வரும் நவராத்திரி சிறப்பு வாய்ந்த ஒரு காலகட்டத்தில் வருகிறது என்பதை இந்த வார சத்குரு ஸ்பாட்டில் விளக்கும் சத்குரு அவர்கள், தேவி மஹிஷாசுரனை வதம் செய்வது சூட்சுமமாய் குறிக்கும் உண்மைகளைப் பற்றியும் எழுதுகிறார். நாம் தொலைக்க வேண்டிய மிருககுணத்தை பற்றி குறிப்பிடும் சத்குரு, பெண்தன்மையின் முக்கியத்துவத்தை தனக்கே உரிய பாணியில் உணர்த்துகிறார்...

மனித உடலமைப்பிற்கும் பூமிக்கும், நிலவுக்கும், சூரியனுக்கும், தெய்வீகத்தின் பல அம்சங்களுக்கும் உள்ள தொடர்பின் மூலம் உடலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து, இந்தக் கலாச்சாரம் பல ஆழ்ந்த கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளது. நம் கொண்டாட்டங்களை எப்போது, எப்படி கொண்டாடுகிறோம் என்பதிலும் அது வெளிப்பட்டது. தேவிக்கு உகந்த காலகட்டத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். அவள் தெய்வீகத்தின் பெண்தன்மையை பிரதிபலிக்கிறாள்.

நவராத்திரி என்றால், "ஒன்பது இரவுகள்" என்று அர்த்தம். அமாவாசைக்கு அடுத்து வரும் 9 இரவுகள் கணக்கில் கொள்ளப்பட்டன. நிலவின் சுழற்சியில், முதல் 9 நாட்கள் பெண்தன்மை உடையதாய் கருதப்படுகிறது. ஒன்பதாவது நாள், நவமி. பௌர்ணமியை ஒட்டி வரும் ஒன்றரை நாட்கள் இருபுறமும் இல்லாமல் நடுநிலையில் இருக்கிறது. மற்ற 18 நாட்களும், இயல்பில் ஆண்தன்மை உடையது. ஒரு மாதத்தின் பெண்தன்மையுடைய நாட்கள் தேவிக்கு உரியது. இதனால்தான், நம் பாரம்பரியத்தில், நவமி வரை உள்ள நாட்களை தேவி வழிபாட்டிற்காக அர்ப்பணித்திருக்கிறார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒவ்வொரு மாதத்திலும் வரும் இந்த 9 நாட்கள், தெய்வீக பெண்தன்மை அல்லது தேவியின் பல்வேறு அம்சங்களின் மீது கவனம் செலுத்துகிறது. அதில், வருடத்திற்கு ஒருமுறை வரவிருக்கும் நவராத்திரி காலகட்டம் மிகுந்த சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், இது சாரதாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சாரதா-கல்விக் கடவுள். இந்த கலாச்சாரத்தில், மனிதன் செய்யக்கூடிய அனைத்து விஷயங்களிலும், கற்றலுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. பிற உயிர்களால் நம்மைவிட வேகமாய் ஓட முடியும், அவை நம்மைவிட வலுவாய் இருக்கின்றன, நம்மால் செய்ய இயலாத பலவற்றையும் அவைகள் செய்கின்றன-ஆனால், அவைகளால் நாம் கற்பதைப்போல கற்க முடியாது. மனிதனாய் பிறந்ததன் பெருமையே, நாம் விருப்பத்துடன் இருந்தால், எதை வேண்டுமானாலும் கற்க முடியும். அதனால், இந்த நவராத்திரியில், புதிதாய் ஏதோவொன்றை கற்றுத் தயார் ஆகுங்கள்.

தேவி மஹிஷாசுரனை வதம் செய்யும் காட்சி, பிற உயிர்களிலிருந்து நம்மை வித்தியாசப்படுத்திக் காட்டுவதுபோல், மிக அழகாய் சித்தரிக்கப்பட்டுள்ளது. பாதி மனிதன், பாதி எருமையாய் சித்திரிக்கப்படும் மஹிஷாசுரன் மூலம் மனிதனுக்குள் பொதிந்திருக்கும் மிருக குணம் சுட்டிக் காட்டப்படுகிறது. பரிணாம வளர்ச்சியின் செயல்முறையால், ஒரு அமீபா, ஒரு மண்புழு, ஒரு வெட்டுக்கிளி, ஒரு எருமை, என ஒவ்வொரு மிருகத்தின் குணமும் உங்களுக்குள் இன்னும் இருக்கிறது. இவை யாவும் நிர்பந்தத்தினால் ஏற்படும் குணாதிசயங்கள். உங்கள் மூளையின் ஒரு பகுதி ஊர்வன குணமுடையது என இன்றைய நவீன அறிவியலும்கூட அறிந்திருக்கிறது. பரிணாம வளர்ச்சியில், ஊர்வன மூளை, வெறும் பிழைப்பிற்கான உந்துதல் பிரதானமாய் இருப்பதைத்தான் குறிக்கிறது.

மனிதர்கள் நேராக நிமிர்ந்து நடக்கத் துவங்கியபின், முதுகெலும்பு நேரான பின், ஊர்வன மூளையின் மீது பெருமூளைப் புறணி மலரத் துவங்கியது. அதுதான் உங்களை மனிதனாக்குகிறது. அதுதான் உங்கள் படைப்பின் பிரபஞ்சத்துவத்தைப் பற்றியும், அனைத்தும் ஒன்று என்பதைப் பற்றியும் நீங்கள் சிந்திக்க வழிவகுக்கிறது. அதுவே உங்களை விஞ்ஞானியாகவோ ஆன்மீகத் தேடல் உடையவராகவோ ஆக்குகிறது. ஆனால், நீங்கள் ஊர்வன மூளைக்கு திரும்பிச் சென்றால், எஞ்சி இருப்பதெல்லாம், பிழைப்புச் செயல் செய்வதற்கான தூண்டுதல் மட்டுமே. ஊர்வன மூளையிலிருந்து விலகி பெருமூளைப் புறணிக்கு நகர்வதற்கே கல்வியும், ஆன்மீகமும், தியானமும். அனைத்தையும் இணைத்துக் கொண்டு வாழும் ஒரு அணுகுமுறையை இது வழங்குகிறது. உங்கள் ஊர்வன மூளையிலிருந்து நீங்கள் செயல்பட்டால், எல்லைகள் வகுத்துக்கொண்டு வாழ்வது மட்டுமே உங்களுக்கு தெரிந்திருக்கும்.

சுற்றியுள்ள மனிதர்களுடன் சச்சரவுகள் இருப்பது, உங்களுக்கும் அவருக்கும் இடையே இருக்கும் எல்லைகளைப் பற்றிய விஷயம். அல்லது உங்களுடையது அவர்களுடையது என நீங்கள் பகுத்திருக்கும் விஷயத்தை பற்றியது. உங்கள் மூளையின் ஒரு அம்சத்திலிருந்து மட்டும் நீங்கள் செயல்பட்டால், நீங்கள் ஏதோ ஒப்பேற்றிவிடலாம், ஆனால் உங்கள் முழு திறனை நீங்கள் பயன்படுத்த மாட்டீர்கள். யோக முறைகளில் ஊர்வன மூளையை திறக்கும் வழி இருக்கிறது. அதன்மூலம், ஊர்வன மூளை பெருமூளைப் புறணியுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, இரண்டும் ஒரு மூளையாய் செயல்படும். குறிப்பிட்ட சில தியான முறைகளினால், இதனை சாதிக்க முடியும் என்று சில ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அந்த மலர் நிச்சயம் திறக்க வேண்டும். இதனால்தான், யோகப் பாரம்பரியத்தில், மனித உடலிலுள்ள சக்கரங்களை குறிப்பிடுகையில் தாமரை மலர் சின்னத்தை பயன்படுத்துகிறோம். மிகப் பெரிய மலர் தலையுச்சியில் உள்ள சஹஸ்சார சக்கரத்தை குறிப்பிடும்படியாக இருக்கிறது.

பெருமூளையின் பூ மலர்ந்தால், மனித அறிவு அனைத்தையும் இணைத்துக் கொள்ளும் விதமாக, சேர்க்கும் விதத்தில் செயல்படும். இணைத்துக் கொள்வது தத்துவம் அல்ல. இணைத்துக் கொள்வது இயற்கையின் இயல்பு. வேறெந்த உயிராலும் இதனை உணர முடியவில்லை. அவை அனைத்தும், சுறுசுறுப்பாய் தங்கள் எல்லைகளை வகுத்துக் கொண்டிருக்கின்றன. ஒரு நாய் எல்லா இடத்திலும் சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பது அதற்கு சிறுநீர் பிரச்சனை இருப்பதால் அல்ல, தன்னுடைய இராஜ்ஜியத்தை ஸ்தாபித்துக் கொள்வதற்காக. இதையே மனிதர்களும் வெவ்வேறு விதங்களில் செய்கிறார்கள். தன் எல்லைகளை நிர்மாணித்துக் கொண்டிருக்கிறார்கள், முடிந்தால் அவற்றை விஸ்தரிக்க நினைக்கிறார்கள். தேவி, மஹிஷாசுரனை வதம்செய்யும் காட்சி, ஒரு மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தை கொல்வதற்கு ஒப்பாகும். நீங்கள் மலர்போல் ஆகிறீர்கள். உங்கள் ஊர்வன மூளையை திறந்துகொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது, இல்லையேல், தேவி அதனை தன் காலடியில் கிடத்துவாள்.

ஆண்தன்மை, தன் இயல்பிலேயே பிழைப்புச் செயலால் உந்தப்படுகிறது என்பது இந்த அறிகுறியின் மற்றொரு பரிமாணம். ஊர்வன மூளை இறுக்கமான கைமுஷ்டியைப் போல் உள்ளது. பெண்தன்மை உள்நுழைந்தால் அது திறக்கக்கூடும். அது திறக்கும்போது, ஆண்தன்மை அல்லது மிருககுணம் அவள் கால்களில் வீழ்கிறது. தேவியும் மஹிஷாசுரனும் இருக்கும் அந்தச் சித்திரம் இதையே நமக்கு உணர்த்துகிறது. அவள் தன் முழு ஆற்றலுக்கு உயர்ந்ததால், மிருகத்தனம் வீழ்த்தப்படுகிறது.

Love & Grace