வேண்டும் ஒரு ஆதியோகி ஆலயம், சுவைக்கும் உறவுகள், குணம் தரும் சத்குருவுடன் ஈஷா யோகா வகுப்புகள், ப்ராணிக் ஹீலிங் எனப் பல கேள்விகளுக்கும், நம் பாரம்பரியமான யோகத்தைப் பற்றியும் இன்றைய தரிசன நேரத்தில் நம்முடன் பேசினார் சத்குரு... 2 மாதங்களுக்கு பிறகு அவரைக் கண்ட கண்கள் ஈரம் சொறிந்தன, நெஞ்சங்கள் அன்பில் நனைந்தன! அதிலிருந்து சில உங்களுக்காக...

 



சூடான காற்று, மண்ணில் சுற்றி சுற்றி வந்தது, எதையோ நமக்கு சொல்வது போல...

மேகங்கள் கருமையாய் எங்கெங்கும் வெறுமையாய், வெப்பத்தில் பல உள்ளங்கள்...

நேற்று நள்ளிரவு திடீரென கோவை வெள்ளியங்கரி அடிவாரத்தின் வானிலை மாறியது. திடீரென வீசியது அந்த மண்வாசனை, எங்கெங்கும் ஆனந்தத் துளிகள்!

சில்லென்று அந்த ஈரம், நம்மை மெல்ல வருடியது! ஆம் இரண்டு மாதங்கள் கழித்து சத்குரு இன்று ஆசிரமம் வந்திருக்கிறார். அவர் இல்லாத போது எல்லா செயல்களும் திட்டமிட்டபடியே நடந்தன. தியானமும் யோகமும் குறைவின்றி நிகழ்ந்தன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆனால் இத்தனை நாள் தன் குருவின்றி, வெப்பத்தில் உள்ளங்கள் வாடவில்லை, தீவிரத்தில் தீர்ந்து போனது கொஞ்சம் ஈரமே!! ஏக்கத்தில் தேக்கம் கொள்ளவில்லை, ஆனால் அன்பு தாகத்தில் கண்ணீர் கொஞ்சம் காணாமல் போனது. இனி சத்குரு ஆசிரமத்தில், உள்ளங்கள் ஆனந்த வெள்ளத்தில்!

யோக மையத்தில் நேற்று நள்ளிரவில் கால் பதித்த சத்குரு, ஏக்கம் கொண்ட உள்ளங்களுக்கு பரிசாய் அறிவித்தார் தரிசன நேரத்தை. ஆதியோகி ஆலயம் தேனீக் கூடென முழுமையாய் நிரம்பி வழிய எங்கிருந்து கூடியது இந்தக் கூட்டம் என்னும் கேள்வியே மிஞ்சியது...

இனிமையான இசை மாலையுடன் சேர்ந்து சுகம் சேர்க்க, சத்குரு உச்சரித்த முதல் வார்த்தை... தமிழில் பேசணுமா...!!

பலத்த கரவொலிக்கு இடையே தமிழில் பேசத் துவங்கினார்...

"இன்னிக்கு வெளிநாட்டுல யோகா பல வேஷங்கள் போட்டிருக்கு, யோகா அவங்களோடதுன்னு பல பேரு உரிமை கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க. ஐரோப்பாகாரங்க, யோகா உங்க நாட்டோடதுன்னு எங்கயாவது எழுதி வச்சிருக்கீங்களான்னு நம்மகிட்ட கேக்றாங்க. இன்னும் கொஞ்சம் நாளைக்கு நாம அமைதியா இருந்தா யோகா அவங்களோடதுன்னு வரலாற்றுல மாத்தி எழுதிடுவாங்க. அவங்களுக்கு எப்படி வேணுமோ அப்படி தானே இன்னிக்கு வரலாற்றை எழுதி வச்சிருக்காங்க.

இதனால தான் நாம 21 நாள், 21 வாரம் ஹட யோக பயிற்சி வகுப்பெல்லாம் துவங்கி நடத்திட்டு வர்றோம். கடந்த சில மாதங்களா வெளிநாடுகளுக்கு போயி, அவங்களுக்கு இத உணர்த்த முயற்சி செஞ்சிட்டு இருக்கோம்.

அடுத்த 10 வருஷத்துல நாம மனித நலத்தை மனசுல வச்சு, மாற்றம் ஏற்படுத்த எதாவது முயற்சி செய்யலன்னா அப்புறம் மாற்ற இயலாத அளவுக்கு இந்த சமூகம் மாறிப் போயிடும். அதனால அடுத்த 10 வருஷத்துல 25 ஆதியோகி கோவிலாவது நாம உருவாக்கணும். வெளிநாடுகள்லேயும் சரி, நம்ம நாட்டுலேயும் சரி, இந்த கோவில்கள் உருவாக்கப்படணும்.

இந்தியாவுல முதல் சூரியோதயம் நடக்குற அருணாச்சல பிரதேசத்துல ஆதியோகிக்கு ஆலயம் கட்டணும்ணு நமக்கு விருப்பம். இதுக்கு அருணாச்சல பிரதேச அரசாங்கம் நிலம் கொடுத்து கோவில உருவாக்குறதுக்கு துணை நிக்குறாங்க.

மனித சமூகத்துல மாற்றம் ஏற்படுத்துறதுக்காக அமெரிக்காவுல சில முக்கிய மனிதர்களை சந்திச்சு நான் பேச்சு நடத்திட்டு இருக்கேன்.

அமெரிக்காவுல ப்ளு ஜீன்ஸ் போட்டா நம்ம ப்ளு ஜீன்ஸ் போடுவோம். அமெரிக்காவுல கார்பன் டை ஆக்ஸைட கூல் ட்ரிங்ஸா குடிச்சா நாமளும் அத குடிப்போம். அப்போ அமெரிக்காவ தியானம் பண்ண வெச்சிட்டா? நாமளும் தியானம் பண்ணிடுவோம் தானே? அதுக்கு தான் இந்த முயற்சி..." என்றார் ஆதியோகி ஆலயத்தின் முக்கியத்துவத்தை நம் இதயத்தில் பதிக்கும் வகையில்.

கூடியிருந்த கூட்டம் அருளில் திளைக்க, கேள்விகள் அற்றுப் போனது இன்றைய தரிசனம். ஒரு சிலருக்கு கேள்விகள் எழும்பவே தரிசனம் நேரம் 8 மணி வரை நீண்டது. ப்ராணிக் ஹீலிங், தன் உறவை கையாள்வது, ஆதியோகி ஆலய அமைப்புமுறை, சத்குருவுடன் நடைபெறவிருக்கும் ஈஷா யோகா வகுப்புகள் என்று சில கேள்விகள் கேட்கப்பட்டன.

சிலர் வாய்மொழியால் கேட்ட கேள்விகளுக்கு ஒலிபெருக்கி மூலம் விடை கிடைக்க, பலர் மனதால் எழுப்பிய கேள்விகளுக்கு அருளே விடையாய் கிடைத்தது.

கோவிலுக்கு வந்திருந்தோரும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஒன்று கூடியோரும் என அழையாமல் நிரம்பியது அரங்கு. குருவைக் காணக் கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்தால் 15,000 பேரை தனக்குள் பொருத்திக் கொள்ளக் கூடிய ஆதியோகி ஆலயமும் விரைவில் பத்தாமல் போய்விடும் என்பது திண்ணம்.

மற்றொரு அருள் பொழியும் தரிசன நேரத்தில் இணைவோம்... வணக்கம்!