தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லத்திலேயே இன்று மாலை தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.

மாலை 6.20 திற்கு துவங்கும் தரிசன நேரத்தில் நடைபெறும் நிகழ்வுகளை, சத்குரு உரையிலிருந்து சில துளிகளை, பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரஸ்ய பதில்களை, இங்கே உங்களுக்காக பதிவேற்றவுள்ளோம்! தொடர்பில் இருங்கள்…



வானின் மேகங்கள் அனைத்தும் கொட்டித் தீர்ப்பதென்று முடிவெடுத்த பின் சந்திரகுண்ட தரிசனத்திற்கு சாத்தியமேது?! சாரம் நிறைந்த ஈஷா மையம் எங்கும் ஈரம் நிறைந்ததால், ஆதியோகி ஆலயத்தில் தரிசனம் தந்தார் சத்குரு.

"இயற்கை என்னும் இறைவன் கண்டேன்..."

சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் அந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்த அதே வேளையில் சத்குருவின் சக்தியதிர்வுகளும் நம்மை ஆட்டுவித்தன.

ச்சும்மா உக்காருங்க...

"நீங்க இங்க உக்கார்ந்து இருக்கீங்க, ஆனால் உங்க உடலும் மனமும் ஏதேதோ பேசிக்குது," என தனது பேச்சை ஆரம்பித்த சத்குரு, அந்த ஜோக்கை கூறினார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நண்பர் 1: நான் என் மனைவியிடம் பேசி பல வருடங்கள் ஆகிவிட்டன

நண்மர் 2: ஏன்

நண்பர் 1: நான் அவள் பேசும்போது குறுக்கிட விரும்புவதில்லை

நமது உடலும் மனமும் பேசுவதை நிறுத்தினால்தான், நமக்குள் இருக்கும் உயிரின் மூலம் பேச ஆரம்பிக்கும் என்று கூறிய சத்குரு கேள்விகளுக்கு கையசைத்தார்.

ஞானக் கடலுக்குள் கேள்வித் துடுப்புகள்...

இன்று கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் 21 வார ஹட யோக ஆசிரியர் பயிற்சியைப் பற்றியே அமைந்தன.

நீங்கள் எங்களுக்கு கற்றுத் தரும் இந்தப் பயிற்சிகளை நீங்கள் யாரிடமிருந்து எப்படிக் கற்றீர்கள் எனக் கேள்வி வந்தபோது, இந்த கலாச்சாரத்தில் யோகா தொடர்பான எந்தக் குறிப்புகளும் ஒருபோதும் எழுதப் படவில்லை. ஏனென்றால் எழுதிவிட்டால் அதிலுள்ள உயிர்ப்பும் சாரமும் குறைந்துவிடும். இது ஒரு தகவல் சார்ந்த அறிவில்லை. தகவல்கள் சேர்த்துக் கொள்வது புத்திசாலித்தனம் இல்லை. இந்தக் கலாச்சாரத்தில் யோகா பற்றிய அறிவு என்பது உயிர்ப் பரிமாற்றம் மூலமே தொடர்ந்து வந்துள்ளது.

நீங்கள் யோகா கற்பிப்பதற்கு தகவல்கள் தேவைப்படலாம். ஆனால் யோகாவை அறிய வேண்டும் என்றால் அப்போது அது தேவைப்படாது என்று கூறிய சத்குரு, நான் என் குருவிடமிருந்து 'மெமெரி ஸ்ட்டிக்'கை வாங்கியுள்ளேன்; இதுதான் நான் யோகா அறிந்துகொண்ட வழி எனச் சொல்லிச் சிரித்தார்.

ஏன் 21 வாரம்...

21 என்ற எண் யோகாவில் தனித்துவம் வாய்ந்த எண் என்று விளக்கிய சத்குரு, எப்படியும் உங்களுக்கு 6 மாதத்திற்குத்தான் வீசா அனுமதி கிடைக்கும் என நகைச்சுவையுடன் பதிலளித்தார்.

இடது - வலது

பெண்மைக்குரிய பக்கமாக இடப் பக்கம் இருப்பதற்குரிய விளக்கத்தை அளித்த சத்குரு, சிவன் சப்தரிஷிகளுக்கு யோகம் கற்பிப்பதைப் பார்த்த பார்வதி, தனக்கும் கற்பிக்கும்படி கேட்ட போது, பார்வதியை தனது இடப்பக்கத்தில் மடியில் அமரச் சொன்ன சிவன் அப்படியே தன் இடப்பாகமாக ஒன்றிணைத்துக் கொண்டார். என அந்தப் புராண நிகழ்வை எடுத்துரைத்தார்.

கைலாஷ் யாத்ரா...

"நான் கைலாஷ் கிளம்புறேன், ஆதியோகிட்ட கேக்குறதுக்கு ஏதாவது கேள்வி இருந்தா சொல்லுங்க, நான் கேட்டுட்டு வர்ரேன்..." எனக் கூறி உரையை முடித்தார் சத்குரு.

ஹிந்தி மெல்லிசையோட சத்குருவின் சக்தியதிர்வுகள் அரங்கம் நிறைக்க தரிசனம் நிறைவுற்றது.

கைலாயம் செல்லும் சத்குரு மீண்டும் நம்மோடு தரிசன நேரத்தில் இணைய சில வாரங்கள் பிடிக்கலாம். இந்த தரிசன நேரம் தரும் நினைவுகளோடு இணைந்திருப்போம்.