தீபாவளி சிறப்பு ரெசிபி

Deepavali sirappu recipe

ஈஷா ருசி

வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் பல திரைப்படங்கள், சீரியல்கள் என நடித்து வருபவரும், குணச்சித்திர நடிகரும், சிறந்த நடிப்பிற்காகவே ‘கலைமாமணி’ விருது வாங்கியவருமான திரு.அமரசிகாமணி தனது உணவு அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

சின்ன வயதிலிருந்தே என் அம்மா சமைக்கும் அழகைப் பார்த்து ருசித்து வளர்ந்தவன் நான். ‘சுரைப்பிஞ்சு’ங்கிற ஒரு பலகாரத்தைத் தீபாவளி அன்னிக்கு எங்கம்மா பண்ணுவாங்க. அந்த மாதிரி ஒரு பலகாரத்தை வேறு எங்கேயுமே சாப்பிட்டதில்லை.

Actor Amarasigamani

கொட்டாங்குச்சி கண்ணில் ஓட்டைப்போட்டு, அது வழியா அரைச்ச மாவை ஊத்தி, பொரிச்சு, தேங்காய்ப்பாலில் ஊறவச்சு கொடுப்பாங்க. என்ன டேஸ்ட் தெரியுமா? அதேமாதிரி காய்கறியெல்லாம் போட்டு ஒரு கூட்டு பண்ணுவாங்க, அவ்வளவு நல்லா இருக்கும்.

சமையல் மட்டுமில்லை, அவங்க காய்கறிகளை அரிஞ்சு வைக்கிறதே ஒரு அழகாக இருக்கும். ஒவ்வொரு சின்ன வேலையையும் அவ்வளவு ரசனையாப் பண்ணுவாங்க. இந்தக் காலத்திலே அப்படியெல்லாம் செய்ய பெண்களுக்கு நேரம் இருக்கான்னே தெரியலை. அது ஒரு காலம்!

அப்படிப் பார்த்துப் பார்த்து வளர்ந்த நான் சினிமாவுக்கும், டி.வி.க்கும் வந்துட்டேன். இது நேரம், காலம் பார்க்காமல் உழைக்க வேண்டிய துறை. உணவும் அப்படித்தான். நேரம் கிடைக்கும்போது சாப்பிடணும், கிடைச்சதை சாப்பிடணும். எல்லா துறைகளிலும் இருக்கிற மாதிரி இங்கேயும் ‘ஸ்ட்ரெஸ்’! எல்லாம் சேர்ந்து உடம்புல பயங்கரமா ‘சுகர்’ ஏறிப் போச்சு.

இதனால் படப்பிடிப்புகளில் ரொம்ப சிரமப் படுவேன். திடீர்னு தலை சுத்தும், பசிக்கும். எதையும் வெளியே காட்டிக்க முடியாது. அப்பதான் என்னுடைய நண்பர்கள், “சுகர்க்கு நீ மருந்து சாப்பிடு, வேண்டாம்னு சொல்லலை. ஆனால் யோகா கத்துக்கிட்டு செய். நிறைய பிரச்னைகள் குறையும்” என்றார்கள்.

அதற்கப்புறம்தான் யோகா கத்துக்கிட்டு செய்ய ஆரம்பிச்சேன். ஆறு மாசத்திலே நிறைய மாற்றங்கள். மாத்திரை அளவு கூட குறைஞ்சு போச்சு. தலைசுத்தல் மாதிரியான பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து போச்சு. சுகர்க்காக கத்துக்கிட்ட யோகா, இப்போ மேலும் பல வழிகளில் உதவியா இருக்கு. முன்ன மாதிரி டென்ஷனோ, பதட்டமோ இல்லை, நிம்மதியா இருக்கேன்.

காலையில் நாலு மணிக்கு எழுந்துவிடுவேன். காலைக்கடமையை முடிச்சுட்டு யோகா செஞ்சுடுவேன். ‘வாக்கிங்’ ரெகுலராப் போகிறேன். நிறைய பச்சைக்காய்கறிகள், பழங்கள் சாப்பிட ஆரம்பிச்சேன். ஓட்ஸ் என்னோட உணவுல ரெகுலரா இருக்கும். இதெல்லாமா சேர்ந்து என் உடம்பும், மனசும் எவ்வளவோ மாறிப் போச்சு.

அப்பதான் நான் உணர்ந்தேன், நம்ம நாட்டுப் பெரியவங்க எவ்வளவு மகத்தான விஷயங்களையெல்லாம் நமக்காக கண்டுபிடிச்சு வச்சிருக்காங்க. நாமதான் ஒரு விழிப்புணர்வே இல்லாம இருந்துட்டோம். நம்ம பெருமைகளைத் தெரிஞ்சுகிட்டு அதைப் பின்பற்றினா, நம்ம நாட்டில இத்தனை ஆஸ்பத்திரிகளுக்குத் தேவையே இருக்காது.

எங்கம்மா செய்யும் இரண்டு ‘ரெசிபி’களையும் சொல்லவா…

சுரைப் பணியாரம்

தீபாவளி சிறப்பு ரெசிபி, Deepavali sirappu recipe

தேவையான பொருட்கள் :

 • பச்சரிசி – அரை கப்
 • உளுந்து – அரை கப்
 • உப்பு – ஒரு சிட்டிகை
 • தேங்காய்ப்பால் – நான்கு கப்
 • ஏலக்காய்த்தூள் – கால் தேக்கரண்டி
 • சர்க்கரை – தேவையான அளவு
 • எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :

 • பச்சரிசி உளுந்தை ஒரு மணிநேரம் ஊற வைத்து சிட்டிகை உப்பு சேர்த்து மைய அரைக்கவும். கொட்டாங்குச்சியின் கண் இருக்கும் இடத்தில் ஓட்டை போடவும். அரைத்த மாவை கொட்டாங்குச்சியில் போட்டு சூடான எண்ணெயில் அழுத்தினால் மணி மணியான பணியாரம் ரெடி!
 • இதை பொன்னிறமாகப் பொரித்து வெந்நீரில் போட்டு தனியாக வைக்கவும்.
 • இதற்கிடையில் தேங்காய்ப் பாலில் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்துக் கலக்கவும்.
 • இதில் பணியாரங்களைச் சேர்த்து பத்து நிமிடம் ஊற வைத்துப் பரிமாறவும்.

பின்குறிப்பு : கொட்டாங்குச்சியை நன்றாக சுத்தப்படுத்திவிட்டுப் பயன்படுத்தவும்.

காய்கறி கூட்டு

தீபாவளி சிறப்பு ரெசிபி, Deepavali sirappu recipe

தேவையான பொருட்கள் :

 • நறுக்கிய கேரட் – இரண்டு
 • பச்சைப்பாட்டாணி – ஒரு கைப்பிடி
 • நறுக்கிய உருளைக்கிழங்கு – ஒன்று
 • நறுக்கிய பீன்ஸ் – ஐந்து
 • நறுக்கிய தக்காளி – ஒன்று
 • புதினா – சிறிதளவு
 • உப்பு – தேவையான அளவு
 • எண்ணெய் – தேவையான அளவு
 • கடுகு – கால் தேக்கரண்டி

அரைக்க :

துருவிய தேங்காய் – ஒரு மேஜைக் கரண்டி
பொட்டுக்கடலை – ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – மூன்று
கிராம்பு – இரண்டு
ஏலக்காய் – ஒன்று.

செய்முறை :

 • அரைக்க கூறியுள்ள பொருட்களை மைய அரைக்கவும்.
 • இதற்கிடையில் காய்கறிகளை திட்டமாக தண்ணீர் வைத்து வேகவைக்கவும்.
 • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகை சேர்த்துத் தாளிக்கவும்.
 • இதில் தக்காளி, புதினா சேர்த்து நன்றாக வதக்கவும்.
 • பிறகு அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி வேகவைத்த காய்கறிகள் மற்றும் உப்பை சேர்க்கவும்.
 • ஐந்து நிமிடம் இதை கொதிக்க வைத்து இறக்கி விடவும்.

பின்குறிப்பு : இதை மிதமான தீயில் சமைத்தால் ருசியாக இருக்கும்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert