தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லத்திலேயே இன்று மாலை தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.

மாலை 6.20 திற்கு துவங்கும் தரிசன நேரத்தில் நடைபெறும் நிகழ்வுகளை, சத்குரு உரையிலிருந்து சில துளிகளை, பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரஸ்ய பதில்களை, இங்கே உங்களுக்காக பதிவேற்றவுள்ளோம்! தொடர்பில் இருங்கள்…

குருவைப் பார்ப்பதும்; குரு வார்த்தையைக் கேட்பதும்; குரு பார்வை படுவதும், வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. இங்கு யாம் பெற்ற இன்பத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதும் இன்னொரு இன்பமே!

ஆம்! இன்று மீண்டும் தரிசித்தோம் சத்குருவை!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இன்றைய தரிசனம் சற்று முன்னதாகவே அறிவிக்கப்பட்டதால், ஆசிரமத்தில் பலருக்கும் கூடுதல் மகிழ்ச்சியானது .

"ஜய ஜய மஹாதேவ சிவஷங்கர ஆதி அனந்த" என்று பாடலைப் பாடிய சத்குரு, தனது உரையைத் துவங்கினார்.

பாரம்பரியம் என்பது கடந்த கால எலும்புக்கூடு!

இன்றைய தரிசனத்தில் சத்குருவின் உரை, நாம் பெருமையாகக் கருதிக் கொள்ளும் பாரம்பரியம் எனும் தன்மையை சாடும்விதமாக அமைந்தது.

"பாரம்பரியம் அல்லது மரபு என்பது முழுமையை உணராததினாலும் பாதுகாப்பற்ற தன்மையின் காரணமாகவுமே கடைபிடிக்கப்படுகிறது. நீங்கள் ஏதாவது ஒரு பாரம்பரியத்துடன் அடையாளப்பட்டுள்ளீர்கள் என்றால் நீங்கள் எலும்புக்கூடுகளை வைத்துள்ளீர்கள் என்று அர்த்தம். பாரம்பரியம் என்பது கடந்த காலத்தின் தொகுப்பே ஆகும். அதில் எதிர்கால சாத்தியக் கூறுகளுக்கு இடமே இல்லை.

இங்கே நீங்கள் யார் என்பதே முக்கியமானது. உங்கள் அப்பா யார்? பாட்டனார் யார் என்று பார்ப்பதில் எந்த பலனும் இல்லை. இப்போது நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதே முக்கியமானது. பாரம்பரியம் இறந்த காலத்தின் எச்சங்களேயாகும். ஆனால் எதிர்காலத்தில் உங்களால் செய்யக் கூடியவை என்னென்ன என்பதுதான் அவசியமானது.

பொதுவாக பயத்தின் அடிப்படையே எதிர்காலத்தில் என்ன நடந்துவிடுமோ என்பதுதான். உதாரணமாக யாரோ ஒருவர் உங்களை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திவிட்டால் நீங்கள் நிச்சயம் பயப்பட மாட்டீர்கள். ஆனால் ஒரு குண்டில்லாத துப்பாக்கியை நெற்றிப் பொட்டில் வைத்து 'சுட்டு விடுவேன்' என்றால், அப்போது பயம் வந்துவிடும். ஏனென்றால் அது எதிர்காலத்தில் நிகழ்வதைக் குறித்தது.

சிலருக்கு தங்களது பாரம்பரியம் குறித்துக் கூறிக்கொள்வதில் அளவிலடங்கா பெருமை உண்டு. ஆனால், பாரம்பரியம் என்பது கடந்தகாலத்தை மட்டுமே கொண்டது. பத்து நிமிட பாரம்பரியம் கூட சிலர் உருவாக்கிக் கொள்கிறார்கள். இப்படி பாரம்பரியத்துடன் அடையாளப்பட்டு நீங்கள் இருந்தால் உங்களிடம் மூட்டை நிறைய எலும்புக்கூடுகள் இருக்கிறதென்று அர்த்தம்."

கூறுபோட்டு எதையும் புரிந்துகொள்ள முடியாது!

தன் கையில் இருந்த ஒரு மலரை நுகர்ந்த சத்குரு, அதனை தன் முன் இருந்தவரிடம் நுகர்ந்து பார்க்கச் சொன்னார்.

"இந்த மலரானது எந்த மரத்தில் இருந்து வந்தது என்பது முக்கியமல்ல, ஆனால் தற்போது எந்த அளவிற்கு நறுமணத்தை பரப்புகிறது என்பதே முக்கியம்.

ஒரு விதை என்பது பிரமாதமான சாத்தியம். ஆனால் அதனை கூறுபோட்டு மரம் எங்கே, இலை எங்கே மலர் எங்கே என்று வெட்டிப்பார்த்து கண்டறிய முயன்றால் அதை அறியமுடியாது.

கர்நாடகாவில், இரணிய கசிபு-பிரகலாதன் நாடகத்தை நிகழ்த்தும் ஒரு நாடகக் கம்பெனியில், இரணிய கசிபு கதாபாத்திரத்தில் நடிப்பவர்க்கும், நாடகத்தின் இயக்குனருக்கும் ஒருமுறை திடீரென்று ஏதோ மோதல் வந்துவிட்டது. அன்றைய தினம் நாடகத்தில், இரணிய கசிபுவாக நடிப்பவர், பிரகலாதனிடம் 'கடவுள் இந்த தூணில் இருக்கிறாரா?' என்று கேட்கும் தனது வழக்கமான டயலாக்கை, வழக்கமான தூணை கை நீட்டிக் காட்டாமல், வேறொரு தூணைக் காட்டி கேட்டு விட்டார்."

பிரித்து உடைத்து பார்த்து கடவுளைக் காண நினைத்தால் அங்கு எதுவும் புரிந்துகொள்ள முடியாது என்பதை இந்த ஜோக்கின் மூலம் விளக்கிய சத்குரு, தனது ஒட்டு மொத்த உரையில் பாரம்பரியம் என நாம் தூக்கிக் கொண்டு அலையும் பழைய எலும்புக் கூடுகளை தூக்கி எறிந்துவிட்டு, புதிய சாத்தியத்திற்கு என்ன வழி என்பதைக் காண்பதே உண்மையை நோக்கி நம்மைக் கொண்டு செல்லும் என்பதை நினைவூட்டினார்.

ஒரு ஹிந்தி மெல்லிசை காற்றில் கலந்து வர, தனது சக்தி அதிர்வுகளை வழங்கி விடைபெற்றார் சத்குரு.