​அது எப்படி கிரிக்கெட்டில் ஒரு சில வீரர்களால் மட்டும் சிறப்பாக மிளிர முடிகிறது, வேறு சிலரால் அப்படி இயலவில்லையே, காரணம் என்ன? அதிர்ஷ்டமா, அவர்கள் ஜாதகக் கட்டம் அப்படி அமைந்திருக்கிறதா? ஒருவர் உலகமகா வீரராகவும் மற்றொருவரால் பள்ளியைக்கூட தாண்டிப் போய் விளையாட முடியாததற்கும் என்ன காரணம்? விடை சொல்கிறார் சத்குரு...

சத்குரு:

வெற்றிக் கோப்பைக்காகவா விளையாட்டு?

நாம் குழந்தையாக இருந்தபோது, சந்தோஷத்திற்காக ஒரு விளையாட்டை விளையாடினோம். காலப்போக்கில் மெதுவாக, விளையாட்டு என்பது முதலீட்டிற்கான ஒரு வாய்ப்பாக மாறிவிட்டது. உதாரணமாக உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். துரதிருஷ்டவசமாக, வெற்றிக் கோப்பைக்காக வீரர்கள் கவனம் செலுத்தும்போது, அவர்கள் விளையாட்டின் ஆனந்தத்தை மறந்து, கடமைக்காக விளையாடுகிறார்கள். விளையாட்டை அனுபவித்து, ஆனந்தமாக விளையாடும் போதுதான் ஒருவரின் முழு திறன் வெளிப்படும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
முட்டாள்கள் கிரிக்கெட் விளையாடும்போது அது முட்டாள்த்தனமான விளையாட்டாக இருக்கும். அதுவே புத்திசாலிகள் கிரிக்கெட் விளையாடினால் அது புத்திசாலித்தனமான விளையாட்டாக இருக்கும்.

100 கோடி மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பொறுப்பு இந்தியாவிற்கு விளையாடும்போது ஏற்படுகிறது. இது எளிதான விஷயமல்ல. பிறரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் வீரர்கள் விளையாடும்போது, அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதோடு, உடலளவில் அவர்களது செயல்திறனும் குறைந்துவிடுகிறது. எப்போது ஒரு மனிதர், கவலைகளற்று, சந்தோஷமாக இருக்கிறாரோ, அப்போதுதான் அவரால் வியக்கத்தக்க வகையில் செயல்பட முடியும். யோகாவின் முக்கிய அம்சமும் இதுதான். எவ்வித சிந்தனைத் தடைகளும் இல்லாமல் ஒரு செயலைச் செய்ய அது வழிவகுக்கும்.

எண்ணங்கள் நுழைந்துவிட்டால், "ஜெயிக்க வேண்டுமே, தோற்றால் என்னாகுமோ" என்று எண்ண ஓட்டம் தொடரும். இது நம் கவனத்திற்குத் தடையாக ஆகிவிடும். சிந்தனையில் உழல்வதை தவிர்த்துவிட்டால், அந்த நேரத்திற்குத் தேவையான செயலில் எவ்விதத் தடையும் இன்றி ஈடுபட முடியும். வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டால், களத்தில் அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை யோசிக்கத் தேவையின்றி, அது தன்னிச்சையாய் வெளிப்படும்.

இப்படி இருந்தால், விளையாட்டின் தேவைக்கேற்ப அவர்களின் செயல் இயல்பாக வெளிவரும். எதிரணியினர் பல வகைகளில் விளையாட்டின் போக்கை மாற்றினாலும், அதற்கேற்ப இவர்கள் உடனுக்குடன் துரிதமாக செயல்பட முடியும். முறையான யோகப் பயிற்சிகள் செய்து, உடலிலும் மனதிலும் கட்டுப்பாடு எடுத்து வருவதன் மூலம், முன் யோசனை இல்லாமல் அந்த கணம் என்ன தேவையோ அதைப்போல்செயல் செய்ய அவர்கள் கற்றுக் கொள்ள முடியும்.

"வீரனாக" தியானம் செய்ய முடியுமா?

தியானம் என்றால் ஒருவரின் உண்மையான நிலைக்கு திரும்புதல் என்று பொருள். வெறுமனே ஒருவர் தன் சுவாசத்துடன் தொடர்பில் இருக்கும்போது, அனைத்து அடையாளங்களும் கரைந்துவிடும். "நான் ஒரு வீரன்" என்ற எண்ணத்தோடு நீங்கள் தியானம் செய்ய முடியாது. தியானம் நிகழ்கிறது என்றால் அங்கு அடையாளங்கள் இருக்காது. அதேபோல், விளையாடும்போதும், ஒரு கிரிக்கெட் வீரர் தன் அடையாளங்கள் அனைத்தையும் விட்டுவிட வேண்டும். தன்னைப் பற்றியே ஒரு கிரிக்கெட் வீரர் எண்ணிக் கொண்டிருந்தால், அது ஒரு பெரும் சுமையாக இருக்கும். எப்போது அவர் 100 சதவிகிதம் தன் அடையாளங்களிலிருந்து விடுபட்டிருக்கிறாரோ, அதற்குப்பின் அவர் அந்த விளையாட்டை விளையாடத் தேவையில்லை. அது தானாக நிகழும்.

கிரிக்கெட் ஜாம்பவான் - எப்படி உருவாகிறார்?

ஒரு கிரிக்கெட் ஜாம்பவான் எப்படி உருவாகிறார்? நிச்சயமாக அவருடன் விளையாடிய எதிரணி தகுதியற்றது என்பதனால் அல்ல. அப்படி ஒருவர் உருவாக வேண்டுமெனில், அவரின் உடல் மன ஒருங்கிணைப்பு உச்சத்தில் இருக்கும். தன் வாழ்க்கையில் என்ன வேண்டும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அவருக்கு என்ன தேவையோ அதற்காக அவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும்போது, அதுவே நிதர்சனமாகி விடுகிறது. நம் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் உடல், மனம் மற்றும் சக்திநிலையை ஒருங்கிணைத்தால், அனைத்தும் சிறப்பாக நடக்கும்.

கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு வீரர் தன் வாழ்வில் தேர்ந்தெடுத்துள்ள ஒரு செயல் மட்டும்தான். கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல், ஒரு மனிதனாகவும் அவர் உடலளவிலும், மனதளவிலும், உணர்வளவிலும், ஆன்மீக வழியிலும் விழிப்புணர்வோடு இருப்பது மிக முக்கியம். அப்படியிருந்தால், அவர் எந்த விளையாட்டு விளையாடினாலும் அதை நன்றாக விளையாடுவார். முட்டாள்கள் கிரிக்கெட் விளையாடும்போது அது முட்டாள்த்தனமான விளையாட்டாக இருக்கும். அதுவே புத்திசாலிகள் கிரிக்கெட் விளையாடினால் அது புத்திசாலித்தனமான விளையாட்டாக இருக்கும். இது, யார் விளையாடுகிறார்கள் என்பதைப் பொருத்து அமைகிறது.

கிரிக்கெட்டை விட, அந்த வீரர் அவரை எப்படி உருவாக்கிக் கொள்கிறார் என்பது முக்கியம். அவர்களுக்குள் ஒரு குறிப்பிட்ட விதமான தன்மையைக் கொண்டுவராமல், அவர்களால் விளையாட்டில் ஒரு தரத்தைக் கொண்டு வர முடியாது. தங்களுக்குள் ஒரு பணிவை வளர்த்துக் கொண்டால், அவர்கள் திறன் கற்பனைக்கு எட்டாத உயரங்களை அடைந்திடும். பணிவு என்பது உள்ளதை உள்ளவாறு ஏற்றுக் கொள்வது. இந்தப்பணிவு இருந்தால், தங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி அவர்கள் செயல் செய்ய முடியும்.