எங்கிருந்தாலும் தரிசனம்

முகம் காண ஏங்கிய அனைவருக்கும் கிடைத்தது குருவின் தரிசனம், இன்றைய தரிசன நேரத்தின் தொகுப்பு தொலைவில் ஏங்கும் உங்களுக்கும் இப்போது…

தரிசன அறிவிப்பு இன்று சற்று சீக்கிரமே கிடைத்ததால் ஆசிரமவாசிகளும் தன்னார்வத் தொண்டர்களும் மாலை வேளையை எதிர்நோக்கி ஆர்வமாகத் தயாராகினர்.

இன்று தரிசன நேரத்தில் சத்குருவின் உரை புத்தாண்டை வரவேற்பதாகவும் முந்தைய ஆண்டுகளின் நினைவு கூர்வதாகவும் வெகு சுவாரஸ்யமாய அமைந்தது. இங்கே அந்த உரையின் சிறிய தொகுப்பு

ஈஷா 20 ஆண்டுகள்

“1993 ஆம் ஆண்டு முதல் முதலாக இந்த வெள்ளியங்கிரியை அடைந்து ஏழாவது மலையை பார்த்தேன். 1994 ஜூன் மாதத்தில் துவங்கிய 90 ஹோல்னெஸ் நிகழ்ச்சி, ஒரு குடிசையாக இருந்த ‘கைவல்ய குடிரில்’ வைத்து நடந்தது. அந்த ஹோல்னெஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தங்களின் உள்நிலை மாற்றத்துடன், என்னையே நான் மாற்றிக்கொள்வதையும் அவர்கள் கண்டனர்.

முதன்முதலாக அந்த நிகழ்ச்சியில்தான் ஒரு கோயில் உருவாக்குவது பற்றி பேசினேன். நான் கோயில் என்று பேசுவதைக் கண்ட சிலர் அதிர்ச்சியானார்கள்; சிலர் ஆச்சர்யப்பட்டார்கள்.

ஏனென்றால் அதுவரை என்னுடைய அணுகுமுறை முற்றிலும் வேறுவிதமாக இருந்தது. திடீரென்று கோயில் உருவாக்குவதைப் பற்றி பேசியது அவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.

1993ஆம் ஆண்டு ஈஷா அறக்கட்டளை முறைப்படி பதிவு செய்யப்பட்ட நாளில் என்னுடன் இருந்தவர்களின் உற்சாகம் இன்னும் குறையவில்லை. அவர்கள் இந்த செயல்களையெல்லாம் எந்த பிரதிபலனும் பார்த்து செய்யவில்லை.

பாட்டி! – முதல் ஆசிரமாவாசி

நான் நேற்று ஆதியோகி ஆலயம் சென்றபோது ஈஷாவின் முதல் ஆசிரமாவாசியான அந்த பாட்டியைப் பார்த்தேன். அந்தப் பாட்டிதான் எங்களுக்கெல்லாம் சமைப்பார். அவரைப் பார்த்தவுடன் எனக்கு பழைய ஞாபகங்களெல்லாம் வந்துவிட்டன. இங்கே கடந்த 20 வருடங்களாக இருந்தவர்கள், 20 வருடங்களை வாழவில்லை, 20 ஜென்மங்களை வாழ்ந்திருக்கிறார்கள் என்பதே உண்மை. அவர்களின் செயல்பாடுகளிலும், உணரும் அனுபவங்களிலும் அவர்கள் 20 ஜென்மங்கள் அளவிற்கு வாழ்ந்திருக்கிறார்கள். ஈஷாவில் இருப்பவர்களெல்லாம் தங்களுக்குள் ஒருவித நிறைவுடன் வாழ்கிறார்கள்.

புத்தாண்டைக் கொண்டாடுவோம்!

ஈஷா 20 வருடங்களாக பலவித செயல்பாடுகளில் திளைத்திருக்கிறது. நான் மேலும் மேலும் காரியங்களை ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டே சென்றாலும், அதனை முழு ஆர்வத்துடன் இங்கிருப்பவ்ர்கள் இன்முகத்துடன் செய்துவருகிறார்கள். நாம் ஈஷாவின் 20 வருடங்களைக் கடந்து, இப்போது 2014 என்ற புத்தாண்டுக்குள் நிழையவிருக்கிறோம். இந்த புத்தாண்டை நாம் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்!”

பேராசையா? காதலா? வேட்கையா?

“என்னைப் பற்றி என்னிடம் ஒருவர் சொல்லும்போது ‘நீங்கள் வாழ்க்கையின் மீது பேராசை கொண்டவர்’ என்றார். நான் சொன்னேன். ‘இல்லை, நான் வாழ்க்கை மீது தனியா வேட்கை கொண்டவன்’ என்றேன். நான் ஏன் வாழ்க்கை மீது காதல் கொண்டவன் என்று சொல்லாமல் வேட்கை கொண்டவன் என்று கூறினேன் என்றால், காதல் என்பது நம் துணைவர் ஒத்துழைக்கவில்லை என்றால் முடிந்துபோய்விடும், ஆனால் வேட்கைக்குத் துணை தேவையில்லை.”

கேள்வி நேரம்…

படைத்தவன் ஏன் படைத்தான்?

“ஏன் படைத்தவன் இந்த படைத்தல்களையெல்லாம் உருவாக்கினான்? என்ற ஒருவர் கேட்க, நீங்கள் வாழ்க்கையை உணர்ந்து இந்தக் கேள்வியைக் கேட்டால் நான் வேறுவிதமாக பதில் சொல்வேன். நீங்கள் தீவிர வழியினாலோ அல்லது தீவிர பரவசத்திலோ வாழ்க்கையை உணர்ந்து அதன் காரணமாக இந்தக் கேள்வி உங்களுக்குள் எழுந்திருந்தால் நீங்கள் எங்கிருந்து கேட்டாலும் அதற்கான பதிலை நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.” என்றார்.

ஏன் இந்த சடங்குகள்?

குறிப்பிட்ட விதமாக வணங்குவது, லிங்கத்திற்குப் பால் ஊற்றுவது இதுபோன்ற சடங்குகளெல்லாம் தேவையா? என்று ஒருவர் கேட்டபோது சடங்குகளின் அழகையும் அதன் முக்கியத்துவத்தையும் பற்றி விளக்கிய சத்குரு.

“சடங்குகளில் எந்தக் குறையுமில்லை. ஆனால் சிலர் அதனைத் தவறாகப் பயன்படுத்தியதுதான் பிரச்சனை. நாளை ஒருவர் பல் துலக்கும் பிரஷ்ஷை வைத்து ஒருவரைக் கொலை செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். உடனே, டூத் பிரஷ்ஷை நாம் தடை செய்து, எங்கேயும் இருக்கக் கூடாது என்று சொல்லிவிடலாமா?”

என்ற கேள்வியை எழுப்பியதோடு, சடங்குகளைச் செய்பவர்கள் போலியாக இல்லாமல் இருப்பதன் தேவையை உணர்த்தினார் சத்குரு.

அந்த அற்புத தருணத்தில் அங்கு ஆசிபெற வந்திருந்த புது மணத் தம்பதியினரை வாழ்த்தி ஆசீர்வத்த சத்குரு உற்சாகக் கைதட்டலுடன் விடை பெற்றார்.

இன்னொரு தரிசனத்திற்காகக் காத்திருப்போம்!
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert