இன்று, சினிமா பிரபலங்களைக் கொண்டாடும் ஒரு தனி கலாச்சாரத்தை நாம் பார்க்க முடிகிறது.. பத்திரிக்கைகளும், மற்ற ஊடகங்களும் கூட பிரபலங்கள் என்று அவர்களை கொண்டாடுவதோடு, அவர்களெல்லாம் தேவலோக மாந்தர்கள் என்பது போன்ற எண்ணங்களை மக்கள் மனதில் விதைக்கின்றன. சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவது சரியா என்ற விவாதங்களும் அதிகரித்துள்ள இந்த வேளையில், இதைப் பற்றி சத்குருவின் பார்வை இங்கே!

சத்குரு:

யாரைக் கொண்டாடுவது?

என்னைப் பொறுத்தவரை அத்தனை பேருடைய வாழ்க்கையும் கொண்டாட்டத்துக்கு உரியதுதான். நீங்கள் விவசாயியாக இருந்தால் என்ன, வேந்தனாக இருந்தால் என்ன, பிரதமராக இருந்தால் என்ன, பென்சில் விற்பவராக இருந்தால் என்ன? நீங்கள் மனம் வைத்தால், உங்கள் வாழ்க்கையைக் கணத்துக்குக் கணம் கொண்டாடலாம்!

ஒருவர் உங்களை சினிமா திரையிலோ, கிரிக்கெட் மைதானத்திலோ சந்தோஷப்படுத்தும் விதமாகச் செயல் புரிந்துவிட்டால், உடனே அவர் எல்லாவற்றிலும் சிறந்திருப்பார் என்று நினைத்துவிடுகிறீர்கள்.

உள்ளே இழுக்கும் ஒவ்வொரு மூச்சையும் அருந்தும் ஒவ்வொரு துளித் தண்ணீரையும் கூட கொண்டாட்டமாகச் செய்யலாம். பிறகு எதற்காக வேறு யாரையோ பிரபலம் என்று கொண்டாட வேண்டும்?

தங்கள் வாழ்க்கையைக் கொண்டாடத் தெரியாமல் வேறு யாருடைய வாழ்க்கையையோ கொண்டாடுவது வருத்தத்துக்கு உரிய பரிதாப நிலை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மக்களிடத்தில் தாங்கள் நேரில் காணாத சினிமா நடிகரைப் பற்றிய பரபரப்பு இருக்கிறது. தங்களுடன் வசிக்கும் குடும்பத்தினரைவிடவும், நெருக்கமான உறவினர்களைவிடவும் சினிமா நடிகரை முக்கியமாகக் கருதுபவர்களை கண்டு ஆச்சர்யமாக இருக்கிறது.

இதற்குப் பின்னணியில் ஒரு காரணம் இருக்கிறது. யாரும் தங்கள் வாழ்க்கை முழுமை அடைந்ததாகத் திருப்தி கொள்வதில்லை. ஏதோ ஒரு குறை இருப்பதாக உணர்ந்து, அதை இட்டு நிரம்புவதற்காக வேறு விஷயங்களை நாடுகிறார்கள்.

சில நடிகர்களுடைய முகங்களைத் திரையில் பார்த்ததுமே, சிலர் உணர்ச்சி வசப்பட்டு சந்தோஷக் கூச்சலிடுகிறார்கள். இது, வாழ்க்கையை எவ்வளவு நிறைவற்றதாக நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதைத்தான் காட்டுகிறது.

சினிமா நடிகர் மிக அற்புதமாக வாழ்கிறார் என்பது உங்கள் கற்பனை. வசதிகள் இருப்பதால் மட்டுமே எல்லோரும் சந்தோஷமாக இருந்து விடுவதில்லை. யாருக்குத் தெரியும்? அவருடைய வாழ்க்கை உங்களுடைய வாழ்க்கையைவிட மிக மோசமானதாக இருக்கக்கூடும்.

சினிமா என்பது ஒரு சக்தி வாய்ந்த மாயை. அதன் மூலம் கிடைப்பது தற்காலிகமாக, ஒரு பொய்யான சந்தோஷம். அவ்வளவுதான்! அது உங்கள் பிரச்சனைகளுக்கு ஒருபோதும் தீர்வாகாது.

ஒருவர் உங்களை சினிமா திரையிலோ, கிரிக்கெட் மைதானத்திலோ சந்தோஷப்படுத்தும் விதமாகச் செயல் புரிந்துவிட்டால், உடனே அவர் எல்லாவற்றிலும் சிறந்திருப்பார் என்று நினைத்துவிடுகிறீர்கள். அவருடைய திறமையை மட்டும் மதியுங்கள் போதும். விளையாட்டு வேறு... அரசியல் வேறு!

நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா?

அதற்காக நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று நினைப்பதும் முட்டாள்தனம். வன்முறையாளர்கள் ஆட்சிக்கு வரும்போது, நடிகர்கள் ஏன் வரக்கூடாது? அவர்களுக்கு மக்களிடம் இருக்கும் அறிமுகத்தை வைத்து கூட்டம் சேர்ப்பதுகூடத் தப்பில்லை. ஆனால், வேறு எந்த அடிப்படைக் காரணமும் இல்லாமல், நடிகராகப் பெற்ற புகழே, முதல்வராக வருவதற்குப் போதுமானது என்று நினைப்பதுதான் அறிவீனம்.

'ஒன்று, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவேன். அல்லது காலடியில் தூக்கிப் போட்டு மிதிப்பேன்' என்பது என்ன அணுகுமுறை?

உங்களுக்குத் தேவை பிரபலங்கள் அல்ல... உங்களை வழி நடத்திச் செல்லக்கூடிய வகையில் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுபவர்கள்தாம். எல்லாப் பிரபலங்களையும் விட பெரிய படைப்பாளி உங்களுக்குள் உயிர்ப்புடன் இருப்பதை நீங்கள் உணர வேண்டும்.

சமூகத்தில் இன்னொரு வகை மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு யாராவது பிரபலமாக இருந்தால், பொறுக்காது. மற்றவருடைய வெற்றியை அங்கீகரிக்க மறுப்பதிலேயே இவர்கள் சுகம் காண்பார்கள்.

நம் நாட்டில் இந்தப் பிரச்சனை அதிகமாகக் காணப்படுகிறது. 'ஒன்று, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவேன். அல்லது காலடியில் தூக்கிப் போட்டு மிதிப்பேன்' என்பது என்ன அணுகுமுறை?

திறமையான கலைஞர்கள்...

தொலைக்காட்சியில் என்னிடம் கேள்வி கேட்பதற்காக திரைத் துறையில் இருக்கும் பிரபலங்கள் ஏன் அழைக்கப்பட்டார்கள் என்றுகூட ஒரு கேள்வி எழுந்தது. என்னிடம் கேள்வி கேட்க வந்தவர்களை நான் பிரபலங்களாகக் கருதி, எந்தத் தனி முக்கியத்துவமும் தந்து கொண்டாடவில்லை.

அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஓர் உயரத்தைத் தொட்டிருக்கிறார்கள். புத்திசாலித்தனமாகக் கேள்வி கேட்கிறார்கள். இசையில் சாதித்தவரை ஏன் நாம் அங்கீகரிக்கக்கூடாது? மக்கள் தலைவராக ஒருவர் உயர்ந்தால், அவருடைய அந்தத் திறமையை ஏன் மதிக்கக்கூடாது? சினிமாத் துறையைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அந்த நபர்களைக் குறைத்து மதிப்பிட வேண்டிய அவசியம் என்ன?

இந்தியாவில் இதுபோல் வெற்றி பெற்றவருக்கு எதிராகக் கொடி தூக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. நல்லது எது நடந்தாலும் இவர்கள் புலம்புவார்கள். அடுத்தவர் வெற்றி கண்டு பொருமித் தள்ளுவார்கள். தங்களால் வெற்றி பெற முடியவில்லையே என்ற ஆதங்கம்தான் இவர்கள் மற்றவரைக் குறை சொல்வதன் அடிப்படை.

யாராவது பணக்காரராகிவிட்டால், அவர்களைப் பார்த்து காழ்ப்புடன் வார்த்தைகளால் கல்லெறிவார்கள். இதுபோல் ஏழ்மையைக் கொண்டாடுவது ஒரு உபகலாச்சாரம். இதனால், சமூக முன்னேற்றத்துக்குப் பின்னடைவுதான். இவர்கள் நாட்டின் உண்மையான எதிரிகள். வாழ்க்கையைப் புரிந்து கொள்ளத் தெரியாத அஞ்ஞானிகள்.

ஏழ்மையை எதற்காகக் கொண்டாட வேண்டும்? ஏழ்மையைக் கொண்டாடுபவர்களை இரண்டு நாட்களாவது பட்டினி போட வேண்டும். மழை நாட்களில், நடைபாதைகளில் படுத்து, பிச்சையில் கிடைத்த சோற்றைச் சாப்பிட்டுப் பார்த்தால்தான், ஏழ்மையின் வலி இவர்களுக்குப் புரியும்.

தயவு செய்து ஏழ்மையைக் கொண்டாடாதீர்கள். யாரையும் துதிக்கவும் வேண்டாம்... மிதிக்கவும் வேண்டாம் என்பதே என் கருத்து.