தியானலிங்கம் உருவாக்கம் பற்றி சத்குரு…

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

முதலில் நான் ஒரு கோவில் கட்டப் போகிறேன் என்று சொன்னபோது யாரும் என்ன நம்பவேயில்லை. என்னை அவர்கள் ஏதோ ஒரு நாத்திகவாதியைப் போல எல்லாவற்றையும் தர்க்கரீதியாக சிந்திக்கிற மனிதராகவே பார்த்திருக்கிறார்கள். "லிங்கம்" என்ற வார்த்தையை உச்சரிப்பதற்கு முன்பு 17 ஆண்டுகள் சமூகத்தில் பலருடைய நல்லிணக்கத்தைப் பெறுவதற்காக செலவிட்டேன். நான் ஒரு ஆலயம் கட்டப் போவதாக சொன்னபோது யாரும் நம்பவேயில்லை. இந்த ஒரே நோக்கத்துடனே நான் என் முழு வாழ்க்கையை வாழ்ந்திருந்தாலும் கூட, என்னைச் சுற்றி இருப்பவர்கள் யாருக்கும் ஒருமுறை கூட நான் இதைச் சொன்னதில்லை. போதிய அளவு உறுதுணை கிடைத்துவிட்டது, சூழ்நிலை நன்கு முதிர்ச்சியடைந்திருக்கிறது என்றபோதுதான் அதை வெளிப்படுத்தினேன். "நீங்கள் கோவில் கட்டப் போகிறீர்களா? உங்களால்தானே நாங்கள் கோவிலுக்குப் போவதையே நிறுத்தினோம். இப்போது நீங்கள் கோவில் கட்டப் போகிறீர்களா?" என்று பலபேர் கேட்டார்கள்.

இப்போது பிராணப் பிரதிஷ்டை பற்றி உங்களுக்குச் சொல்கிறேன். அந்த முழு செயல்பாடுமே தியானலிங்கத்தினுடைய சக்திநிலையை மிக சூட்சுமப்படுத்திக் கொண்டே வந்தது. அதைக் கடந்து போனால் அது ஒரு வடிவத்துக்குள் இருக்காது என்ற நிலை வந்தது. சக்திநிலை சூட்சுமம் அடைந்து கொண்டே போனால், ஒரு எல்லைக்குப் பிறகு அதனால் ஒரு வடிவத்துக்குள் இருக்க முடியாது. எனவே சூட்சுமத்தின் உச்சநிலையில் அந்த சக்திநிலையை அது எப்போதும் நிரந்தரமாக இருக்கும்படி நிலைநிறுத்த வேண்டும். ஒருவிதத்தில் அது வைத்து பூட்டப்படுகிறது. இந்தப் பிரதிஷ்டையில் மந்திரங்களோ, சடங்குகளோ எதுவும் இல்லை. மனிதர்களை உள்ளடக்கிச் செய்த சக்திநிலையிலான பிரதிஷ்டை அது. இப்போதைக்கு பத்து பானைகள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். அவையெல்லாம் சுட்ட மண். அவற்றை வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது. உடைத்தால் அது வெறும் தூள்களாகப் போகும்.

இப்போது இந்த சுட்டமண்ணை மறுபடியும் களிமண்ணாக்கினால், அதற்கென்று ஒரு முறையிருக்கிறதென்று வைத்துகொள்ளுங்கள். இப்போது இந்தப் பானைகளும் மறுபடியும் களிமண்ணாகின. அவற்றிலிருந்து சில மூலப் பொருட்களை எடுத்து பதினொன்றாவதாக ஒரு பானையை உருவாக்குகிறோம். இது உங்களுடைய சக்திநிலைகளை அதற்கான முறையில் தயார்படுத்துவது. இப்போது இவர்கள் எல்லாம் தனிமனிதர்களாக உறுதிப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். எனவே இந்தப் பிரதிஷ்டையில் ஈடுபடக் கூடியவர்களை மேம்படுத்துவது, பல்லாண்டுகள் அவர்களுக்கென்று சில ஆத்ம சாதனைகளை வழங்குவது, அவர்களை இளகிய நிலைக்குக் கொண்டு வந்து அவர்கள் சக்திநிலையைப் பயன்படுத்துவது என்பது போன்ற சூழ்நிலைகளை உருவாக்கினோம். அப்போதுதான் ஒரு மேம்பட்ட சக்தி இந்த இடத்தில் வந்து இறங்கியது. பிராணப் பிரதிஷ்டை நிகழ்ந்தது.

இந்தப் பிராணப் பிரதிஷ்டையில் ஈடுபடக் கூடியவர்களுக்காக 90 நாள் ஹோல்னஸ் பயிற்சி நடைபெற்றது. அதில் ஏறக்குறைய 70 பேர் பங்கேற்றனர். அந்த 70திலிருந்து 14 பேரை தேர்ந்தெடுத்து தியானலிங்கப் பணிக்கு பயன்படுத்துவதுதான் நோக்கமே. மிகத் தீவிரமான கிரியைகளும், பிற ஆத்ம சாதனைகளும் வழங்கப்பட்டன. ஒரு சில கர்ம வினைகளைக் கரைப்பதில் எல்லாம் மிகுந்த அவசரம் காட்டினோம். அவர்கள் வாழ்வில் இது இயல்பாக நிகழும் வரை காத்திருப்பதற்கு நேரம் இல்லை. எனவே அவற்றைத் துரிதப்படுத்தினோம். அந்த 14 பேரை உடலோடு மிகக் குறைந்தபட்ச தொடர்போடு உள்ள நிலையில் உருவாகுவதற்கு என்ன முயன்றும் முடியவில்லை. அதற்கென்று பெரும் முயற்சி எடுக்கப்பட்டபோதும் அது நிகழவில்லை. ஒரே நிலையிலான உடல், மனம், உணர்வு போன்றவற்றில் ஒன்றுகிற 14 பேரை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. அற்கென்று பெரும் முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் அது நிகழவில்லை. எனவே இரண்டே பேரை வைத்துக் கொண்டு இன்னமும் தீவிரமான முறையில் மேற்கொள்ள முடிவு செய்தோம். அது ஆபத்துமிக்க பாதையாக இருந்தது. ஆனால் 14 பேரை கட்டுக்குள் வைத்திருப்பதை விட இரண்டு பேரை கட்டுக்குள் வைப்பது எளிதாக இருந்தது.

இது நம்புவதற்குக் கடினமாக இருக்கும். அந்த இரண்டு பேரும் என்னோடு இணைந்து சக்திநிலையில் ஒரு முக்கோணத்தை உருவாக்கிய பிறகு அவர்களுடைய மனம், உணர்வுகள், சக்திநிலை எல்லாம் ஒன்றாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒரு மனிதருக்கு இடது முழங்காலில் ஏதோ ஒரு வலி ஏற்பட்டால், மற்ற இரண்டு பேரும் அதே போல் இடது முழங்காலில் வலியை உணர்வார்கள். இது இவர்கள் வாழ்க்கை, இது அவர்கள் வாழ்க்கை என்பதெல்லாம் இன்றி எல்லாம் ஒன்றாகக் கலந்திருந்தது. உதாரணத்துக்கு நீங்கள், நான், இன்னொருவர், இப்போது இது ஒரு முக்கோணம் என்று வைத்துக் கொள்வோம். பத்து ஆண்டுகளுக்கு முன் என் வாழ்வில் என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால் இப்போது உங்களுக்குத் தெரிகிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் வாழ்வில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் இப்போது தெரிய வருகிறது. எல்லாம் அப்படி ஒன்றாகக் கலந்துவிடுகிறது. இது யாருடைய நினைவு என்றெல்லாம் கூடத் தெரியவில்லை. எல்லாமே ஒன்றாக சங்கமித்திருந்தது. மனங்கள் ஒன்றாகின. உணர்வுகள் ஒன்றாகின. உடலும் சக்திநிலையில் ஒன்றானது. இந்த உடலில் நிகழ்ந்தது, அந்த உடலில் நடந்தது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இப்படி ஒரு நிலை மூவருக்குள் ஏற்படுத்துவது என்பது பதினான்கு பேருக்குள் ஏற்படுத்துவதை விட எளிது. ஆனால் அது அபாயகரமான முயற்சி. அதில் ஈடுபட்டவர்கள் பெரும் அபாயத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முக்கோணத்தில் ஒரு சக்திநிலை ஏற்படுத்தி, மேம்பட்ட ஒரு சக்தியை வரவேற்பதாக அது அமைந்தது. ஒரு முக்கோணத்தை நீங்கள் அமைத்துவிடுவது என்பது ஒரு வியூகம் அமைப்பதைப் போல. அது மிக வலிமையான ஒரு வாய்ப்பு. எல்லாவற்றையும் உள்ளிருந்திக் கொள்கிறது. தியானலிங்கம் பிராணப் பிரதிஷ்டை இப்படித்தான் நடந்தது.

(ஞானத்தின் பிரம்மாண்டம் புத்தகத்திலிருந்து…)