தியானலிங்கம் உருவாகக் காரணம்…

தியானலிங்கம் உருவாகக் காரணம்…

தியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதை பகுதி 6

முற்பிறவியில் ‘பில்வா’ எனும் சாதாரண மனிதராக இருந்த சத்குரு எப்படி அடுத்த பிறவியில் சிவயோகியானார்? பில்வாவின் காதல் என்னாயிற்று?! தியானலிங்கம் உருவாகக் காரணமான நிகழ்வு என்ன? இதுபோன்ற பல சுவாரஸ்யக் கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது இந்த வாரப் பகுதி.

பட்டுக்கோட்டை பிரபாகர்:

தியானலிங்கத்தின் பிரதிஷ்டை எப்படி நிகழ்ந்தது என்று அறிய விரும்பினால், சராசரி தர்க்க அறிவைத் தாண்டி, அருளியலின் ஆழ்ந்த அறிவியல் வழிகளைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்!

தியானலிங்கம் என்பது மூன்று ஜென்மக் கனவு!

சத்குரு ஜகி வாசுதேவ் என்கிற தனி மனிதர் தன்னை உணர்ந்து, ஞானியாகி, மக்களுக்கு ஞான விதை விதைக்கும் தியானலிங்கம் அமைப்பதைத் தன் வாழ்வின் லட்சியமாகக்கொண்டார் என்றால்… அது இந்த ஜென்மத்தின் உண்மை மட்டுமே அல்ல.

தியானலிங்கம் என்பது மூன்று ஜென்மக் கனவு!

ஞானி ஸ்ரீபழனி சுவாமிகளின் அன்பான உத்தரவு!

கனவை நனவாக்க… உத்தரவைச் செயலாக்க… மூன்று பிறப்புகள் தேவைப்பட்டிருக்கின்றன சிவயோகியாக இருந்த, சத்குரு ஸ்ரீபிரம்மாவாக இருந்த, சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களுக்கு!

அவரது ஆன்மீகப் பரிமாணம் தொடங்கிய ‘பில்வா’ என்ற பிறவியிலிருந்து ஒவ்வொரு பிறவியாக, விரிவாகப் பார்க்கலாம்.

370 ஆண்டுகளுக்கு முன்பு மத்தியப் பிரதேசத்தில், ஒரு கிராமத்தில் வாழ்ந்தார் பில்வா. இந்தியச் சைவ மரபில் ஒரு பிரிவினர் இருந்தனர். அவர்கள் இருள் விலகாத விடியல் நேரங்களில் வீதிகளில் வந்து முரசுகளை ஒலிக்கச்செய்து மக்களை எழுப்புவார்கள், உள்ளுணர்வில் தோன்றும் செய்திகளைச் சொல்வார்கள் அல்லது கடவுளைப் போற்றிப் பாடிவிட்டுப் போவார்கள்.

அந்தப் பிரிவைச் சேர்ந்தவர்தான் பில்வா. அவருக்குப் பிடித்த இரண்டு விஷயங்கள்… சிவனும் பாம்பும். பில்வா, பாம்புகளைப் பிடிப்பதில், வளர்ப்பதில் வல்லவர். பில்வாவின் மகுடிக்குப் பாம்புகள் மயங்கியது போல…. ஒரு பாவையும் மயங்கினாள். அந்தப் பெண்ணின் உண்மையான அன்பில் பில்வாவின் உள்ளம் கரைந்தாலும்… ஊராரின் உள்ளம் வேறு மாதிரி இருந்தது.

உயர் சாதியைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கொதித்தெழுந்தார்கள். பில்வாவை உயிரோடு விட்டுவைத்தால், தங்கள் சாதியின் தர்மங்கள் செத்துவிடும் என்று கருதினார்கள்.

ஞானி ஸ்ரீபழனி சுவாமிகளின் அன்பான உத்தரவு!
ஊருக்கு நடுவில் இருந்த ஒரு பெரிய மரத்தில் பில்வாவைக் கட்டிவைத்தார்கள். அவர் வளர்த்த பாம்புகளுள் ஒரு நாகப் பாம்பை எடுத்து அவரைக் கடிக்கவைத்தார்கள். பில்வாவுக்கு விஷம் தலைக்கேறியது, பார்வை மங்கியது. மரணத்தின் கடைசி நிமிடங்களில் இருந்த பில்வா ஒரு விபத்து
போல தற்செயலாக, தனது சுவாசத்தைக் கவனிக்கத் துவங்கினார். மிகவும் கூர்ந்து தன் சுவாசத்தைக் கவனிப்பது ஒரு ஆத்ம சாதனையாகும். தீவிரமான அந்தக் கவனிப்பில் ஒரு பெரிய சக்தி தாக்கம் அவருக்குள் நிகழ்ந்தது. மிகுந்த விழிப்புணர்வோடு கவனிக்கப்பட்ட சுவாசம்… அடுத்து தீவிர சாதகராக, சிவயோகியாகப் பிறப்பெடுக்கச் செய்தது.

சிவயோகி, சிவனைத் தவிர யாரையும் மதிக்காதவர், ஏற்காதவர். ஆனால் பழனிக்கு அருகில் இருந்த ஸ்ரீ பழனி சுவாமிகள் என்கிற தன்னை உணர்ந்த ஞானியின்பால் ஈர்க்கப்பட்டார். ஸ்ரீபழனி சுவாமிகள் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் சமாதி நிலையில் இருந்தவர். பிறகு நாடு முழுவதும் பயணம் செய்து பலருக்கும் ஞானம் வழங்கியவர்.

அவர் சிவயோகியிடம் வந்தார். அவரிடம் கருணை காட்டினார். அவரைப் பார்த்ததுமே, தன் குருவாக உணர்ந்தார் சிவயோகி. ஆனால் சிவயோகி, தனக்கு சிவனே வந்து ஞானம் தரவேண்டும் என்று கருதினார். அதனால், பழனி சுவாமிகள் சிவன் வடிவத்திலேயே காட்சி தந்து, ஒரு கோலால் சிவயோகியின் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் உள்ள ஆக்ஞாவைத் தொட்டார். அந்த வினாடி சிவயோகி தன்னை உணர்ந்தார்.

குருவுக்கும் சீடருக்கும் சில மணித்துளிகள் மட்டும் நிகழ்ந்த அந்த முதல் சந்திப்புதான், கடைசிச் சந்திப்புமாகும்.

ஸ்ரீ பழனிசுவாமிகள், வெள்ளியங்கிரி மலையில் மஹாசமாதி அடைந்தார். அவரே, தியானலிங்கத்தை இந்த மண்ணுக்கு வழங்கச் சரியான நபர் சிவயோகிதான் என்று தேர்வு செய்து, அந்தப் பணியை அவரிடம் ஒப்படைக்கவும் செய்தார். வாய் வார்த்தைகளால் அல்ல, உள்ளுணர்வின் பரிமாறலால்!

தியானலிங்கத்தை உருவாக்குவதற்கான அடிப்படையான தொழில்நுட்பத்தையும் அந்த தொடர்பின் வழியாகவே அவர் அருளினார். குருவின் உத்தரவை ஏற்று தியானலிங்க உருவாக்கப் பணியைத் துவங்கினார் சிவயோகி. ஆனால் அப்போது அவருக்குப் போதிய வாய்ப்புகளும் இல்லை, ஆதரவும் இல்லை. ஆகையால், அவரால் அந்தப் பணியைச் செய்து முடிக்க இயலவில்லை.

தனது குருவான ஸ்ரீபழனி சுவாமிகள் தனக்கிட்ட தியானலிங்க உருவாக்கத்தைச் செய்து முடிப்பதற்காகவே, இன்னொரு பிறவி எடுக்க விரும்பிய சிவயோகி, சத்குரு ஸ்ரீபிரம்மாவாகப் பிறப்பை எடுத்தார்.

அடுத்தவாரம்…

சத்குரு ஸ்ரீபிரம்மாவால் தியானலிங்கத்தை பிரதிஷ்ட்டை செய்ய முடிந்ததா? அவரது முயற்சிகள் என்ன ஆயிற்று. அதன் பிறகு நடந்தது என்ன என்பதை அறியக் காத்திருங்கள்!

இத்தொடரின் பிற பதிவுகள்: தியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதை
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert