ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறிய E = mc² என்ற சமன்பாடு உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது! அனைத்திலும் இருப்பது ஒரே சக்தி எனக் கூறும் இந்த சார்புக்கொள்கையை சொன்ன ஐன்ஸ்டீன், ஏன் ஒரு புத்தராக பார்க்கப்படவில்லை! ஒரு ஞானிக்கும் அறிவியல் விஞ்ஞானிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? சத்குருவின் இந்த சுவாரஸ்யமான விளக்கத்திலிருந்து அறியமுடிகிறது!

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் - நோபல் பரிசு பெற்ற மிகச் சிறந்த விஞ்ஞானி. அவரது சார்புக் கொள்கை (theory of relativity) சொல்கிறது E = mc² என்று. அப்படியென்றால், இந்தப் பிரபஞ்சம் முழுக்க ஒரே சக்தி என்று பொருள்.

அவர் வாழ்வில் இறுதி நாட்களில் யாரோ அவரிடம், ‘வாழ்விற்காக மறுவாய்ப்பு அளிக்கப்பட்டால் என்னவாக விரும்புகிறீர்கள்’ என்று கேட்டார்கள். தச்சனாகவோ, செருப்பு தைப்பவனாகவோ வர விரும்புவதாகக் கூறினார். எளிமையாக வந்து வாழ்வை அனுபவிக்க விரும்புவதாகக் கூறினார்.

E = mc² என்றால் அனைத்தும் ஒரே சக்தி. அந்த சக்தி தன்னை கோடிக்கோடி விதமான உருவங்களில் வெளிப்படுத்திக்கொள்கிறது. எல்லாமே, எல்லோருமே ஒரே சக்தி என்பதுதானே யோகாவிலும் சொல்லப்படுகிறது. எல்லாமே ஒரே சக்தி என்றாலும், கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார் என்று அனைத்து மதங்களும் சொல்வதற்கும் என்ன வேறுபாடு? இரண்டும் ஒன்றுதானே!

எல்லா மதங்களும் மொத்தமாக ஒப்புக்கொள்ளும் ஒரே விஷயம் கடவுள் அனைத்து இடத்திலும் இருக்கிறார் என்பதுதான். இதில் மட்டும் எந்த மதத்துக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

ஐன்ஸ்டீன் எதை ‘இ’ என்கிறாரோ, அதைத்தான் மதங்கள் ஈஸ்வரன் என்கின்றன. அவர் இனிஷியல் மட்டும் சொல்லி அழைத்தார் போலும். என்ன பெயர் சொல்லிக் கொண்டாலும் எல்லாமே ஒரே சக்தி என்பது சந்தேகத்துக்கு இடமின்றி அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

அப்படியானால் ஐன்ஸ்டீன் விஞ்ஞானியா? அல்லது ஞானியா? அவர் ஞானி அல்ல. ஏனென்றால் அதை அவர் அனுபவப்பூர்வமாக உணரவில்லை. அதைக் கணக்குப் போட்டுக் கண்டுபிடித்தார். அது அவர் அறிவில் இருந்தது அனுபவத்தில் இல்லை. அனைத்தையும் ஒரே சக்தியாக ஒரு கணம்கூட அவர் அனுபவத்தில் உணரவில்லை. ஆனால் அந்த உணர்வு எவரது அனுபவத்தில் ஏற்படுகிறதோ, அப்போது வாழ்வில் ஒரு புதிய பரிணாமத்துக்கு மாறுகிறான். கௌதமர் அதை உணர்ந்தார், புத்தராக மாறினார்; ராமகிருஷ்ணர் அதை உணர்ந்தார், பரமஹம்சரானார்; ஏசு அதை உணர்ந்தார், கிறிஸ்து ஆனார்.

எப்போது நாம் அதை உணர்கிறோமோ, அப்போது நம் வாழ்வின் தன்மையில் ஒரு புரட்சி நடந்து விடுகிறது. ஐன்ஸ்டீனுக்கு அறிவால் மட்டுமே இது தெரிந்தது. அதனால், அது அவரை நிறைவடையச் செய்யவில்லை, முழுமை தரவில்லை. அவர் வாழ்வில் இறுதி நாட்களில் யாரோ அவரிடம், ‘வாழ்விற்காக மறுவாய்ப்பு அளிக்கப்பட்டால் என்னவாக விரும்புகிறீர்கள்’ என்று கேட்டார்கள்.

தச்சனாகவோ, செருப்பு தைப்பவனாகவோ வர விரும்புவதாகக் கூறினார். எளிமையாக வந்து வாழ்வை அனுபவிக்க விரும்புவதாகக் கூறினார்.

அணுவிஞ்ஞானியாக வந்து வாழ்வை அனுபவித்து வாழாமல், தவறவிட்டுவிட்டதாகக் கூறினார்!