தித்திக்கும் தீபாவளியை, வெடித்தெழும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ சத்குருவின் தீபாவளி வாழ்த்துச் செய்தி இங்கே...

சத்குரு:

பல காரணங்களுக்காக தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது. பாரம்பரியமாக அதனை "நரக சதுர்தசி" என அழைக்கிறோம். கொடிய அரசனாகிய நரகாசுரனை கிருஷ்ணர் கொன்றதால் இந்தப் பெயர் பெற்றது. இதனால், இந்தக் கொண்டாட்டம் பிரம்மாண்டமானதாய் மாறிப் போனது. அரக்கனின் வடிவில்தான் தீமை வரவேண்டும் என்று கிடையாது. விரக்தி, மனச்சோர்வு, வெறுப்பு போன்ற விஷயங்கள் உங்கள் வாழ்க்கைக்கு அதிகமான சேதத்தினை ஏற்படுத்தலாம். நம் வாழ்வில் இதுபோல் எதிர்மறை விளைவுகளுடைய அனைத்தையும் கூறுகூறாக்கிப் போடும் நாள்தான் தீபாவளி.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
வாழ்வின் ஒவ்வொரு பரிமாணத்தையும் கொண்டாட்டமாக நீங்கள் அணுகத் துவங்கினால், வாழ்க்கையை சீரியஸாக அல்லாமல் முழுமையான ஈடுபாட்டுடன் அணுக முடியும்.

பல விதங்களில் இந்தக் கொண்டாட்டம் மங்களமான ஒரு விஷயமாக இருக்கிறது. இன்று, தனம் வேண்டுபவர்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டு என நம்பப்படுகிறது. ஆரோக்கியம் வேண்டுபவர்களை சக்தி வந்தடைவாள் என்பார்கள். அறிவு வேண்டுபவர்களைத் தேடி சரஸ்வதி தேவி வருவாள் என்கிறார்கள். ஒருவருக்கு நல்வாழ்வு கிடைக்கும் என்பதை பேச்சு வழக்கில் இவ்வாறு சொல்கிறார்கள்.

பண்டிகைகள் என்பவை நம் வாழ்வினை துடிப்புணர்வுடன், உற்சாகத்துடன் வாழ துணை செய்வதால், இந்திய கலாச்சாரத்தில் 365 நாட்களும் கொண்டாட்டமாய் இருந்தது. ஆனால் இன்றோ, வருடத்தில் மொத்தம் 10 பண்டிகைகள் எனும் நிலைக்கு வந்துவிட்டோம். அலுவலகம் செல்ல வேண்டும், தினசரி வேலைகளில் ஈடுபட வேண்டும் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டோம். அலுவலகத்திலிருந்து கிடைக்கும் வெறும் விடுப்பாகவே பண்டிகைகளைப் பார்க்கத் துவங்கிவிட்டோம். விடுமுறை நாட்களில் மதியம் வரை உறங்கி, ஓய்வெடுக்கும் நிலையிலேயே இன்று பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். எழுந்தபின், வயிறுமுட்ட உண்டுவிட்டு, டிவி பார்த்து பொழுதை சுலபமாக கழித்துவிடுகிறோம். முன்பு, வாழ்க்கை இப்படி இருந்ததில்லை. ஒரு பண்டிகை என்றால் ஊர் மக்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்றுகூடி, பிரம்மாண்டமாய் அதைக் கொண்டாடுவார்கள்.

மக்களிடம் இந்தக் கலாச்சாரத்தை கொண்டுவர, 4 முக்கிய பண்டிகைகளான பொங்கல், மஹாசிவராத்திரி, நவராத்திரி, குருபௌர்ணமி ஆகியவற்றை ஈஷா யோக மையம் கொண்டாடி வருகிறது. இதனை நாம் உருவாக்காவிட்டால் அடுத்த தலைமுறை தலையெடுப்பதற்குள் பண்டிகைகள் என்றால் என்னவென்றே அவர்களுக்கு தெரியாமல் போய்விடும். தன் அருகே உள்ள மற்றொரு மனிதன் மீது அக்கறை இல்லாமல், வெறுமனே உண்டு, உறங்கி வாழ்ந்து போய்விடுவார்கள். ஒரு மனிதன் முழு உற்சாகத்துடன் வாழவே இந்திய கலாச்சாரத்தில் இந்த அம்சம் எடுத்து வரப்பட்டது. வாழ்க்கையே ஒரு கொண்டாட்டமாய் இதனால் மாறிப்போகும்.

வாழ்வின் ஒவ்வொரு பரிமாணத்தையும் கொண்டாட்டமாக நீங்கள் அணுகத் துவங்கினால், வாழ்க்கையை சீரியஸாக அல்லாமல் முழுமையான ஈடுபாட்டுடன் அணுக முடியும். ஏதோவொன்று முக்கியம் என எண்ணத் துவங்கும்போது மக்கள் மிக சீரிஸானவர்களாக மாறிவிடுகின்றனர், இது இன்றைய சமுதாயத்தினரிடம் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை. ஏதோ ஒன்று முக்கியமில்லை என நினைக்கும்போது, அதில் தொய்வு ஏற்பட்டுவிடுகிறது. ஒரு செயலுக்கு தேவையான ஈடுபாடு இருப்பதில்லை.

"அவர் சீரியஸாக இருக்கிறார்" என ஒருவர் சொன்னால், அவர் அடுத்து எங்கு செல்லப் போகிறார் எனச் சொல்லவும் வேண்டுமா? முக்கியமில்லை என கருதும் விஷயங்களில் அவர்கள் ஈடுபடுவதில்லை. அனைத்தும் அவர்களை கடந்து போய்விடுகிறது. அனைத்தையும் சீரியஸ் இல்லாத கண்களுடன் பார்ப்பது வாழ்வை, அதை அடைவதற்கான பாதையை திறப்பதற்கான இரகசியம். ஈடுபாட்டுடன் இருக்கும் அதே சமயத்தில், அதனை ஒரு விளையாட்டு போல் பரிபூரண ஈடுபாட்டுடன் விளையாட வேண்டிய தேவையும் இருக்கிறது. இதனால்தான் வாழ்வின் மிக முக்கியமான அம்சங்கள் யாவும் மிக விளையாட்டுத்தனமான வகையில் செய்யப்படுகிறது. என்ன சொல்வது உங்களுக்கு புரியாமல் போய்விடக் கூடாதே!

உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் கொண்டாட்டத்தை கொண்டு வருவதற்கான மிக முக்கியமான கருவி, தீபாவளி. அதனை இன்னும் அழுத்திச் சொல்ல, உங்களுக்குள்ளும் சற்றே உஷ்ணத்தை அதிகப்படுத்த பட்டாசுகளும் கொண்டாட்டத்தில் சேருகின்றன. வருடத்தில் ஒருநாள் மட்டும் சந்தோஷமாய் இருந்துவிட்டு போவதற்கான நாள் அல்ல தீபாவளி. ஆனால், நீங்கள் நமத்து போன பட்டாசு போல் இருந்தால், வெளியிலிருந்து ஒரு பட்டாசு உங்களுக்கு நித்தமும் தேவை. நீங்களே வெடித்தெழும் பட்டாசாய் இருக்க வேண்டுமல்லவா? நாம் இங்கு சும்மா உட்கார்ந்திருக்கும்போது, நம் உயிர்சக்தி, நம் இதயம், நம் மனது, நம் உடல் அனைத்தும் வெடித்தெழும் உயிர்துடிப்புடன் இருக்க வேண்டுமல்லவா?

Love & Grace