"பதின்ம வயதில் குதூகலம், நடுத்தர வயதில் டென்ஷன், முதுமை என்றாலே நோய்!" - இது எங்கும் எழுதப்படாத விதியாகவே இன்று நிலவி வருகிறது. அதனால் முதுமை என்றாலே அச்சம் தொற்றிக் கொள்கிறது. ஆனால் இதுபோன்ற சூழ்நிலையை அநாயாசயமாக கையாண்டு வாழ்க்கையை ஒரு உயிர்ப்புடன் வாழ நாம் அடித்தளம் அமைக்க முடிந்தால் என்றென்றும் பதினாறுதான் என்கிறார் சத்குரு...

சத்குரு:

வாழ்ந்த வருடங்களை வைத்து யாருடைய வயதையும் நான் எடை போடுவதில்லை. அவர்களுடைய அணுகுமுறையை வைத்துத்தான் வயதானவர்களா, இளமையானவர்களா என்று முடிவு செய்கிறேன்.

இளமையில் குதித்திருப்பீர்கள். ஓடியிருப்பீர்கள். வயதேறிய பின், அதெல்லாம் முடியாமல் போகலாம். அதற்காக மனதளவில் ஓய்ந்து விடுவதா? கால்பந்தாட்ட மைதானத்தில் வேடிக்கை பார்ப்பவர்கள் மத்தியில் இருக்கும் உற்சாகத்தைக் கவனித்திருக்கிறீர்களா? விளையாட்டில் ஈடுபட்டு இருக்கும் வீரரைப் போன்ற அதே துடிப்பு இருக்கும்.

20 வயதிலேயே 60 வயதுக் கிழவன் போல் சிந்தித்து கொள்பவர்களை 1,000 வயதாகிவிட்ட முதியவர்களாகத்தான் பார்ப்பேன்.

அதேபோல், உடல்ரீதியான மூப்பு வந்தாலும், ஆடும் நாற்காலியில் அமர்ந்து கூட மனதளவில், விளையாட்டு மைதானத்தில் இருப்பவர்போல் நீங்கள் உற்சாகமாக வாழ்க்கையை ரசிக்கலாம். வருடங்கள் செல்லச் செல்ல, உடல்ரீதியான திறன் குறையலாமே தவிர, மனரீதியாக எந்தக் குறைவும் இருக்கக் கூடாது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எனக்கு 11 வயதிருக்கும். எங்கள் வீட்டுப் புழக்கடையில் மிகப் பெரிய கிணறு ஒன்று இருந்தது. 60 அடி ஆழத்தில் இருக்கும் தண்ணீரில் குதித்து, யார் முதலில் வருவது என்று போட்டியில் ஈடுபட்டு இருந்தோம். எதிலும் வேகமாக ஏறுவதில் முன்னணியில் இருந்த நான்தான் ஒவ்வொரு முறையும் முதலாவதாக வந்து கொண்டு இருந்தேன்.

அந்த நேரத்தில் வயதான ஒருவர் வந்தார். சரேலெனத் தண்ணீரில் குதித்தார். என்னைவிட வேகமாக வெளியே வந்தார். அவர் மல்லாடிஹல்லி சுவாமி என்ற உன்னதமான யோகி என்றும், அவருக்கு அப்போது வயது 81 என்றும் அறிந்து வியந்து போனேன். எனக்கு யோகாவில் ஆர்வம் வரக் காரணமே அவர்தான்.

வாரத்துக்கு ஒருமுறை திங்கட்கிழமைகளில் அவர் ஆயுர்வேத மருத்துவராகச் செயல்படுவார். அதிகாலை 4 மணிக்கு நோயாளிகளைப் பார்க்கத் துவங்கிவிடுவார். ஒருமுறை வெளியூர் சென்றிருந்த அவர், கடைசி ரயிலைத் தவற விட்டுவிட்டார். தன்னைப் பார்க்க வரும் நோயாளிகள் ஏமாற்றம் அடையக்கூடாது என்பதற்காக மொத்தத் தொலைவையும் அவர் ரயில் பாதையிலேயே ஓடி, விடிவதற்குள் ஊர் வந்து சேர்ந்த நிகழ்வு உண்டு. 80 வயதைக் கடந்த ஒருவர் அந்த அளவுக்குத் தன் உடலைப் பேணிப் பராமரித்திருந்தார்.

90 வயதிலும் ஒருவர் இளைஞரைப் போல் பேசுகிறார். இளைஞரைப் போல் சிந்திக்கிறார். இளைஞரைப் போல் துடிப்புள்ளவராக இருக்கிறார் என்றால், அவரை நான் இளைஞராகத்தான் கருதுவேன். 20 வயதிலேயே 60 வயதுக் கிழவன் போல் சிந்தித்து கொள்பவர்களை 1,000 வயதாகிவிட்ட முதியவர்களாகத்தான் பார்ப்பேன்.

முன்பெல்லாம் 60 வயதுக்கு மேலாகிவிட்டால், 'வானப்பிரஸ்தா' என்ற ஆசிரம வாழ்க்கையை மேற்கொள்ளும் வழக்கம் இருந்தது. அதாவது, நகரத்திலிருந்து ஒதுங்கி விலகி, வனத்துக்குச் சென்று வசதிகளை எதிர்பார்க்காமல் வாழ்வது. வனத்தில் வாழ வேண்டும் என்றால், எந்த அளவுக்கு உடலைச் சீராகப் பராமரித்திருக்க வேண்டும் என்று யோசியுங்கள்.

எத்தனை வருடங்கள் வாழ்கிறீர்கள் என்பதை விட, எந்த அளவு உயிர்ப்புடன் இருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

உண்மையில், முதுமை என்பது ஒரு வரம். குழந்தையாக இருந்தபோது, எல்லாம் சுகமாக இருந்தது. ஆனால், அப்போது நீங்கள் விரைவாக வளர்ந்துவிடப் பிரியப்பட்டீர்கள். இளமையில் உடலும், புத்திசாலித்திறனும் உச்ச கதியில் இருந்தபோது, பாலியல் கவர்ச்சிகள் குறுக்கிட்டு உங்களை திசை திருப்பிவிட்டன.

வாழ்க்கையின் அனுபவங்கள் எல்லாம் கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில், வாழ்க்கையை முழுமையாக வாழ நீங்கள் பிரியப்படும்போது, உடல் ஒத்துழைக்கவில்லை என்றால் எத்தனை கொடுமை!

'45 வயதாகிவிட்டதா, ரத்தக் கொதிப்பெல்லாம் சாதாரணம். 50 வயதென்றால், சர்க்கரை வியாதி வந்தால் தப்பில்லை. எனக்குக் கூட அப்படித்தான் இருக்கிறது' என்று டாக்டர்களே இன்றைக்குச் சொல்கிறார்கள். வயதானவர்கள் நிறையப் பேரை மருத்துவமனையில் பார்ப்பதால், வயதானால் நோய்வாய்ப்படுவது சகஜம் என்று நினைக்கிறோம். அது தவறு. நோய் என்பது சகஜமானது அல்ல. ஆரோக்கியம் என்பதுதான் சாதாரணமானது. நோய் என்றாலே அசாதாரணமானது என்றுதான் அர்த்தம். நோய் வருவதெல்லாம் கடவுள் செயல் என்று வெளியில் சொல்லிக் கொண்டாலும், மனதளவில் உங்களுக்கு உண்மை தெரியும்.

நீங்கள் அறிந்த வாழ்க்கையே உங்கள் உடலைச் சுற்றித்தான் எழுப்பப்பட்டு இருக்கிறது. போதைப் பொருட்களுக்கு அடிமையானால், உங்கள் நரம்பு மண்டலம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி, முதுமை என்பது மிக வேதனையான உடல்நிலையைத் தரக்கூடும். நோய் தாக்கினால், பல சமயங்களில் அந்தக் கவலை உள்ளிருந்தே அரித்துத் தின்றுவிடும். நினைவில் கொள்ளுங்கள்.

உண்மையில், நோய்க்கும், வயதுக்கும் சம்பந்தம் இல்லை. வயது தானாக வருகிறது. அது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால், நோயும், ஆரோக்கியமும் உங்கள் கைகளில்தான் இருக்கின்றன. சரியில்லாத உணவு, முறையற்ற வாழ்க்கைமுறை, மோசமான நடத்தை இவற்றின் காரணமாக நோய் வந்தால், அதற்கு யார் பொறுப்பு?

எத்தனை வருடங்கள் வாழ்கிறீர்கள் என்பதை விட, எந்த அளவு உயிர்ப்புடன் இருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

யோகா, பிராணாயாமா போன்ற அற்புதப் பயிற்சிகள் உங்கள் உடலை மட்டுமல்ல. உங்கள் உயிர்த்தன்மையையும் சிறப்பாக வைத்திருக்க உதவுகின்றன.

வயதாவதற்கு முன்பே, வாழ்க்கையில், உடலைத் தாண்டியதொரு பரிமாணம் இருப்பதை நீங்கள் உணர வேண்டும். அதை உணர்ந்துவிட்டால், பிறகு மூப்பு என்ன, மரணமே வந்தாலும் எதுவும் உங்களைத் தொந்தரவு செய்யாது!

nanda_uforians @ flickr