Question: "என் பெற்றோரை உதாசீனம் செய்துவிட்டு வேலை தொடர்பாக அமெரிக்காவுக்கு வந்தேன். அவர்கள் தனியே கஷ்டப்படுவதாகச் சொன்னபோதுகூட அவர்களைப் பிரிந்தே இருந்துவிட்டேன். அண்மையில் அவர்கள் இருவரும் அடுத்தடுத்து சில மாத இடைவெளியில் இறந்துவிட்டனர். இப்போது குற்ற உணர்வில் தவிக்கிறேன். என் பாவத்துக்கு ஏதாவது பரிகாரம் உண்டா?"

சத்குரு:

பிரச்சனை யாரிடம்?

"பெற்றோர் உயிருடன் இருந்தபோது அவர்கள் அண்மையை நீங்கள் சந்தோஷமாக நினைத்து இருந்தால் பரவாயில்லை. அல்லது அவர்கள் மொத்தமாக விலகிப்போனதற்காகவாவது சந்தோஷப்பட வேண்டும். அப்படி என்றாலும் வேதனை, இப்படி என்றாலும் வேதனை என்றால், என்ன அர்த்தம்? பிரச்சினை அவர்களிடம் இல்லை, உங்களிடம்தான் இருக்கிறது.

வேதனைகளில் இருந்து நீங்கள் விடுபடவேண்டும் என்றால், ஒரேவழிதான். ஒவ்வொரு செயலையும் முழுமையான விழிப்புணர்வுடன் செய்து வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள்.

வழிகாட்டுவதற்குப் பெற்றோர் உயிரோடு இருந்தபோது எரிச்சல். அவர்கள் இல்லாது போனதால், குற்ற உணர்வு. இப்படி எரிச்சல், கோபம், அச்சம், பதற்றம், பொறுமையின்மை, குற்ற உணர்வு என்று எத்தனையோ பெயர்கள் இட்டு வர்ணித்தாலும், எல்லாமே அடிப்படையில் நீங்களாக உற்பத்தி செய்யும் கசப்பான உணர்வுகள்தான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

துன்பம் ஏன்?

உங்கள் மனதை எப்படிக் கையாள்வது என்று புரியாத நிலையில் உங்களால் உணரமுடிவது எல்லாம் சந்தோஷமற்ற மனநிலைதான். சிலருக்குத் திருமணமானால், அது ஒரு துன்பம். ஆகவில்லை என்றால், அது வேறுவிதத் துன்பம். குழந்தை பிறக்காவிட்டால் துன்பம். பிறந்தால், அதிகத் துன்பம்.

மனம் என்பது பல அற்புதங்களைச் செய்விக்க வல்லது. அதைவிடுத்து அது வேதனைகளையும் துன்பங்களையும் உற்பத்தி செய்கிறது என்றால், அதற்கு முழுப்பொறுப்பு நீங்கள்தான்.

வாழ்க்கை முள்ளா? மலரா?

ஒரு கிரேக்கப் பாதிரியார் தன் முதிர்ந்த வயதில், பாரதத்தில் இருக்கும் ஒரு யோகியைப் பற்றி கேள்விப்பட்டு அவரைச் சந்திக்க வந்தார். அவர் தேடிவந்த நேரம், யோகி கண்களை மூடி இருந்தார். அவர் முகத்தில் ஒரு பரவசம் ஒளிர்வதை பாதிரியார் கவனித்தார். யோகி கண்களைத் திறக்க காத்திருந்தார். யோகியே, 45 வருடங்களுக்குமேல் தேவாலயத்தில் சேவை செய்தவன் நான். வாழ்க்கையின் உண்மையான பொருளைத் தெரிந்துகொள்ள வந்தேன்.

யோகி கண்களை மூடி பரவசத்தை ஆழமாக அனுபவித்துச் சொன்னார். 'வாழ்க்கை என்பது தென்றலில் மிதந்துச் செல்லும் மல்லிகையின் வாசம் போன்றது. ரசித்து அனுபவிக்க வேண்டியது'.

'அப்படியா? இயேசுவே முள்முடி அணிந்து இருப்பதைப் பார். வாழ்க்கை என்பது சதா முள்ளைப்போல் குத்தித் துன்பம் தருவது என்றல்லவா எனக்குப் போதித்தவர் சொன்னார்?'

'ஒருவேளை உங்களுக்குப் போதித்தவரின் வாழ்க்கை அப்படிப்பட்டதாக இருக்கலாம்' என்றார் யோகி.

இப்படி வேதனையை மட்டுமே அனுபவிக்கத் தெரிந்தவர்கள், வாழ்க்கையின் அற்புத வாசத்தைத் தவறவிட்டவர்கள்.

வேதனைகளில் இருந்து நீங்கள் விடுபடவேண்டும் என்றால், ஒரேவழிதான். ஒவ்வொரு செயலையும் முழுமையான விழிப்புணர்வுடன் செய்து வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களை நீங்களே உணர்வீர்கள். ஆனந்தத்தை ருசிப்பீர்கள்.