Question: சத்குரு, உங்களைப் பார்த்த பின் என் வாழ்க்கையே மாறிவிட்டது. பல ஈஷா தியான அன்பர்களுக்கும் இது அனுபவப்பூர்வமான உண்மை. இத்தனைக்கும், நீங்கள் என்னைப் பார்ப்பது இதுவே முதல்முறை. அப்படி இருக்கையில், எங்களைப் பார்க்காமலேயே உங்கள் அருள் எங்களுக்கு பரிபூரணமாய் கிடைக்கின்றதே அது எப்படி என்று சொல்ல முடியுமா?

சத்குரு:

கௌரவர்கள் திரௌபதியை சபையில் துகிலுரித்த போது அங்கு கிருஷ்ணன் இல்லை. கிருஷ்ணனுக்கு அது பற்றி தெரியவும் தெரியாது. அவன் ராஜசுய யாகத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தான். கிருஷ்ணன் மேல் காழ்ப்புணர்ச்சியுடன் இருந்த ஷல்வா என்ற அரசன் துவாராகாவை சூறையாடி இருந்தான். மக்களைக் கொன்று, வீடுகளை எரித்து, ஆவணங்களையும் காண்பவை அனைத்தையும் சூறையாடி இருந்தான். தங்களைக் காப்பாற்றிக் கொள்ள சில யாதவர்கள் காட்டுக்குள் சென்று ஒளிந்து கொண்டனர். உச்சகட்டமாய் கிருஷ்ணனின் தந்தை வசுதேவரையும் ஷல்வா கடத்திச் சென்றிருந்தான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
ஆன்மீக சாதனைக்குள் உங்களுக்கு தீட்சை அளிக்கும்போதே ஒரு குறிப்பிட்ட அளவிலான சக்தி உங்களுக்காக முதலீடு செய்யப்படுகிறது.

கிருஷ்ணன் துவாரகையை அடைந்த சமயத்தில், அவ்விடம் முழுவதுமாக எரிந்து தீர்ந்து, சின்னா பின்னமாகி இருந்தது. பிழைத்தவர்களோ பதுங்கி இருந்தனர். அவர்களுக்கு விமோச்சனமாய் கிருஷ்ணன் அவ்விடத்திற்கு வர, மெல்ல வெளியே தலை காட்டத் துவங்கினர். நகரை சீரமைக்க, மறு கட்டமைப்பு செய்ய என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவை எல்லாவற்றிற்கும் ஏற்பாடு செய்த கிருஷ்ணன், தன் மகனை தன் தந்தையை மீட்டுவர அனுப்பி வைத்தான். இவையெல்லாம் நடந்து கொண்டிருந்ததால், ஹஸ்தினாபுரியில் நிகழ்ந்ததை அவன் அறிந்திருக்கவில்லை.

திரௌபதியை சூழ்ந்துள்ள இக்கட்டினை அறியாமல், கிருஷ்ணன் எப்படி அவளுக்கு உதவினான்? அவள் காப்பாற்றப்பட்ட அதிசயம்தான் என்ன? இது அருளின் வழி. ஒரு சிலர் மென்மையாகவும், வேறு சிலர் நக்கலாகவும், மற்றும் சிலரோ பழிப்பது போலவும் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதுண்டு “அருள் எவ்வாறு வேலை செய்கிறது?”

அருள் வேலை செய்ய, என் மனதளவில் உங்களுக்கு என்ன நிகழ்கிறது என்று நான் அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆன்மீக சாதனைக்குள் உங்களுக்கு தீட்சை அளிக்கும்போதே ஒரு குறிப்பிட்ட அளவிலான சக்தி உங்களுக்காக முதலீடு செய்யப்படுகிறது. அது அருளாய் செயல்படுகிறது. யாருக்காவது என்ன நிகழ்கிறது என்று அறிந்து கொள்ள விரும்பினால் என்னால் அறிந்துகொள்ள முடியும் என்பது வேறு விஷயம். ஆனால், பெரும்பாலான சமயங்களில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வமில்லை. உங்களில் உள்வாங்கிக் கொள்ளும் திறனோடு இருப்பவர்களுக்கு அருள் வேலை செய்யும். உள்வாங்கிக் கொள்ளும் திறன் இல்லாதவர்களுக்கு அருள் வேலை செய்யாது.

இதே பொருள் தரும் வகையில், உதவா கிருஷ்ணனிடம் ஒருமுறை இவ்வாறு கேட்டான்... “பல சூழ்நிலைகளில், சந்தேகத்திற்கு இடமில்லாமல் உன்னை தெய்வத்தின் வார்ப்பாகவே பார்த்திருக்கிறேன். ஒரு மனிதனை மீறிய சமாச்சாரங்கள் பல உன்னிடத்தில் உண்டு. அப்படியிருக்கையில், உன் விரலின் ஒரு சொடுக்கில் எப்படி உன்னால் மக்களின் குறைகளை தீர்க்க இயலாமல் போகிறது?” அதற்கு கிருஷ்ணன், “பெற்றுக் கொள்பவர் முழு நம்பிக்கையுடன் இருந்தாலே ஒழிய யாராலும் அற்புதங்களை நிகழ்த்த முடியாது. உள்வாங்கிக் கொள்ளும் திறனும், நம்பிக்கையும் இல்லாமல் அந்த மஹாதேவனாலும் அற்புதங்களைச் செய்ய இயலாது. மக்கள் நம்பிக்கையற்று இருக்கும்போது, அற்புதங்களை எதிர்பார்க்காதீர்கள்,” என்றான்.

அழகான கதை ஒன்றுள்ளது... கிருஷ்ணன் ஒரு நாள் மதிய உணவு உண்டுக் கொண்டிருந்தான். சத்யபாமா அவனுக்குப் பரிமாறிக் கொண்டிருந்தாள். பாதி உணவில், “என் பக்தன் ஒருவன் இடைஞ்சலில் இருக்கிறான், நான் போக வேண்டும்” என்று எழுந்தான். கை கழுவி விடைபெற்றான். வாசலை அடையும் முன் சற்றே நின்ற கிருஷ்ணன், திரும்பி வீட்டிற்குள் வந்தான். “பாதியில் கை கழுவி எழுந்து சென்றீர்கள், திரும்பி வந்து விட்டீர்களே என்ன?” என்றாள் சத்யபாமா. “என் பக்தன் ஒருவன், ஒரு காட்டில் கண்களை மூடி ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என்று மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தான். பசித்திருந்த புலி ஒன்று அவனை அணுகியது. அதனால் அவனைக் காப்போம் என்று நான் கிளம்பினேன். ஆனால், நான் வாயிலை அடைந்த நேரத்தில், அந்த முட்டாள் கல் ஒன்றைக் கையிலெடுத்திருந்தான். எனவே நான் திரும்பி வந்துவிட்டேன்” என்றான் கிருஷ்ணன்.

அருள் வேலை செய்ய, அருளின் ஊற்றாய் இருப்பவர் அந்தச் சூழ்நிலையைப் பற்றி மனதளவில் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தீட்சையின் மூலம் போதுமான சக்தி முதலீடு செய்யப்படுகிறது, அதனால் அருள் சுயமாக வேலை செய்கிறது. உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கோட்டாவை நீங்கள் திறந்தால் போதும். அற்புதத்தைப் பற்றி மக்கள் கற்பனை செய்து கொள்வதைப் போல் நீங்கள் நம்பிக்கையைப் புரிந்துகொள்ள வேண்டாம். அற்புதங்களைப் பற்றி பேசுபவர்கள் தங்கள் கற்பனையோட்டத்தை கட்டுப்படுத்தும் நிலையில் இல்லை.

கிருஷ்ணன் தன் வாழ்நாளில், பல பேர் தன் மீது நம்பிக்கை கொள்ளும் விதத்தில் இருந்தான். எனினும், அவனுடைய உண்மையான தன்மையின் அளவை மக்கள் அறியவில்லை. இதுபோன்ற சூழ்நிலையே மாமனிதர்களுக்கு ஏற்படுகிறது. மாமனிதர்கள் தோன்றும்போது, பேரற்புதமான நிகழ்வுகள் நடைபெறவில்லை. அவர்கள் அதற்கெல்லாம் அப்பாற்பட்ட நிலையில் இருந்தனர். ஒருவிதத்தில் பார்த்தால், இடைநிலை தகுதியுள்ளவர்கள் நன்றாகவே செயல்புரிந்தார்கள் என்று சொல்லலாம். இந்த இடைநிலை மனிதர்களால் மக்களுக்கு உச்சபட்ச விடுதலையை வழங்க முடியாவிட்டாலும், மக்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் அவர்களால் செயல்பட முடிந்தது.

உங்களுக்குள் போதுமான திறந்த நிலையில் இருந்தால் மட்டுமே அருள் உங்களை அடையும், அருளுக்கு நீங்கள் பாத்திரமாக முடியும். உங்களை ஒருபுறம் வைக்க நீங்கள் சித்தமாய் இருக்கிறீர்கள் என்று இதற்கு அர்த்தம். “கிருஷ்ணா, கிருஷ்ணா” என்று அழைத்து விட்டு, பிறகு கல்லை எடுத்தால் அது வேலை செய்யாது. அதைப் போலவே, “சத்குரு, சத்குரு” என்று சொல்லிக் கொண்டே கல்லையும் எடுத்தால், நானே விரும்பினாலும் அருள் வேலை செய்யாது. ஏனெனில், அருள் மிக சூட்சுமமானது. நான் ஏற்கனவே கூறியது போல, யார் மூலம் அருள் உங்களுக்கு செயல்படுகிறதோ அவருக்கு உங்களுக்கு என்ன நடக்கிறது என்று மனதளவில் தெரிந்திருக்கத் தேவையில்லை. அதனால்தான் கிருஷ்ணனும் திரௌபதிக்கு நேர்ந்த அவலத்தை, அந்தச் சம்பவம் நேர்ந்த கணத்திலேயே தெரிந்திருக்கவில்லை. இருந்தும் அவளுக்கு அருள் வேலை செய்தது.