தியானலிங்கப் பிரதிஷ்டை நாள் கொண்டாட்டங்கள்

1

23 Jun - 8.12pm

தியானலிங்கம்

இன்று நீ நிகழ்ந்துவிட்டாய்
வாழ்வின் வரங்கள் இன்னும் என்னுடன்
என்ன செய்யப் போகிறேன் இனியும்?
சிகரங்களில் வாழ்ந்தாகிவிட்டது, நெடுங்காலம்.
வாழ்க்கை எனும் பள்ளத்தாக்கில் உலவும் நேரம்
இனியோ?

– சத்குரு

இதைப் போல ஒன்று இதுவரை இந்த உலகில் நிகழவில்லை.

பல தீவிரமான யோகிகளுக்கும் தோல்வியை அளித்த இந்த முயற்சி இன்று நாம் வாழும் காலத்திலேயே வெள்ளியங்கிரி மண்ணில் உருவானது நம் பாக்கியம்.

இனி மேல் இப்படி ஒரு நிகழ்வு இந்த உலகில் நிகழ வாய்ப்புகள் மிக மிகக் குறைவு!

இதைப் பற்றி சத்குரு பேசும் போது, “லிங்கபைரவியை ஒவ்வொரு ஊரிலும் பிரதிஷ்டை செய்யலாம். ஆதியோகி ஆலயத்தை பல ஊர்களில் உருவாக்கி விடலாம். ஆனால் இன்னொரு தியானலிங்கத்தை பிரதிஷ்டை செய்திட என்னால் முடியாது,” என்று கூறி தியானலிங்கத்தின் மகத்துவத்தை புரியவைத்து நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறார்.

அடுத்த மாதம் சத்குருவுடன் ஆதியோகி ஆலயத்தில் நடைபெறவுள்ள “சத்குருவுடன் ஈஷா யோகா” வகுப்பின் லைவ் ப்ளாகில் உங்களுடன் இணைவோம்… காத்திருங்கள்! எங்களுடன் இணைந்திருங்கள்!

23 Jun - 7.39pm

லிங்கபைரவி ஆரத்தி

சற்று முன்பு சத்குரு-தியானலிங்கம்; தற்போது சத்குரு-லிங்கபைரவி!

சத்குருவை பார்க்க வேண்டும் என்று தேடி வந்தவர்களுக்கு இன்று சிறப்பு பரிசு தான்.

தேவியின் அருள் 6000 பேருக்கு இன்றைய லிங்கபைரவி உற்சவ மூர்த்தி ஊர்வலத்தின் மூலம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதோ லிங்கபைரவி ஊர்வலத்தின் பதிவிலிருந்து சில காட்சிகள் உங்களுக்காக…

23 Jun - 7.03pm

சுவாசத்தை நிறுத்தும் தீவிரம்!

புத்த மந்திரங்கள் ஒலித்துக் கொண்டிருந்த போதே தியானலிங்கத்திற்குள் கால்பதித்த சத்குரு, புத்த துறவிகளுடன் சேர்ந்து தரையிலேயே அமர்ந்துக் கொண்டார்.

தியானலிங்கம் முழுமையாக நிரம்பி வழிய, மழையையும் பொருட்படுத்தாமல் மண்டபம் வரை நெடிய வரிசையில் அமைதியாய் கண்மூடிய நிலையில், ஆழ்ந்த தியானத்தில் மக்கள்…

இன்று தியானலிங்கத்தில் நிலவும் சக்தி சூழ்நிலையை விளக்க வார்த்தைகளை உருவாக்கத்தான் வேண்டும். கண்களை மூடினால் மிகமிக ஆழமான பரிமாணங்களுக்கெல்லாம் வித்திடுகிறது தியானலிங்கம். ஸ்வாசமே நின்று போகும் அளவிற்கு தீவிரம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

புத்த மந்திரங்களுக்கு பிறகு, “யோகீஷ்வராய, மஹாதேவாய…” மந்திரம் இடைவிடாமல் 15 நிமிடங்களுக்கு தியானலிங்கத்தில் ஒலிக்க, சத்குருவும் இந்த உச்சாடனையில் இணைந்தார். பித்தேறிய நிலையில் தியான அன்பர்கள்…

சரியாக 6.45 மணிக்கு குருபூஜையுடன் இன்றைய தியானலிங்க நிகழ்வுகள் நிறைவடைந்தது. 7 மணிக்கு சத்குருவுடன் மக்களும் வெளியேறி மேள தாளத்துடன் வெகு விமர்சியாய் துவங்கியுள்ள லிங்கபைரவி உற்சவ மூர்த்தி ஊர்வலத்தில் உள்ளனர்.

23 Jun - 6.13pm

விதை!

Sadhguru

தியானலிங்கத்தை உருவாக்க சரியான மனிதர் இவர் தான்…

பழனி சுவாமிகள் சிவ யோகியை சந்தித்தார். அவர் தன் கைகளாலோ அல்லது கால்களாலோ அந்த சீடரை தீண்டவில்லை. தன் கையிலிருந்த ஒரு கோலை எடுத்து சீடரின் ஆக்ஞாவை தொட்டார். சீடர் தன்னை உணர்ந்தார். அதன்பின் இவர்கள் சந்தித்துக் கொள்ளவே இல்லை.

தியானலிங்க உருவாக்கப் பணியை தன் சீடரிடம் ஒப்படைத்தார். சொல்லால் அல்ல. இவர்கள் பேசிக் கொள்ளவே இல்லை. ஆனால் தொடர்பில் இருந்தனர். தியானலிங்க உருவாக்கத்தின் அடிப்படை தொழில்நுட்பத்தை வார்த்தைகளின்றி தன் சீடருக்கு கொடுத்தார்.

தொட்டது நாகம் சுட்டது சுவாசம்
கொண்டதோ சிவயோகி கோலம்
பட்டது ஆக்ஞாவில் அந்த கோலும்
அருள் விதை பெற்றது உலகம்!

23 Jun - 5.35pm

குரு தந்த குரு

buddhist-chant

தியானலிங்கத்திற்கு காலையிலே சர்வ மதத் தலைவர்களுடன் வருகைப் புரிந்த சத்குரு, பின்னர் ஆதியோகி ஆலயத்தில் மாநாடு, அதன் பின் ஒவ்வொரு தலைவரையும் தனியாக சந்தித்தது என்று காலை முதல் மாலை வரை தலைவர்களுடன் இருந்தார்.

காலையில் தங்களது முறைப்படி மந்திரங்கள் உச்சரித்த பௌத்த துறவிகள் இந்த பதிவேற்றம் பெறும் நேரத்தில் விநோதமான பல ஒலிகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். கலாச்சாரங்களுக்கு இடையே மைல் கணக்கில் வித்தியாசங்கள் இருந்தாலும், அது உருவாக்கும் சக்தி சூழ்நிலையில் தள்ளாட்டம் இல்லை. மிகுந்த அதிர்வலைகளுடன் மந்திரம், தியானலிங்கம்…

இன்னும் சற்று நேரத்தில் தியானலிங்கத்தில் சத்குரு… குருவுடன் குரு தந்த குரு! இருவர் முன்னிலையில் சேர்ந்து இருக்கக் கிடைத்தவர்கள்… பாக்கியவான்கள்!

23 Jun - 5.15pm

உயிர் பெற்ற காட்சி

தியானலிங்கம் பிரதிஷ்டையில் சத்குரு திரும்பி வராமல் போகலாம். இதை தாங்கிக் கொள்ளும் மனநிலையில் எவரும் இல்லை. சத்குரு மட்டும் தான் வேண்டும் தியானலிங்கம் தேவையில்லை என்ற அன்பர்களின் வேண்டுகோளை சத்குரு கேட்பதாக தெரியவில்லை.

தியானலிங்கம், சத்குரு இரண்டில் ஏதாவது ஒன்று தானா?

தியானலிங்கம் சத்குரு இரண்டும் கிடைக்கப் பெற்ற ஆனந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் பிரதிஷ்டையின் போது இருந்த சுவாமிநாதன். இதோ அந்த அழகிய உருவம் உயிர் பெற்ற காட்சி…

23 Jun - 5.05pm

ப்ளாஷ்பேக் – சத்குரு திரும்ப வருவாரா?

தியானலிங்கத்தைப் பற்றி அப்போது பலருக்கும் புரியவில்லை. “இந்த பிரதிஷ்டையின் போது நான் என்னை அர்ப்பணிக்க நேரிடலாம்,” என்ற சத்குரு, தான் திரும்பாவிட்டால் ஈஷாவை எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்று எழுதி கொடுத்து விட்டு பிரதிஷ்டைக்கு உள்ளே செல்கிறார்…

சத்குருவை உள்ளே அனுப்ப மனமில்லாமல் மக்கள் கூட்டம் கண்ணீரில்…

சத்குரு திரும்பி வருவாரா? பயம் ஒரு புறம்! வரவில்லை என்றால் என்ன செய்வது? குழப்பம் மறுபுறம்!

படபடக்கும் இதயத்துடன் அன்பு நெஞ்சங்கள் காத்திருந்தன. அந்த உருக வைக்கும் காட்சியின் ஃப்ளாஷ்பேக் இதோ!

23 Jun - 3.48pm

ஒரு யோகியின் தீர்க்க தரிசனம்…

Sadhguru

சப்த ரிஷிகளுக்கு அடுத்த தலைமுறையை சேர்ந்த சுனீரா என்கிற யோகி ஆதியோகியைப் போலவே ஒரு இருப்பை உருவாக்கிட எண்ணினார்.

இதற்காக தீவிர சாதனையில் இறங்கினார். தன் வாழ்நாள் முழுக்க அந்த சாதனாவில் கழித்த இவர் தன் வாழ்வின் இறுதியில் அது நிகழாமல் போனது கண்டு, “இது நிகழும், ஆனால் இங்கு இல்லை, இப்போதும் இல்லை, பச்சை படலம் போர்த்திய தென்னாட்டு மலையிலே இது நிகழும், பின்னர் தன் அதிர்வுகளால் இந்த உலகத்தை ஈர்க்கும்,” என்று சொல்லிச் சென்றார்.

பல்வேறு ஞானிகள், யோகிகள், தவ சீலர்களின் கனவான தியானலிங்கம், பச்சை போர்வை போர்த்திய வெள்ளியங்கிரி நிழலில் வெகு சிறப்புடன் எழுப்பப்பட்டது. சுனிராவின் தீர்க்க தரிசனம் மெய் ஆனாலும், சத்குருவைப் போன்ற ஒரு யோகிக்கும் இது வெகு சுலபத்தில் சாத்தியப்படவில்லை…

23 Jun - 3.25pm

உயிர்ப்புடன் ஆதியோகி

Oodhuvar1

Oodhuvar2

சர்வ மத நல்லிணக்க மாநாடு நிறைவுற்றாலும் தியானலிங்கத்தில் தொடர்ந்து சர்வ மத உச்சாடனைகள் நடந்த வண்ணம் உள்ளன. காலையில் புத்த மத உச்சாடனைக்கு பிற இஸ்லாமிய சகோதரிகள், கிறிஸ்துவ சகோதரர்களின் உச்சாடனை போன்றவை ஒலித்தன. அதையடுத்து 3.30 மணியளவில் காதிற்கினிய தேவாரம் இசையாய் ஒலித்தது.

இத்தனை ஒசைகளையும் தன்னகத்தே இணைத்துக் கொண்ட தியானலிங்கத்தின் சக்தி அதிர்வுகளை இன்று நம்மால் மிகச் சிறப்பாக உள்வாங்கிக் கொள்ள முடிகிறது.

இன்று தியானலிங்கத்தின் சக்தி அதிர்வுகள் வெளிப்படும் விதத்தை உணர்ந்தால், சத்குரு உடலிற்கு ஞாபகம் இருக்கிறது என்று சொல்வதுபோல் இயற்கைக்கும் 14 வருடங்களுக்கு முன் நடந்த இந்நாள் நினைவில் இருக்குமோ என்னும் கேள்வி எழுகிறது…

தியானலிங்கம் முழு உயிர்ப்புடன் ஆதியோகியைப் போல்…

23 Jun - 3.15pm

நெகிழ்ந்தவர்கள் சொல்கிறார்கள்…

“இவங்க எல்லாரையும் ஒரே மேடையில் கொண்டு வருவது சாதாரண விஷயம் இல்லை. சத்குருவால் மட்டுமே இது போல செய்ய முடியும். வந்த விருந்தினர்கள் அனைவரும் சந்தோஷமாக போனார்கள்.

அவர்கள் நம் தன்னார்வ தொண்டர்களையும் பொதுமக்களையும் கவனித்தார்கள். அவர்கள் நிச்சயமாக ஏதோ ஒன்றை உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் முகங்கள் இங்கு நடப்பதை கண்டு பிரம்மிப்பில் ஆழ்ந்திருக்கிறது,” என்கிறார் சென்னை பெரம்பூரில் இருந்து வந்த கல்லூரி மாணவி அகிலா.

தர்மபுரி அருகில் இருக்கும் பாலக்கோடு என்ற ஊரிலிருந்து வருகிறேன். அங்கே சில ஆண்டுகளுக்கு முன் இந்து-முஸ்லீம் கலவரத்தில் வீடுகளை எரித்தார்கள். இது போன்ற நிகழ்வுகளால் மக்களிடையே மத நல்லிணக்கம் ஏற்படுத்தும் சத்குருவிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார் பள்ளி ஆசிரியை திருமதி மணிமேகலை.

இப்படி ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியை முதல் முறையாக காணும் நான் எலும்பு முறிவு ஏற்பட்டு உட்கார முடியாத நிலையில் இருந்தாலும் தொடர்ந்து 4 மணி நேரம் அசையாமல் அமர்ந்திருந்து கவனித்தேன். மிகவும் சிறப்பான நிகழ்ச்சி! என்று நெகிழ்ந்து போகிறார் கோவை பார்த்தசாரதி!

23 Jun - 3.05pm

சீரியஸான மாநாட்டில் ஒரு நகைச்சுவை…

Sadhguru

தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த மாநாட்டில் நம் தியான அன்பர்களும் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தனர். கடைசியாக பேசிய சீக்கிய மதத் தலைவர் கூடியிருந்த அத்தனை ஆயிரம் பேரின் குணத்தை பெரிதும் பாராட்டினார்.

தத்தமது பாணியில் பல தலைவர்கள் பல கருத்துக்களை வெளிப்படுத்த, தனது பாணியில் “இங்கு அனைவரும் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அசையாமல் அமர்ந்திருக்கிறீர்கள். இடைவெளி எடுக்காமல், பாத்ரூம் பிரேக் எடுக்காமல் இங்கு அமர்ந்திருக்கும் நீங்கள் அனைவரும் யோகிகள்தான்,” என்று தன் பேச்சைத் துவங்கி, தனக்கே உரிய பாணியில், “இதுவரை புனிதமாக நூல்களைப் பற்றி கேட்டு அசையாமல் அமர்ந்திருந்தீர்கள், நம்முடைய புனிதமான கழிப்பறையை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் தற்போது நீங்கள் பயன்படுத்தலாம்,” என்று நகைச்சுவை ததும்ப கூற, அரங்கம் சிரிப்பலையில் கலகலத்தது.

23 Jun - 2.55pm

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சத்குருவின் உரை…

Sadhguru talk

நம் எல்லைகளை தாண்டி எல்லையின்மையை அடைவதற்கே யோகா. நம் பால்வெளியின் (galaxy) வடிவம் நீள்வட்டம் தான் இந்த அடிப்படையில் தான் லிங்க வடிவம் உருவாக்கப்பட்டது.

தியானலிங்கத்தை வழிபடுவது இல்லை. அதனை உணர்ந்திட வேண்டும். அது ஒரு கதவு அது ஒரு கருவி. அதனை நான் ஒரு கருவி என்று சொன்னால் அதனை குறைத்து மதிப்பிடுவதாக பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். வேண்டுமானால் இதனை நீங்கள் புனிதமான கருவி என அழைத்துக் கொள்ளலாம்.

என்னைப் பொறுத்தவரை அது வேலை செய்கிறதா இல்லையா என்பதுதான் முக்கியம். இந்த கருவி நிச்சயம் வேலை செய்யும். நீங்கள் வெறுமனே உட்கார்ந்தால் போதும். உங்களுக்குள் அது நடக்கும்.

23 Jun - 2.09pm

திடீரென ஆசிரமத்திற்குள் நுழைந்தவுடன்…

decoration1

இந்த அழகு, ஈஷாவில் மக்கள் நடந்து கொள்ளும் விதம், தன்னார்வத் தொண்டர்களின் அர்ப்பணிப்பு, பல்லாயிரக்கணக்கில் குவிந்த இந்த மக்கள் சத்குருவின் மேல் கொண்டுள்ள அன்பில், வந்திருந்த விருந்தினர் அனைவரும் ஆச்சர்யத்தில் வார்த்தைகளற்றுப் போனார்கள். இங்கிருக்கும் சக்தியில் திளைத்தவர்கள் இது போன்ற சந்திப்பிற்கு தனக்கும் அழைப்பு வந்ததை எண்ணி மகிழ்ந்ததாய் சொன்னார்கள்.

23 Jun - 1.25pm

யாதும் ஊரே யாவரும் கேளிர்

Maruthachalaadigal

நீங்கள் என்னுடைய சமயத்திற்கு வந்தால் தான் உங்களுக்கு முக்தி கிடைக்கும் என்று ஒரு சிலர் அறியாமையினால் பிதற்றுகிறார்கள். இதனால் தான் மதங்களின் பெயரால் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இல்லையெனில் அனைத்து மதங்களும் ஒற்றுமையையே போதிக்கிறது என்றார் பேரூர் ஆதீனத்தைச் சேர்ந்த இளைய பட்டம் தவத்திரு மருத்தாச்சல அடிகளார்.

23 Jun - 12.45pm

கவிதை இதயம் கொள்வோம்…

dhyanalinga3

“ஈஷா யோகா மையத்தினுள் நுழைந்ததும் காணும் ஒவ்வொரு பொருளும் கவிதையாகவே தெரிகிறது. ஒவ்வொரு அலங்காரமும் கவிதை இதயத்தோடு செய்யப்பட்டிருக்கிறது. இங்கே இருக்கும் கட்டிடங்கள் வெறும் செங்கல்லும் மணலும் அல்ல, சத்குருவின் இதயத்திலிருந்து வெளிப்பட்ட கவிதையாகவே தெரிகிறது. மனம் எப்போதும் எல்லாவற்றையும் பிரித்தே அறிகிறது. இதயம் அனைத்தையும் அணைத்துக் கொள்கிறது.

மதங்களை இதயத்தால் பார்ப்போம். ஈஷாவில் உள்ளதை போல கவிதை உள்ளத்துடன் பார்ப்போம் என்று சின்மயா மிஷனிலிருந்து வந்திருக்கும் ஸ்வாமி ஷிவயோகாநந்தா அவர்கள் பேசினார். அவரது பேச்சே அவரது கவிதை இதயத்தை நமக்கு காட்டுகிறது.

23 Jun - 12.23pm

ஆங்கிலத்தில் பேசியும் அறை முழுக்க தமிழ் மக்கள்

People

புரிந்து கொண்ட மக்கள் கரவொலி எழுப்புகிறார்கள். புரியாதவர்களோ கைக் கூப்பி வணங்குகிறார்கள். மணிக்கணக்கில் நிகழ்ந்து வரும் சொற்பொழிவு, ஒரு சிறு சலசலப்பும் இல்லாமல் பொறுமையாக கவனிக்கும் கூட்டமோ 6000 திற்கும் மேல். இது வந்திருந்த விருந்தினர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.

23 Jun - 11.45am

பேசுகிறார் திரு. இமாம்…

gurus

Imam

இஸ்லாமைப் பற்றி பலரும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள். குரான் அனைத்து புனித நூல்களையும் ஏற்றுக் கொண்டுள்ளது. இஸ்லாம் அமைதியையே போதிக்கிறது. நானொரு முகமதியன் அல்ல. நானொரு கிறிஸ்துவன், நானொரு இந்து, நானொரு பௌத்தன் என்று சொல்லி மக்களின் கரவொலியைப் பெற்றார்.

மக்களை அமைதி நோக்கி, எடுத்துச் செல்லும் சத்குரு அவர்களின் இந்தப் பணி மிகவும் அழகான ஒன்று. அகில இந்திய இமாம் மற்றும் மசூதிகள் அமைப்பின் சார்பாக சத்குருவை நோபல் பரிசுக்கு பரிந்துரைப்போம் என்று திரு. இமாம் உமர் அகமது இல்யாஸி அவர்கள் பேசினார்.

23 Jun - 11.25am

gurus

உலகில் உள்ள சண்டைகளுக்கு எல்லாம் காரணமாய் இருக்கும் மதங்களை தடை செய்ய வேண்டுமா?
இது சத்குருவிடம் ஒருமுறை கேட்டகப்பட்ட கேள்வி…

“சண்டைகளுக்கு காரணம் மதம் அல்ல. மதத்தின் பெயரால் நடக்கும் அரசியலே காரணம். கடவுள் பெயரில் இன்று கட்சி கட்டிக் கொண்டு உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் போட்டியும் அதன் விளைவான அடிதடிகளும் வளர்ந்து வருகின்றன. மதம் என்பதே உள்நோக்கிய பயணம்தான். இதனை வெளிவாழ்க்கைக்குரிய அதிகாரப் போட்டியில் ஒரு கருவியாக மாற்றும்போதுதான் அது கட்சியாகவோ, கடவுளுக்கான ரசிகர் மன்றமாகவோ மாறிவிடுகிறது.

மதங்களை தடைசெய்தால் அவை தலைமறைவு இயக்கமாகி மேலும் வலுப்பெற்றுவிடும். மாறாக, உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் தனது தனிப்பட்ட விஷயமாக ஆன்மீகத்தையும், மதத்தையும் கருதத் தொடங்க வேண்டும். அப்போதுதான் சர்ச்சைகளும் சண்டைகளும் முடிவுக்கு வரும்,” என்று முன்னர் ஒருமுறை பேசிய சத்குருவின் நோக்கம் இன்றைய சர்வசமய மாநாட்டை ஒருங்கிணைத்ததில் வெளிப்பட்டுள்ளது.

சர்வ சமயமும் சங்கமித்துள்ள இந்த நிகழ்வில்

  • க்யால்வன்ங் த்ருக்பாஜி, த்ருக்பா வழி புத்தமத அமைப்பு, லடாக்
  • ஃபாதர்.டாக்டர்.டோமினிக் இம்மானுவேல், இயக்குனர் மற்றும் செய்தி தொடர்பாளர், தில்லி கத்தோலிக்க திருச்சபை, புது தில்லி.
  • இமாம் உமர் அகமது இல்யாஸி, தலைவர், அகில இந்திய இமாம் மற்றும் மசூதிகள் அமைப்பு.
  • ஸ்வஸ்தி ஸ்ரீ பட்டாரகா சாருகீர்த்தி பண்டிதாசார்யாவர்ய ஸ்வாமிஜி – ஜெயின் ஆசிரமம், முதாபித்ரி.
  • இளைய பட்டம் தவத்திரு மருதாசல அடிகளார், பேரூர் ஆதீனம்.
  • சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர அடிகளார், கௌமார மடம்.
  • ஸ்வாமி முக்திதானந்தா, இராமகிருஷ்ணர் ஆசிரமம், மைசூர்.
  • ஸ்வாமி சிவயோகானந்தா, சின்மயா மிஷன்.
  • ஜிஷி கவாங் ஜக்னெய், சேரா லச்சி புத்த மடம்(தலாய்லாமா), பைலுகுப்பே.
  • சின்மயா மிஷன் ஸ்வாமி சிவயோகானந்தா, மற்றும் பிரம்மகுமாரி அமைப்பு, சீக்கிய மதம், இஸ்கான் (ISKCON) ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

23 Jun - 10.38am

கிடைத்தது சத்குரு தரிசனம்

இடைவிடாது நடக்கும் பாலபிஷேகம், இடைவெளி கிடைக்காத கூட்டம், ஆனாலும் நெரிசல் ஏற்படுத்தாத இந்த மக்களின் மென்மை, தியானலிங்கத்தின் அதிர்வுகளால் நிரம்பிவழிய பௌத்த துறவிகளின் மந்திர உச்சாடனம் இங்கே நடந்து கொண்டிருக்கிறது!

கைகளில் அதிர்வுகள் ஏற்படுத்தும் இசைக்கருவி! நிலத்தை நோக்கிய பார்வை, நிச்சலனமான முகம், பவித்ரமான இவர்களது குரலில் வெளியான மந்திர உச்சாடனம், தியானலிங்கத்தின் அதிர்வுகளை சிறப்பாக உள்வாங்க செய்தது.

காலை சரியாக 10.30 மணி பாலாபிஷகம் முடித்து வெளிவரும் அன்பர்களுக்கு கிடைத்தது சத்குருவின் தரிசனம்…

இன்னும் சற்று நேரத்தில் சர்வ மதத் தலைவர்களும் சத்குருவுடன் தியானலிங்கத்தில் சங்கமிக்க உள்ளனர்…

23 Jun - 9.13am

யோகம் மட்டுமே சொல்லிக் கொடுத்து, தர்க்கம் மட்டுமே பேசி வந்த சத்குரு எப்படி தியானலிங்கத்தை உருவாக்குவார்? அதுவும் சிவனின் ரூபமான லிங்கத்தை எப்படி பிரதிஷ்டை செய்வார்?

சத்குருவுடன் ஆரம்பக் காலங்களில் தொடர்பிலிருந்த பலருக்கு இது பிரதானக் கேள்வி! ஆனால் பிற்பாடு அதன் நோக்கம் புரிந்து செயல்பட்ட இவர்களின் ஈடுபாடு அளப்பரியது…

தியானலிங்க உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களுடைய வார்த்தையிலேயே கேளுங்கள்…

23 Jun - 7.55am

விண்ணும் மண்ணும் ஒன்றாய் கூடி இங்கே இனித்துக் கொண்டிருக்கும் இனிய காலைப் பொழுதில் உங்களுடன் இணைவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம்.

இரவு முழுவதும் இன்றைய நிகழ்ச்சியின் நடுநாயகமான தியானலிங்கத்தை அலங்கரித்து அழகு பார்த்துவிட்டு விடியலில் குருபூஜையுடன் துவங்கியுள்ளது இன்றைய நாள். விடிகாலையிலிருந்தே வெகு கம்பீரமாய் வீற்றிருக்கும் தியானலிங்கத்தைப் பார்க்க ஏகத்துக்கும் கூட்டம்.

அவர் கருவறையில் சரியாக 6 மணிக்கு மஹா மந்திர உச்சாடனை ஈஷா பிரம்மச்சாரிகளால் துவங்கப்பட்டது. மையம் முழுவதும் நமசிவாய மந்திரம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவர் அருள் மடியில் அமர கூடியிருந்த கூட்டத்தால், அவர் கருவறை நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. பௌர்ணமி தினம் ஆதலால், இடைவிடாத பால் அபிஷேகமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வந்திருக்கும் விருந்தினர்களில் சிலர் பொழுது புலர்ந்தவுடன் அவர் தரிசனம் காண திரண்டிருக்கின்றனர்.

22 Jun - 9.55pm

சித்தர்களும் ஞானிகளும் உலவிய புண்ணிய பூமி இந்த வெள்ளியங்கிரி மலை. இந்த மலைச்சாரலில் தெய்வீகமாய், கம்பீரமாய் எழுந்து நிற்கும் தியானலிங்கத்தின் 14வது பிரதிஷ்டை தினம் இன்று. இன்றைய நிகழ்ச்சி முழுவதும் உங்கள் திரைகளில் நேரடி வர்ணனையாய் நுழையக் காத்திருக்கின்றன. எங்களுடன் தொடர்பில் இருங்கள்…

நாளை, நாள் முழுதும் கொண்டாட்டங்கள், தியானலிங்கத்தில் சர்வ மத உச்சாடனைகள், தியானலிங்கத்திற்கு பால் மற்று நீர் அபிஷேகம், இந்தியாவின் முக்கிய மதத் தலைவர்கள் பங்கேற்கும் சர்வ மதக் கருத்தரங்கு, குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் என நாள் முழுதும் உங்களை எங்களுடன் இருத்திக் கொள்ளப் போகிறோம்.

இந்த நிகழ்ச்சியில் பங்குபெறப் போகும் மதத் தலைவர்கள் இன்று காலை முதலே ஈஷா யோகா மையத்திற்கு வருகை தரத் துவங்கிவிட்டனர்.

வரும் தலைவர்களை சிரம் தாழ்த்தி வரவேற்றுக் கொண்டிருக்கிறது நம் குழு. ஏற்பாடுகளும் வெகு நேர்த்தியாய் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert