பிரபல சந்தைத் துறை ஆய்வாளர் திரு. சைமன் கெம்ப் அவர்கள், சத்குருவைப் பேட்டி எடுத்த போது தனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறார்...

சைமன் கெம்ப், சந்தைத்துறை ஆய்வாளர்

“சமீபத்தில், உலகப் புகழ்பெற்ற சத்குரு அவர்களை பேட்டியெடுக்கும் பெருமை எனக்குக் கிடைத்தது.

இந்த உரையாடலில் என்ன எதிர்பார்ப்பது என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை. “தி இந்து” பிஸ்னஸ் லைனை சேர்ந்த பிரசாத் சங்கமேஸ்வரன் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவர், “சத்குரு சில விஷயங்களை மாற்றி யோசிக்க வைப்பார்” எனச் சொன்னார். அவர் சொன்னபோது, சத்குருவுக்கும் எனக்கும் இடையே உள்ள பிடித்தமான அம்சங்களை, அவருக்கும் எனக்கும் இருக்கும் வேலை சார்ந்த அனுபவங்களை என்னால் பொருத்திப் பார்க்க இயலவில்லை.

ஆயினும், என் வாழ்நாளிலேயே எனக்கு மிகுந்த உத்வேகம் அளித்த உரையாடல் இது என்றே நான் சொல்வேன். மார்க்கெட்டிங் துறை வல்லுநர்கள் தங்கள் பாதைகளைத் தொலைத்திருக்கிறார்கள் என்பதற்கு அழகான உதாரணங்களை அவர் எடுத்துக் கூறுவதைப் பார்ப்பீர்கள். நாம் சந்திக்கும் பிரச்சனைகளிலிருந்து வெளி வருவதற்கான வழிகளையும் அவரே சொல்கிறார், அதனையும் வாசிப்பீர்கள்!”

Question: பிறர் நம்மை எப்படிப் பார்ப்பார்கள் என்ற மனநிலையிலேயே பெரும்பாலான வியாபாரிகள் இருக்கிறார்களே தவிர, உள்நோக்கிப் பார்ப்பதில்லை. இது அவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று. வியாபாரங்கள் உள்நிலை மாற்றத்தை நோக்கிச் செயல்படுவது எப்படி?

சத்குரு:

இந்தச் செயல்முறையின் அடிப்படையிலேயே குறைபாடு இருக்கிறது. உங்களை மேம்படுத்திக் கொள்ளாமல் உங்கள் வியாபாரத்தை மேம்படுத்திக்கொள்ள நினைக்கிறீர்கள். ஒரு அம்பாசிடர் காரைக் கொண்டு பார்முலா 1 போட்டியில் பங்கேற்பது போலிருக்கிறது. பார்முலா 1 ஓட்டத்தை அம்பாசிடர் தாங்குமா, வண்டி நொறுங்கிப் போகும். அம்பாசிடரை வைத்துக் கொண்டு பார்முலா 1ல் வெற்றி பெரும் கனவினை ஏற்படுத்திக் கொள்வதை விட, சிறந்த வாகனத்தை உருவாக்குவதில் உங்கள் நேரத்தைச் செலவிடலாம். அதன்பின், உங்கள் வெற்றியும் தோல்வியும், அந்தப் போட்டியில் பிறரது பங்கேற்பு எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து அமையும்.

ஆனால், நாம் பங்கேற்கும்போது நம்முடைய முழுத் திறனுக்கு நாம் பங்கேற்கிறோமா என்பது முக்கியம். நம் தகுதி உச்சகட்டத்தை எட்டியுள்ளதா, கடைநிலையிலா, அல்லது இரண்டிற்கும் இடையிலா? இது நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம். அது மட்டுமல்ல, உங்களுடைய உயர்ந்தபட்ச திறமை என்னவென்று உங்களுக்கே தெரியாது. இந்த பூமியிலுள்ள ஒவ்வொரு ஜீவராசிக்கும் இயற்கை இருகோடுகளை வரைந்துள்ளது, மேலொன்று, கீழொன்று. ஆனால், மனிதனுக்கு மட்டும் கீழ்கோடு மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மேல்கோடு கிடையாது. உங்களது உச்சபட்ச திறனை நீங்கள் எட்டிவிட்டீர்களா என்று உங்களுக்கு தெரியப் போவதில்லை.

நீங்கள் எதைச் சாதித்திருந்தாலும் அதைவிட இன்னும் சிறப்பாய் எதையோ செய்ய வாய்ப்பிருக்கிறது. அதனால், மனிதனை மேம்படுத்துவது முக்கியம். நீங்கள் பந்தயத்தில் வெற்றி பெறுகிறீர்களா இல்லையா என்பது முக்கியமில்லை. தெளிவில்லாத மனிதர்கள் நம்பிக்கையோடு இருப்பதுதான் இன்று உலகில் நிகழும் மிகப் பெரிய அழிவு.

Question: உலகிலுள்ள பெரும்பாலான brandகளுக்கு தெளிவில்லை, ஆனால் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்திக் கொள்கிறார்களே...

சத்குரு:

அதனாலேயே, திரும்பிய திசையெல்லாம் விளம்பரங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவர்களிடத்தே தெளிவில்லை, ஆனால் அளவுக்கதிகமான தன்னம்பிக்கை குடியிருக்கிறது...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

Question: அளவுக்கதிகமான நம்பிக்கை ஏற்படுத்திக் கொள்ளாமல், தெளிவுநிலை அடைய என்ன வழி? உங்கள் அனுபவத்திலிருந்து நீங்கள் பேசினாலும் உங்களுக்குள் அந்தத் தெளிவை நீங்கள் எங்கிருந்து உணர்ந்தீர்கள்?

சத்குரு:

நீங்கள் எதனை கிரகித்துக் கொள்கிறீர்களோ நீங்கள் அதுவாகத்தான் இருப்பீர்கள். நீங்கள் எதனை கிரகிக்கவில்லையோ அது நீங்களாக முடியாது, அல்லவா? நீங்கள் இதைப் பற்றி விழிப்புணர்வாய் இருக்கிறீர்களோ இல்லையோ, மக்களுடைய வாழ்வனுபவம் அவர்கள் கிரகித்துக் கொண்டவற்றை பொருத்தே அமைகிறது. நம் கிரகிப்புத் திறனை மேம்படுத்துவதற்கு பதிலாக நாம் நம்முடைய எண்ண வெளிப்பாட்டினை மேம்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறோம். நீங்கள் சோஷியல் மீடியாவில் இருக்கிறீர்கள்... அவர்களுக்கு தெரிகிறதோ இல்லையோ மக்கள் ஏதோவொன்றை பதிவிட்டுக் கொண்டே இருக்கிறார்கள் அல்லவா? எதையும் கிரகித்துக் கொள்ளாமலேயே, அந்த கருத்தின் வீரியத்தை உணராமலேயே, தன் கருத்தை மக்கள் பதிவிடும் காலமிது. இதனை பேரழிவு என்றுதானே சொல்ல வேண்டும்...

ஒருவர் என்ன சொல்கிறாரோ அதைப் பொருத்தே அந்த மனிதர் யார் என்பது தீர்மானம் ஆகிறது. அவர் எதைப் புரிந்துகொண்டார் என்பதை வைத்து அவரை நாம் அறிந்துகொள்வதில்லை. உங்களைச் சுற்றியுள்ள உலகிலிருந்து இங்கொன்றும் அங்கொன்றுமாய் நீங்கள் சேகரித்த தகவல்களை வைத்துக் கொண்டு, அதன் ஆழம் அறியாமல், பலவிதமான கருத்துகளை நீங்கள் வெளிப்படுத்துகிறீர்கள்.

Question: நிறைய தகவல், நவீன கருவிகள் இவற்றை மிகையாய் சேகரித்து வைத்துக் கொண்டு, போதிய அனுபவம் இல்லாமல் இருப்பது எங்கள் தொழிலில் ஒரு அங்கமாகிவிட்டது. பல giga byte தகவல்கள் பிரயோஜனப்படாமல் தேங்கியுள்ளது...

சத்குரு:

எதையும் ஒருவர் தனக்குள் பொதித்து வைத்துக் கொள்ளும் போது அவர் வீங்கிப் போவது நடக்கத்தானே செய்யும். இது ஆரோக்கியமான போக்கல்ல.

Question: கற்றுக்கொள்ளும் செயல்முறை, சேகரித்து வைத்துள்ள கருத்துக் குவியல்களிலிருந்து கற்பது - இவ்விரண்டில் கற்றுக்கொள்ளும் செயல்முறையை மதிப்புடையதாய் ஆக்குவது எப்படி? இந்தப் பயணத்தை சுமுகமாக்குவது எப்படி?

சத்குரு:

இந்தக் கேள்வியின் அடிப்படையிலேயே தவறு உள்ளது. நீங்கள் இலக்கு சார்ந்த தலைமுறையாய் இன்று மாறிப் போய்விட்டீர்கள். அதாவது, மாம்பழத்தின் சுவைமீது உங்களுக்கு நாட்டமிருக்கிறதே தவிர மரத்தின் வளர்ச்சி மீது அக்கறை இல்லை. மாம்பழங்கள் மரத்திலிருந்து அல்லாமல் சூப்பர்மார்க்கெட்டிலிருந்து வரும் காலத்தில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தோட்டத்தில் மாமரம் இருந்தால் மண், நீர், உரம், சூரியஒளி இவற்றை பற்றியெல்லாம் நீங்கள் சிந்திக்க நேரிடுமே! தற்சமயம், உங்கள் மனதில் இருப்பதெல்லாம் மாம்பழத்தின் சுவை மட்டுமே, அது எப்படியோ நிகழ்கிறது என்று நினைத்துக் கொள்கிறீர்கள். இதனை வேறு விதத்தில் சொல்ல வேண்டுமென்றால், வளர்ச்சி நடக்கும் விதத்தைப் பற்றி உங்களுக்கு அக்கறையில்லை. ஆனால் கனியின் மீது மட்டும் கவனம் இருக்கிறது. இதைத்தான் goal-oriented, இலக்கு சார்ந்த வாழ்க்கைமுறை என்கிறோம்.

உங்களது ஒரு கண் இலக்கின் மீது இருந்தால், ஒரு கண் மட்டுமே பாதை மீது இருக்கும் என்று யோக மரபில் நாம் சொல்வதுண்டு. இது குறைபாடு தானே? வழியை அறிய இரண்டு கண்களையும் பயன்படுத்தினால், உங்கள் திறனிற்கு ஏற்ப தொலைதூரத்தை உங்களால் அடைய முடியுமல்லவா? இந்நிலையில், எவ்வளவு தூரம் நீங்கள் செல்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டாகவே இருக்காது. உங்களால் எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அத்தனை தூரம் செல்லவே நினைப்பீர்கள். இதுவே, இலக்கு சார்ந்த வாழ்க்கை வாழும்போது, உங்கள் அருகாமையில் இருப்பவரைவிட இன்னொரு அடி அதிகமாக செல்ல விரும்புவீர்கள். இன்னொரு மனிதர் உங்களைவிட மோசமான நிலையில் இருக்கிறார் என்பதே வாழ்வில் உங்களுக்கு இருக்கும் ஒரே சந்தோஷமாக இருக்கும். இது சீக்குள்ள மனதின் வெளிப்பாடு.

Question: மார்க்கெட்டிங் துறையில் இருக்கும் என் நண்பர்கள் இலக்குநோக்கி செயல்படும் மனநிலையிலிருந்து மாறுவது எப்படி?

சத்குரு:

Digital to Divine இதுதான் வழி. (டிஜிட்டலிலிருந்து தெய்வீகம்)
தெய்வீகத்தை எங்கு கண்டறிய? குறையுடைய ஒரு வழிமுறையை விடுத்து, நாம் மாற்று வழியை கண்டறிய வேண்டியது அவசியம்.

உசேன் போல்டை முன்மாதிரி மனிதராய், உங்களுக்கு உத்வேகம் கொடுக்கக் கூடியவராய் வைத்துக் கொள்ளலாம், பரவாயில்லை. ஆனால், போதிய பயிற்சி இல்லாமல் அவரைப் போல் ஓட முயன்றால் கால்களை உடைத்துக் கொள்வீர்கள். யாரோ ஒருவருக்கு ஏதோ ஒரு வித்தையில் தேர்ச்சி இருக்கிறது, அவர் செய்கிறார் என்பதற்காக நாமும் அதையே செய்யத் தேவையில்லை. அம்பாசிடர் கார் பார்முலா 1 போட்டிக்கு போவதைப் போன்ற முயற்சி இது.

Question: பெரும்பாலான சமயங்களில் சந்தையில் இருப்பவர்கள் போட்டியாளர்களுடன் மல்லுக்கட்டும் சூழ்நிலை அல்லவா நிலவுகிறது?

சத்குரு:

நாம் செய்யும் மிகப்பெரிய தவறு அது. ஒருவேளை, சச்சின் டெண்டுல்கரை விட உங்களால் சிறப்பாய் பந்தினை அடிக்க முடியுமோ என்னவோ? அந்த வாய்ப்பு இருக்கத்தானே செய்கிறது. அப்படி இருக்கையில், சச்சினைப் போல் விளையாட வேண்டும் என்று எல்லைகள் வகுத்துக் கொள்வது எதற்காக? 30-40 ஓவர்களில் 100 ரன்கள் எடுக்க முடியும் என்பது, ஒரு காலத்தில் கற்பனையிலும் நினைத்துப் பார்த்திராத ஒரு விஷயமாக இருந்தது. இன்று வெறும் 10 ஓவர்களில் அடிக்கிறார்களே! யாரோ செய்த சாதனை இங்கு தடையாய் இல்லையே!

நீங்கள் இலக்கு சார்ந்து செயல்படும்போது, இன்னொருவருடைய தகுதி உங்கள் தகுதியை தடை செய்கிறது. உங்களால் எதைச் செய்ய இயலுமோ அதைச் செய்யாமல் போய்விடுவீர்கள் அல்லவா? உங்களால் பந்தினை உதைக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் வேறெதோ ஒன்றை யாரைவிடவும் சிறப்பாக செய்யக்கூடிய தகுதி உங்களுக்கு இருக்கலாமே! ஆனால், உங்களால் சிறப்பாக செய்யக்கூடிய அந்தவொரு விஷயத்தை நீங்கள் செய்யாமல், பந்தை உதைப்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்துகிறீர்களே!

Question: நினைவுத்திறன் அற்ற அறிவுத்திறனை பற்றி நீங்கள் பேசியிருக்கிறீர்கள். அதனை “சித்தம்” என்கிறீர்கள். தன்னுடைய சித்தத்தினை ஒருவர் தொடர்பு கொள்வது எப்படி?

சத்குரு:

சந்தைத் துறையில் இருப்பவர்களால் அதனை அணுகமுடியாது. மனிதர்களால் மட்டுமே முடியும். உலக பொருளாதார மாநாட்டிற்கு நான் சென்றிருந்தபோது, இந்தியா வளர்ந்து வரும் சந்தை என்று பேசப்பட்டது. இந்தியா வெறும் சந்தை அல்ல. ஒரு தேசத்தை சந்தையாக பார்க்கத் துவங்கினால், நீங்கள் தயாரித்த ஏதோவொரு அபத்தமான பொருளை அவர்களுக்கு வழங்கப் பார்ப்பீர்கள். இதனை குடியுங்கள், அதனை உண்ணுங்கள், அதைப் பூசிக்கொள்ளுங்கள் என்று திணிப்பது மட்டுமே நிகழும். ஒரு மனிதனை மனிதனாய் பார்க்கும்போது, அவன் மீது உண்மையாய் அக்கறை கொள்ளும் போது, அவனுக்கு என்ன தேவையோ அதனை வழங்குவீர்கள். உங்களுக்கு தேவையானதை நீங்கள் சந்தைப்படுத்த தேவையில்லை.

மக்களுக்கு தேவையானதை செய்யாமல், “இதைப் பயன்படுத்திப் பாருங்களேன்” என்று அவர்களிடம் திணிக்கும் போக்கே இன்று மேலோங்கி இருக்கிறது. இப்படிச் செய்யப் போனால், ஒரு தலைமுறை மக்களையே உங்கள் தயாரிப்புகளை ஏற்றுக்கொள்ள வைக்கவேண்டிய நிலை வரும். புகையிலை புகைப்பது மிக அவசியம் என்று முந்தைய தலைமுறையினர் நம்ப வைக்கப்பட்டனர். புகைக்காத ஆண் ஆணில்லை என்று வசனங்கள் பேசப்பட்டன. ஆனால் இன்று, புகையிலை உசத்தி இல்லை. சந்தைப்படுத்துதல் துறையில் இருப்பவர் இதைத்தான் செய்வார்.

Question: நீங்கள் சொல்வது போன்ற உலகில், மார்க்கெட்டிங் எப்படி இருக்கும்?

சத்குரு:

நீங்களும் நானும் நுகர்வோர் விரும்பும் ஏதோவொன்றை தயார் செய்கிறோம். ஆனால், நான் தயாரிக்கும் பொருள்தான் உங்களுக்கு தேவை என்று நுகர்வோரிடம் நீங்கள் சொல்கிறீர்கள். இதுதானே இன்றைய நிலவரம். (உரக்கச் சிரிக்கிறார்)