Question: நாத ஆராதனையில் பங்கு பெறுவதன் முக்கியத்துவம் என்ன?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தியானலிங்கத்தின் சக்தியின் தீவிரம் எப்படிப்பட்டதென்றால், அதை துளைத்துச் செல்ல முடிந்தவர்களுக்கு அது மிகவும் அற்புதமானதாக இருக்கும். உங்களால் அதை உணரமுடிந்தால், அது கிட்டத்தட்ட ஒரு ஸ்தூல நிலையில் இருப்பதைக் காண்பீர்கள்; ஏனென்றால் லிங்கத்தைச் சுற்றி உருவாகும் சக்திநிலையானது ஒரு வலிமையான சுவரைப் போல மிகுந்த தீவிரத்தன்மையுடன் இருக்கும். மற்றவர்கள் அனைவரும் கோவிலுக்குள் அமர்ந்திருந்தாலும், அந்த சக்திநிலைக்கு வெளியில்தான் அமர்ந்திருப்பார்கள். அதன் தீவிரத்தின் காரணமாக அதன் சக்திநிலை ஒரு சுவர் போல ஆகிவிடுகிறது. அதன் தீவிரம் சற்று குறைவாக இருந்தால், இன்னும் நிறைய பேர் அதற்குள் நுழைய முடியும்.

நாத ஆராதனை நடக்கும் சமயத்தில், அங்கிருக்கும் சூழ்நிலையை குறிப்பிட்ட வழியில் நாம் சற்று நெகிழ்த்துகிறோம்.

கோவிலுக்குள் நுழைவதற்கு முன்னர் உங்களில் பலர் தீர்த்த குண்டத்தில் மூழ்கி எழுகிறீர்களா என்பது தெரியவில்லை. அப்படி மூழ்கி எழுந்தால், நீங்கள் கோவிலுக்குள் நுழையும்போதே அங்கிருக்கும் சக்திநிலை ஒரு ஸ்தூலப் பொருளைப் போல உங்களைத் தாக்குவதை உங்களால் உணர முடியும்.

ஆகவே ஒரு நாளைக்கு இரு முறை இந்த சுவற்றை ஒலிகளைப் பயன்படுத்தி உடைக்கிறோம்; சில நேரங்களில் இன்னிசையாலும், சில நேரங்களில் மோசமான ஒலிகளாலும், துண்டு, துண்டான ஒலிக் கற்றைகளாலும் இந்த சுவற்றை உடைக்கிறோம். ஈஷாவில் நாம் இப்படித்தான் இருப்போம். மேலாண்மை என்றால் என்னவென்றே தெரியாத மக்கள் இந்த அறக்கட்டளையை மேலாண்மை செய்வது, ஒரு சொட்டு ஆன்மீகத்தைக் கூட அறிந்திராதவர்கள் அதைக் கற்பிப்பது, இசைப் பின்னணி இல்லாதவர்கள் அனைத்துவிதமான இசைகளையும் இசைப்பது, இதெல்லாம் ஈஷாவின் அற்புதங்கள்.

ஆகவேதான் அவர்கள் இத்தகைய ஒலிகளை எழுப்புகிறார்கள். அந்த ஒலிகளின் இன்னிசை என்பது அங்கு கூடியிருக்கும் மக்களுடன் வேண்டுமானால் தொடர்புடையதாக இருக்கலாம், ஆனால் அந்த ஒலிகள் எழுப்புவதன் நோக்கம், அவை துண்டு, துண்டாக இருந்தாலும் கூட நிறைவாகத்தான் இருக்கும். ஏனென்றால், தன்னைத்தானே மிகத் தீவிரமான தன்மையுடன் வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு விஷயத்தை, கிட்டத்தட்ட ஒரு ஸ்தூலப் பொருளைப் போல இருக்கும் ஒன்றை சலனப்படுத்துவதுதான் இதன் நோக்கம். அப்போது அங்கு வரும் அனைத்து மக்களுக்கும் எளிதில் அடையக் கூடிய விதத்தில் அது இருக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை நாம் அதை சிறிது சலனப்படுத்துகிறோம். அதை வேறு சில சப்தங்களாலும், சமையலறை சாதனங்களை வைத்துக் கொண்டு ஒலி எழுப்பியும் செய்யலாம்-உங்களால் அதை தீவிரத்துடன் செய்ய முடிந்தால், நீங்களும் ஒலி எழுப்பலாம், ஆனால் நாம் இதை ஒரு காணிக்கையாகவும் பயன்படுத்த விரும்புகிறோம். காணிக்கை கொடுக்கும்போதுதான் ஒரு மனிதனின் உள்வாங்கும் திறன் உச்சத்தில் இருக்கும்.

இந்தியர்களின் வாழ்க்கை முறையில், நீங்கள் எவ்வளவு ஏழ்மையில் இருந்தாலும், அல்லது உங்கள் குழந்தைகள் பத்து நாட்களாக சாப்பிடாமல் இருந்தால் கூட, நீங்கள் கோவிலுக்குப் போவதாக இருந்தால், கண்டிப்பாக ஏதாவது காணிக்கை செலுத்த வேண்டும் என்று ஏன் சொல்லியிருக்கிறார்கள்? கடவுளர்கள் சாப்பிடுவதற்கு வாழைப்பழம் அல்லது தேங்காய் வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. உங்களிடம் வாழைப்பழம், தேங்காய் இதெல்லாம் இல்லாவிட்டால் கூட ஒரு சிறு இலையை மட்டுமாவது காணிக்கையாக செலுத்த வேண்டும். நீங்கள் காணிக்கை செலுத்தும் மனதுடன் அங்கு செல்கிறீர்கள் என்பதுதான் இதற்குப் பின்னால் இருக்கும் தத்துவம். நீங்களே ஒரு காணிக்கையாக அங்கு செல்கிறீர்கள். அப்படிப் போகும்போது, அங்கு என்ன இருக்கிறதோ அதை முழுமையாக உள்வாங்கும் திறன் உங்களுக்கு வந்துவிடுகிறது.

நாத ஆராதனை நடக்கும் சமயத்தில், அங்கிருக்கும் சூழ்நிலையை குறிப்பிட்ட வழியில் நாம் சற்று நெகிழ்த்துகிறோம். அது காணிக்கை செலுத்தும் நேரமாக இருப்பதால், மக்கள் மிகுந்த உள்வாங்கும் தன்மையுடன் அங்கு இருப்பதற்கு அதுதான் சரியான நேரம். தியானலிங்கத்தின் தன்மை என்னவென்று உணர முடியாதவர்கள், அதனோடு போராடிக் கொண்டிருப்பவர்கள், அங்கு இருப்பதற்கு சரியான நேரமும் நாத ஆராதனை நடக்கும் நேரம்தான்.

நீங்கள் ஆசிரமத்தில் இருக்கும்போது, உங்களுக்கு முக்கியமான வேலை எதுவும் இல்லாவிட்டால், நாத ஆராதனை நடக்கும் நேரத்தில் அங்கு செல்லுங்கள் என்று சொல்லுவேன். இல்லாவிட்டால் நீங்கள் மிகவும் மதிப்பு வாய்ந்த ஒன்றை இழக்கிறீர்கள். 'இதே இசையை நான் முன்னமே கேட்டிருக்கிறேன்...' என்பவர்களுக்கு, அது வெறும் இசை மட்டுமல்ல, அங்கு சமையலறை சாதனங்களை வைத்து ஒலி எழுப்பினால் கூட, அதுவும் அந்த நோக்கத்தை நிறைவேற்றும். சமூகரீதியான பலன்களை அது தராவிட்டாலும், ஆன்மீகரீதியாக அவர்களின் நோக்கம் நிறைவேறிவிடும். ஏனென்றால் அங்கு ஒரு ஸ்தூல சுவரைப் போல உருவாகும் சக்திநிலையை உடைக்க முயற்சிப்பதுதான் நம்முடைய நோக்கம்.