தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லத்திலேயே இன்று மாலை தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.

மாலை 6.20 திற்கு துவங்கும் தரிசன நேரத்தில் நடைபெறும் நிகழ்வுகளை, சத்குரு உரையிலிருந்து சில துளிகளை, பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரஸ்ய பதில்களை, இங்கே உங்களுக்காக பதிவேற்றவுள்ளோம்! தொடர்பில் இருங்கள்…

அருள் மடியும் சத்குரு தரிசனமும் தினம் தினம் கிடைத்தால் அந்த ஆனந்த உணர்வினை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியுமா என்ன?! இன்று ஆசிரமத்தில் சத்குரு தரிசனம் அறிவிக்கப்பட்டபோது அதுபோன்ற ஒரு ஆனந்தம்தான் அனைவரின் உள்ளத்திலும்."பிரம்மானந்த ஸ்வரூபா" உச்சாடனையை சத்குரு துவக்கியவுடன் அனைவரும் சில நிமிடங்கள் சேர்ந்து உச்சரித்தனர். சத்குருவின் இருப்பில், உச்சாடனையின் அதிர்வுகள் அங்கிருந்த அனைவரையும் ஆட்கொண்டது. அதனைத் தொடர்ந்து ராமச்சந்திர மூர்த்தியைப் போற்றிப் பாடப்பட்ட அந்த சமஸ்கிருதப் பாடல் சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினரால் காற்றில் நிறைந்தது. பின்னர், பங்கேற்பாளர்கள் சத்குருவிடம் தங்கள் கேள்விகளைக் கேட்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

Question: நமஸ்காரம் சத்குரு, மனிதன் பிறக்கும்போது நட்சத்திரத்தைக் குறித்துக் கொள்வதும், இறக்கும்போது அந்த நேரத்திற்கான திதியை வைத்து காரியம் செய்வதும் வழக்கத்தில் உள்ளது. அதன் விஞ்ஞானம் என்ன?
சத்குரு:சந்திரனுடைய சுழற்சி அடிப்படையில் நாம் காலண்டர் உருவாக்கினோம். வெள்ளைக்காரர்கள் இங்கு வந்து அவர்களுடையதை கொடுத்து நம்முடையதை மறக்கச் செய்துவிட்டார்கள்.நீங்கள் கண் மூடி உட்கார்ந்தாலே இன்று சந்திரனுடைய நிலை என்ன என்று உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். ஜடப்பொருள்களுக்கெல்லாம் இது தெரிந்திருக்கிறது. கடலுக்கும் கடல் நீரில் இருக்கும் மீன்களுக்கும் இது தெரிந்திருக்கிறது. ஆனால் இன்று எந்த நாள் என்று கேட்டால் இப்போது செல்போனைப் பார்க்கிறோம். நம்முடைய உடல் நிலைக்கும் உணர்வு நிலைக்கும் சந்திரனுடைய சுழற்சிக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. சூரியனிடம் இந்த தொடர்பு இல்லை என்றில்லை. சூரியனுடைய சுழற்சி 12 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கிறது. அதை உணர்ந்து கொள்வது சற்று கடினம். யோகத்தில், நம் கலாச்சாரத்தில் உடல் என்பதை சூட்சும புத்தி என்கிறோம். நாம் சந்திரனுடைய சுழற்சியின் அடிப்படையில் உருவான காலண்டரை பயன்படுத்த வேண்டும். இங்கு நாம் நம்முடைய ஈஷா சம்ஸ்கிருதி குழந்தைகளுக்கு அதையே கற்றுக்கொடுக்கிறோம்.
Question: அம்மன் கோவில்களில் ஏன் சூலம் வைக்கப்பட்டுள்ளது? அதில் எலுமிச்சை பழம் எதற்காகக் குத்துகிறார்கள்?
சத்குரு:திரிசூலம் அவளது ஆயுதம். அவளுக்கு ஏதோ ஒரு பலி கொடுக்க வேண்டும். அவள் அந்த மாதிரி ஒரு நிலையில் இருக்கிறாள். ஒருசிலர் தங்களுடைய தலையையே வெட்டி அர்ப்பணிப்பார்கள். இப்படியும் ஒரு தன்மை யோகத்தில் உள்ளது. ஆனால், நீங்கள் அப்படி செய்யத் தேவையில்லை. சிலர் ஆடு, கோழிகளை அர்ப்பணிக்கிறார்கள். முக்கியமாக உயிரோட்டமான ஏதோ ஒன்றை அர்ப்பணிக்க வேண்டும். அதனால் எலுமிச்சை பழம் அர்ப்பணிக்கிறார்கள். நம் லிங்கபைரவி கோவிலில் எதுவும் வெட்டத் தேவையில்லை. ஆனால் ஏதோ ஒரு அர்ப்பணிப்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும். தியான லிங்கத்திற்கு எதுவும் தேவையில்லை. ஆயிரம் வருடங்கள் ஆனாலும் தியானலிங்கம் அப்படியே இருக்கும். ஆனால் லிங்கபைரவிக்கு ஏதோ ஒன்று கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். பெண் என்றால் அப்படித்தான். அவளை நாம் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். (சிரிப்பலை)
Question: நான் பயிற்சி செய்யும்போதும், வீட்டில் தனியாக இருக்கும்போதும் யாரோ என் காதில் கத்துவது கேட்கிறது. அது என்னவென்று புரியவில்லை. இதனால் உண்டாகும் பயத்திலிருந்து எப்படி வெளிவருவது?
இப்படி ஒரு பெண்மணி கேட்டபோது..."யாரவது உங்கள் காதுகளில் பாடியிருக்கலாம், அது உங்கள் காதுகளில் கத்துவதுபோல் கேட்டிருக்கிறது. சிலர் பாடுவது கூட கத்துவதுபோல்தான் இருக்கும்" இப்படிக் கேள்வியாளரை நையாண்டி செய்த சத்குரு தொடர்ந்து பேசினார்."இங்கே இருக்கும் புளிய மரத்தில் 100 பேய்கள் இருக்கிறதென்றால், உங்கள் மனதில் 1000 பேய்கள் உள்ளன. நீங்கள் ஏதாவது முக்கியமான வேலையைக் கையில் எடுத்து, அதில் முழுமையாக ஈடுபடுங்கள்; இந்த சத்தங்களெல்லாம் அப்போது கேட்காது. ஒருவேளை உங்களுக்கு ஏதும் வேலை இல்லையென்றால் என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு நிறைய வேலைகள் வைத்திருக்கிறேன். ஒருவேளை உங்களை செயலில் ஈடுபடச் சொல்வதற்காக நான் கூட கத்தியிருக்கலாம்" இப்படி சத்குரு பதிலளித்தபோது சிரிப்பலை அடங்க சிறிது நேரமாயிற்று.நிறைவாக, மீண்டும் ராம நாமத்தைச் சொல்லும் ஒரு சமஸ்கிருதப் பாடல் அனைவரின் இதயத்தை வருடிக்கொண்டிருந்தபோது, திருநீற்றை ஆசீர்வத்து தந்ததோடு, அனைவருக்கும் அருள் வழங்கி விடைபெற்றார் சத்குரு.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.