எல்லோருக்கும் இரண்டு தாய்கள் !

எல்லோருக்கும் இரண்டு தாய்கள் !

நம்மவரு நம்மாழ்வார்… பகுதி 6

தாயில்லாமல் இங்கே யாரும் வந்துவிடவில்லை. எல்லோருக்கும் ஒரு தாய் இருக்கிறாள். ஆனால் நம்மாழ்வாரோ, நம் எல்லோருக்கும் இரண்டு தாய்கள் இருப்பதாகக் கூறுகிறார். யார் அந்த இன்னொரு தாய்? இதோ அவரது கட்டுரையில் அறியலாம்!

நம்மாழ்வார்:

எல்லோருக்கும் இரண்டு தாய்கள்!

தாயும் தந்தையும் ஒருவர்தானே. இன்னொருவர், விவசாயி. அவர்கள் உடலைத் தந்தார்கள். இவர்கள் உணவைத் தந்தார்கள். உணவு இல்லாத உயிர்களின் வலியை நாம் அறிவோம். நமக்கு உணவு கொடுக்கும் விவசாயியின் வலியை யார் அறிவார்?

விவசாயம் என்பது தொழில் அல்ல, நிலம் என்பது தொழிற்சாலையும் அல்ல. தாய் தன் பிள்ளைக்கு உணவூட்டுவது எப்படி ஒரு தொழிலாக முடியும்?

விவசாயம் என்பது தொழில் அல்ல, நிலம் என்பது தொழிற்சாலையும் அல்ல. தாய் தன் பிள்ளைக்கு உணவூட்டுவது எப்படி ஒரு தொழிலாக முடியும்?
பல்லாண்டுகளாக நமது முன்னோர்கள் மண்ணில் வாழும் உயிர்களுக்கு உணவளிப்பதையே கடமையாகக்கொண்டு இருந்தார்கள். ஆடு, மாடுகளைக்கொண்டு நிலத்தில் கிடை போட்டபோது மண்ணில் உயிர்கள் செழித்து வளர்ந்தன. சிலர் கால்நடை எருவை நிலத்தில் பரப்பி உழவு செய்தார்கள். சிலர் தழை எரு தரும் செடிகளை வளர்த்து மடக்கி உழுதார்கள். சிலர் இலை தழைகளை வெட்டிக் கொண்டு வந்து போட்டுச் சேற்றில் மிதித்தார்கள். சிலர் கதிரை மட்டும் அறுவடை செய்துகொண்டு, கீழ் உள்ள வைக்கோலை நிலத்திலேயே மடிய விட்டார்கள். இவை அனைத்தும் மண்ணில் வாழும் உயிர்களுக்கு உணவாகின.

சூரிய சக்தி நம் தலையைத் தொடும்போது மண்டை வெடித்துவிடும் போல இருக்கிறது. அதுவே பச்சை இலை மேல் படும்போது, சூரிய சக்தி சர்க்கரையாக மாற்றப்படுகிறது. அதாவது பச்சை இலையில் சமையல் நடக்கிறது. இந்தச் சமையலுக்கு மளிகைச் சாமான்கள் வழங்குவது நுண்ணுயிர்கள். இவற்றை, பேக்டீரியா, காளான், பூஞ்சை என்று பல பெயர்களால் அழைக்கிறோம்.

இந்த சின்னஞ்சிறிய உயிர்கள் செய்யும் வேலைகளை விஞ்ஞான மனிதன் செய்ய முயன்று தோற்றுப்போனான். இது எப்படி நடக்கிறது என்று பார்ப்போம்.

இலைக்கும் பச்சையைக் கொடுப்பது நைட்ரஜன். இந்த நைட்ரஜன் காற்று வெளியில் மண்டிக்கிடக்கிறது. அதாவது, காற்றுவெளியில் 78% நைட்ரஜன்தான். இந்த நைட்ரஜனைக் காற்றில் இருந்து பிரிப்பது லேசான காரியம் அல்ல. இந்த அரும் பெரும் செயலை நுண்ணுயிர்கள் செய்கின்றன.

இதே வேலையைச் செய்வதற்காக மனிதன் யூரியாவைத் தயாரித்தான். காற்றில் உள்ள நைட்ரஜனைத்தான் பயன்படுத்தினான். இதற்காக ஆயிரம் மீட்டர் ஆழமான பெட்ரோலியக் கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட நாப்தா என்ற பொருளைப் பயன்படுத்தினான். மாபெரும் ஆலையை எழுப்பினான். ஆயிரம் அடி ஆழத்திலிருந்து நீரை உறிஞ்சினான். சுற்றிலும் உள்ளவர்களுக்கு குடிதண்ணீர் பற்றாக்குறை வந்தது. பயன்படுத்தப்பட்ட நீர் சாக்கடையானது. அதை ஆற்று நீரிலும் கடல் நீரிலும் கலந்தான். மீன்கள் செத்தன. அமோனியா காற்று கசிந்து அண்டவெளி மாசுபட்டது. யூரியாவை நிலத்தில் இட்டபோது, மண்ணில் இருந்த உயிர்கள் மடிந்தன. மனிதன் மேலும் மேலும் யூரியா போட்டபோது, பயிர் விளைச்சலும் சரிந்தது. மண், உவர்மண் ஆனது.

இனியேனும் மனிதன் எல்லாவற்றிலும் உயர்ந்தவன் என்று அகந்தை கொள்ளாமல் இருப்பது நல்லது. மண்ணுயிர்கள் அண்டி வாழும் உரச்செடிகளை மரம் நடுவோர் மனதில் நிறுத்துவோம். அவை அகத்தி, செம்பை, அவுரி, கொழுஞ்சி, சணப்பை, தக்கைப் பூண்டு, நரிப்பயர், நரிமிரட்டி, வேலி மசால், முயல் மசால், சங்குப்பூ போன்றவையாகும்.

மண் வளம் காக்க நுண்ணுயிர் காப்போம்… இனியேனும்!

தொடர்ந்து விதைப்போம்…

nature, nammalvar, agriculture

தள்ளாத வயது என வர்ணிக்கப்படும் வயதில், வாலிபராய் நம்மிடையே வலம் வரும் நம்மாழ்வார் அவர்கள், இயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, மனிதனால் இயற்கைக்கு உண்டாகும் சீரழிவை எடுத்துரைப்பது எனப் பல தளங்களில் தனது சேவையை ஆற்றிவருகிறார்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press ConvertLeave a Reply