தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லத்திலேயே இன்று மாலை தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.

மாலை 6.20 திற்கு துவங்கும் தரிசன நேரத்தில் நடைபெறும் நிகழ்வுகளை, சத்குரு உரையிலிருந்து சில துளிகளை, பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரஸ்ய பதில்களை, இங்கே உங்களுக்காக பதிவேற்றவுள்ளோம்! தொடர்பில் இருங்கள்…



ஈரப்பதம் செறிந்த காற்றின் ஊடே மயிலிறகு ஒன்று மிதந்து வந்து நாற்காலியில் அமர்வதைப் போல சத்குரு வந்தமரவும் பாடப்பட்ட அந்த ஹிந்தி பாடலில் அங்கிருந்த அனைவரும் கரைந்ததென்னவோ உண்மை!

நேற்று நிறைவுற்ற யோகா வகுப்பைப் பற்றியே இன்று சத்குருவின் உரை அமைந்தது.

"வெளியே பெரிய நகரங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட யோகா வகுப்புகளை விட ஆதியோகி ஆலயத்தில் 3622 பேர் கலந்துகொண்ட இந்த வகுப்பு மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தது. தியான அன்பர்கள் அல்லாத பொதுமக்கள் இவ்வளவு பேர் ஆசிரமம் வந்து தங்கி, யோகா கற்றுச் சென்றது இதுவே முதல்முறை. இது ஒரு வகுப்பாக இல்லாமல் பங்கேற்ற அனைவரின் வாழ்விலும் மறக்கமுடியாத ஒரு நிகழ்வாகவே இருக்கும்" என்று கூறி, தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார் சத்குரு.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

3 வார ஆசிரியர் பயிற்சி

தொடர்ந்து ஈஷா யோகா ஆசிரியர்களைப் பற்றிப் பேசிய சத்குரு, "ஈஷா யோகா ஆசிரியராக வேண்டும் என ஆவலோடு வரும் அனைவரையும் நான் ஆசிரியராக அனுமதிப்பதில்லை; அதற்குக் குறிப்பிட்ட விதத்தில் திறந்த நிலையில் இருப்பது அவசியமாகிறது. ஆறு மாதம், ஒரு வருடம் தீவிரப் பயிற்சிக்குப் பிறகும் பலரை நான் வகுப்பு எடுக்க அனுமதிப்பதில்லை. இது மிகக் கடினமான அணுகுமுறைதான். ஆனால் திறந்த நிலையில் இருக்கும் ஒருவரால்தான் மற்றவர் வாழ்வைத் தொடுவதற்கு வாய்ப்பிருக்கிறது" எனக் கூறினார்.

மேலும், 3 வார யோகா ஆசிரியர் பயிற்சியை ஜனவரி மாதத்திலிருந்து வழங்கவிருப்பதாக சத்குரு தெரிவித்தார். இந்த பயிற்சியை மேற்கொள்பவர்கள் 15 பேர், 20 பேர் சிறிய எண்ணிக்கையிலான மக்களுக்கு வீடியோக்களின் மூலமே வகுப்பை நடத்த முடியும் என்றும் கூறினார்.

இன்டர்நெட் அபாயம்

"முன்பெல்லாம் இளைஞர்களுக்கு அறிவுரை கூற வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே இருந்தார்கள்; ஆனால் இப்போது மீடியாக்கள் மூலமும் ஏன் ஃபேஸ்புக் வழியாகவும் கூட மற்றவர்கள் இளைஞர்கள் வாழ்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். இணையதளங்கள் பல வகையில் நமக்கு உபயோகமாக இருக்கும் அதே வேளையில், இளைஞர்களின் வாழ்வை பெரிதும் பாதிக்கும் ஒன்றாக மாறியுள்ளது எனத் தன் பேச்சின் போக்கை மாற்றிய சத்குரு, தொடர்ந்து வீடியோ கேம் விளையாடும் அமெரிக்க இளைஞர்கள் குறித்தும் அதன் அபாயங்கள் குறித்தும் கவலை தெரிவித்தார்.

குருவிடம் கேட்டவை...

அதிகப்படியான செயல்பாடுள்ள குழந்தைக்கும் மந்தத் தன்மையில் உள்ள ஒரு குழந்தைக்கும் எப்படி கல்வி கற்பிப்பது என ஒரு பள்ளி ஆசிரியர் கேட்க, "பிறக்கும் குழந்தைகளை நீங்கள் இப்படிப்பட்டவர்கள் என அடையாளப் படுத்த வேண்டாம். நீங்கள் பார்க்க முடியாத ஒன்றை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கலாம்." என அவர் எதிர்பார்த்திருக்க முடியாத பதிலைத் தந்தார் சத்குரு.

கருவுற்று இருப்பவர்களுக்காக 'தாய்மை' வகுப்பு அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். தாயாவதற்கு முன் எப்படி என்னைத் தயார் செய்வது என அந்தப் பெண்மணி கேட்டபோது, "ச்சும்மா ஆனந்தமா இரும்மா... அது போதும்" என அவர் கூறிய போது சிரிப்பலை அடித்தது. ஆனால் பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக நீங்கள் குழந்தை பெறாமல் இருந்தால் நாட்டிற்கு மிகவும் நல்லது என்று மென்மையாக அறிவுறுத்தவும் செய்தார் சத்குரு.

இறுதியில் மீண்டும் ஒரு ஹிந்தி மெல்லிசை நம்மை நனைக்க அருள் தந்து விடைபெற்றார் சத்குரு.