எங்கிருந்தாலும் தரிசனம்

இங்கே கோவை ஈஷா யோகா மையத்தில், சில நூறு பேர் சத்குருவின் தரிசனத்தில், அவர் அருளில் திளைக்க காத்திருக்கிறோம். உங்களுக்கும் அந்தப் பட்டியலில் சேர விருப்பமா? இதோ இந்த நேரலை வர்ணனையில் எங்களுடன் இணைந்திருங்கள். மாலை 6.20 மணிக்கு துவங்கும் தரிசன நேரம் முழுமையாக உங்கள் கணினித் திரையில் விரிகிறது…

6:27
மேகங்கள் சூழ்ந்திருக்க, அது தெரியா வண்ணம் பனி படர்ந்திருக்க, சத்குரு வந்து அமர அவர் அன்பின் கதகதப்பில் குளிர் மாயமாய் மறைந்துபோனது.

6:39

“பொதுவாக நம் அனைவருக்கும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான மூளை இருக்கும்போது. அனைவருக்கும் அதே திறன் இருக்கும்போது, ஒருவரின் மூளை புத்திசாலித்தனத்துடன் ஜொலிப்பதற்கும், இன்னொருவர் சொல்லமுடியாத துன்பத்திற்கு ஆளாவதற்கும் காரணமென்ன? இதற்கு பல விஷயங்கள் தேவை, ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக எண்ணங்கள், உணர்ச்சிகள், சக்தி என்று எல்லா நிலைகளிலும் ஒருவர் தனக்குள் சமநிலையைக் கொண்டுவருவது அவசியம். மனித உடலின் மிக அற்புதமான கருவி இப்போது சாபமாக இருப்பதன் காரணமே இந்த சமநிலையின்மை தான்.” என்று கூறி சத்குரு துவங்கினார்.

6:50
“எல்லா மனித அனுபவங்களும் உள்ளிருந்தே வருகிறது, மனிதன் தன்னை எப்படி சமநிலையில் வைப்பது என்று பாராமல் வெளிசூழ்நிலைகளை சரிசெய்ய முயற்சி செய்தால் வேலை செய்யாது. உயிர்த்தன்மையைப் பொருத்தவரை, எப்படி இதை முழுவதுமாக மலரவைப்பது என்று பாராமல், இதை எப்படி துடிப்பாக வைத்துக்கொள்வது என்று பாராமல், என்ன செய்தாலும் பிரச்சனைகள் தீராது. இதற்கு அடிப்படையாக முதலில் ஒருவருக்கு சமநிலை தேவை. இந்த சமநிலையைக் கொண்டுவர யோக முறையில் பல பயிற்சிகள் உள்ளன. எனக்குள் நிகழ்வது அனைத்திற்கும் நானே பொறுப்பு, இவை என் கர்மா, அனைத்தும் என் செயல் என்று பார்ப்பது இதில் முதன்முதல் படி.” என்று சத்குரு கூறினார்.

7:11

உயர்ந்த பரிமாணங்களில் எத்தனை நிலைகள் உள்ளன, அதில் எப்படி உயர்வது என்று ஒருவர் கேட்க, “உங்கள் அனுபவத்தில், மனிதர்களே பரிணாம வளர்ச்சியில் பல நிலைகளில் இருப்பதை கவனிக்கிறீர்களா? காலை எழுவது முதல் இரவில் தூங்கச்செல்லும் வரை ஒவ்வொன்றிலும் உங்களால் உங்கள் வாழ்க்கையை எந்த அளவு விழிப்புணர்வாக நடத்த முடிகிறது என்பதே வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. நாள் முழுவதும் ஒவ்வொரு க்ஷணமும் அப்படி நடத்திப்பாருங்கள், உங்களைப் பார்த்து அனைவரும் தலைவணங்குவார்கள்.” என்றார் சத்குரு.

7:24

ஒருவர் இரசவைத்திய முறை பற்றியும், திடப்படுத்தப்பட்ட பாதரசத்தை உடலில் அணிவது பற்றியும் கேட்க, “பாதரசத்தை நாம் பூமியின் இரசம் என்று சொல்வதற்கு காரணமுள்ளது. பூமியில் தண்ணீரின் அடர்த்தியைவிட 14 மடங்கு அடர்த்தி கொண்டபோதும் திரவமாக இருக்கும் ஒரே பொருள் பாதரசம். இதை நாங்கள் இங்கு திடப்படுத்தி பலவிதங்களில் பயன்படுத்தியுள்ளோம், அது அதிசயமல்ல, இது இயற்கையில் திரவமாக இருப்பதே உண்மையான அதிசயம். பலவிதமான பிரதிஷ்டைகளுக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தும் ஞானம் நம் நாட்டில் இருந்துவந்துள்ளது. இதை ஒவ்வொரு நோக்கத்திற்கு பயன்படுத்த ஒவ்வொரு விதமாக முறைப்படி தயார்செய்ய வேண்டும். முதலில் உங்கள் கால்களில் நின்றிடுங்கள், பாதரசத்தின் உதவியை நாடுவது பற்றி பிறகு பார்க்கலாம்” என்றார் சத்குரு.

7:40

உணவைப் பற்றி அனைவரும் மறந்திருந்த போதும், ஆசிரமவாசிகளின் இரண்டாவது வேளை உணவிற்கு நேரமாகிவிட்டது என்று கூறி விடைபெற்றுச்சென்றார் சத்குரு.

 
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert