையெல்லாம் முடித்து ஒருவன் வெளி வரும்போது, அவனின் 70 சதவிகித இயல்பான புத்திச்சாலித்தனம் காணாமல் போய்விடுகிறது என ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது.

நீங்கள் யுனிவர்சிட்டிக்காக இல்லாமல், இந்த யுனிவர்ஸுக்காக (பிரபஞ்சம்) வாழுங்கள்"

இப்படி இன்னும் விரிவாக பதிலளித்த சத்குரு 20 வயதில் அந்த இளைஞருக்குள் எழுந்த அந்த கேள்வியையும் அவரது ஆவலையும் சிந்தித்து செயல்படும் திசையில் செலுத்தினார்.

"நான் என் குழந்தைகளுக்காகத் தான் வாழ வேண்டுமா? எனக்கென வாழக்கூடாதா? இப்படி சுயநலமாய் சிந்திப்பது தவறா?"

இப்படி ஒரு பெண்மணி ஆதங்கத்துடன் கேட்க...

"சுயநலத்தில் தவறில்லை; சுயநலத்திலும் நீங்கள் கஞ்சத்தனமாக இருப்பதுதான் தவறு. நான், எனது என்று வாழ வேண்டும் என நினைப்பதில் தவறில்லை; ஆனால், வளர்ச்சியடையாமல் வாழ்வதைப் பற்றி யோசித்தால், அது அப்படி நடக்காது," என்றுக் கூறிய சத்குரு,

தான் பொள்ளாச்சி அருகில், முதலாவது பாவ ஸ்பந்தனா மற்றும் சம்யமா வகுப்புகளை வழங்கியபோது, நடந்த ஒரு அதிசய நிகழ்வை சுட்டிக் காட்டினார்.

அங்கே பூ பூக்காத செண்பக மரம் ஒன்றை வெட்டிக் கொண்டிருந்தவர்களைத் தடுத்து, பாவ ஸ்பந்தனா முடியும் வரை அவகாசம் வாங்கியதையும், அடுத்த ஓரிரு நாளில் அந்த மரம் தான் மலர்ந்தால்தான் வாழமுடியும் என உணர்ந்து மாலை வேளையில் பூ பூத்த அதிசய நிகழ்வைக் கூறினார்.

நிறைவில், கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய, அருள் தந்து விடைபெற்றார் சத்குரு.

விரைவில் இன்னொரு தரிசனத்திற்கு காத்திருப்போம்!