முகம் காண ஏங்கிய அனைவருக்கும் கிடைத்தது குருவின் தரிசனம், இன்றைய தரிசன நேரத்தின் தொகுப்பு தொலைவில் ஏங்கும் உங்களுக்கும் இப்போது...

'சத்குரு ஆசிரமத்தில் இருக்கிறாரா?; இன்று தரிசனம் உண்டா?' என்றவாறு வெளி ஊர்களிலிருந்து வந்திருந்தவர்களும் ஈஷா தன்னார்வத் தொண்டர்களும் கேட்டுக் கொண்டே இருக்க, 'தெரியவில்லை; தகவல் ஏதுமில்லை' என்ற பதிலே மாலை வரை வந்தது. மாலை 4 மணியளவில் திடீரென்று, தரிசனம் உண்டு என்ற தகவல் வர, பரபரப்பாக தரிசன அரங்கமான சந்திரகுண்ட மண்டபத்தில் ஒலியமைப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

எதிர்பார்த்தவர்களும் எதிர்பார்ப்பின்றி இருந்தவர்களும் உளம் மகிழும்படி, இன்று தரிசன நேரத்தில் காட்சி தந்தார் சத்குரு.

கண்களை மூடச் சொல்லி குறிப்பு கொடுத்துவிட்டு, "கற்பூர கௌரம் கருணாவதாரம்..." தனது தெய்வீக அதிர்வுகள் நிறைந்த குரலில் சத்குரு பாட, சுற்றியிருந்த வெளியோடு மனிதர்களும் சக்தியதிர்வுகளால் நிறைந்தனர்.

ஆன்மீகம் என்பது பலவீனமல்ல!

"தியான நிலையில் இருந்தால் நமது செயல்பாடுகளிலும் நடவடிக்கைகளிலும் மென்மையான தன்மை இயல்பாகவே இருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மென்மையான தன்மையை பலவீனமென்றே பலரும் நினைக்கிறார்கள். ஒருவர் நடந்து செல்வதை வைத்தே அவர் தியான அன்பரா இல்லையா எனச் சொல்லிவிட முடியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

" இப்படி தன் பேச்சைத் துவங்கிய சத்குரு, ஒருவரின் நடவடிக்கையை வைத்து அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை அறிய முடியும் என்பதை உணர்த்தக் கூடிய ஒரு நிகழ்வைக் கூறினார்.

"ராமகிருஷ்ணரின் சமாதிக்குப் பிறகு அவரது கருத்துக்களை மேலை நாடுகளில் சென்று பரப்புவதற்காக சாரதா தேவியிடம் உத்தரவு பெறச் சென்றார் விவேகானந்தர். சமையல் செய்து கொண்டிருந்த சாரதா தேவி, அவர் சொல்வதை ஏறெடுத்துக் கூடப் பார்க்காமல், சமையல் செய்த படியே 'அந்தக் கத்தியை எடுத்துக் கொடு' என்றார்.

விவேகானந்தர் கத்தியை எடுத்து தந்தவுடன் 'நீ தாராளமாக போகலாம். அங்கு சென்று குருவின் கருத்துக்களைப் பரப்பலாம்' என்றார். விவேகானந்தர் கத்தியை நேர்த்தியுடன் சாரதா தேவியிடம் கொடுத்த பாங்கினைப் பார்த்தே அவர் அப்படி தீர்மானித்தார். எனவே நீங்கள் நிற்கும்போதும் நடக்கும்போதும் உண்ணும்போதும் மூச்சு விடும்போதும் நேர்த்தியாக மென்மையுடன் செய்யுங்கள். நீங்கள் தியானத்தன்மையுடன் இருந்தால் அந்த மென்மை தன்மை தானாகவே வரும்."

இப்படி நமது நடவடிக்கைகளில் இருக்க வேண்டிய நேர்த்தியின் முக்கியத்துவத்தை உணர்த்தினார்.

பைரவியின் கைகளில் ஏன் ஆயுதமில்லை?

"நம் நாட்டில் பெண் தெய்வங்கள் எல்லோருக்கும் கையில் ஏதாவது ஆயுதங்கள் இல்லாமல் இல்லை. ஆனால், லிங்கபைரவிக்கு பத்துக் கைகள் இருந்தும் ஏன் அவள் கையில் ஆயுதம் ஏதுமில்லை என இன்று என்னிடம் ஒருவர் கேட்டார். மகிஷாசுரனை வதம் செய்தாகிவிட்டது; அவள் வென்றுவிட்டாள்; அங்கே இப்போது ஆயுதங்களுக்கு அவசியமில்லை. அவள் வன்முறையைக் கடந்தவள். எனவே அவள் கைகளில் ஆயுதங்கள் இல்லை. நீங்கள் வன்முறையை விட்டு விட நினைத்தால் அது முடியாது. அதனைக் கடந்து செல்லத்தான் முடியும். பைரவிக்கு விரிந்த பெரிய கண்கள் இருந்தாலும் அவளிடம் வன்முறை இல்லை. அவள் வெற்றியடைந்தவள். அவள் வன்முறையைக் கடந்தவள்"

பைரவியைப் பற்றி இந்த ஒரு கோணத்தில் சத்குரு பேசியது மிகவும் சுவாரஸ்யமாக அமைந்தது.

தூக்கமும் விழிப்புணர்வும்

தூங்கும்போது விழிப்புணர்வுடன் இருப்பது பற்றிய கேள்விக்கு பதில் கூறிய சத்குரு,"விழிப்புணர்வு என்பது நாம் செய்வதல்ல; அது நம் மன நிலையில் இருப்பதல்ல; எச்சரிக்கையுணர்வுடன் விழிப்பாக இருப்பது விழிப்புணர்வு ஆகாது. மனநிலையில் உள்ள விழிப்பு நிலை உங்கள் செயல்பாடுகளை மேம்படுத்துமே தவிர விழிப்புணர்வாகாது.

சாலையின் நடுவே படுத்துக் கிடந்த ஒருவனைக் கடந்து சென்ற குடிகாரன், 'இவன் என்னைப் போல போதையைத் தாங்கக் கூடியவன் இல்லை; விழுந்துவிட்டான்' என்று கூறிச் சென்றான். நோய் வாய்ப்பட்ட பெண் ஒருத்தி, அவனைக் கடந்து சென்றபோது அவனுக்கு சில்லறைக் காசை 'பாவம்' எனக்கூறி போட்டுச் சென்றாள். அந்த வழிவந்த ஒரு யோகியோ 'படுத்திருந்தவரின் காலைத் தொட்டுக் கும்பிட்டு, அவர் இருக்கும் சமாதி நிலையை உணர்ந்து வணங்கினார்.

" இந்தக் குட்டிக் கதையைக் கூறிய சத்குரு ஒவ்வொருவரும் அவரவர் விழிப்புணர்வுக்கு ஏற்ப உலகைக் காண்கிறார்கள் என்பதை உணர்த்தினார்.

மேலும் அவர், "தூக்கத்தை நீங்கள் குறிப்பிட்ட விதத்தில் தூங்க முயற்சிக்க வேண்டாம்; தூங்கும்போது அதில் முழுமையாக லயித்து தூங்குங்கள்!" என்றார்.

63 நாயன்மார்களைப் போற்றிப் பாடப்பட்ட "தில்லைவாழ் அந்தணர்க்கு அடியார்க்கு மடியேன்..." என்ற திருத்தொண்டர் தொகைப் பாடலை சமஸ்கிருதி மாணவர்கள் பாட, அருள் தந்து விடை பெற்றார் சத்குரு.

மீண்டும் ஒரு தரிசன நேரத்தில் இணைவோம்!