இன்றைய ஏழாம் நாள் நவராத்திரி கொண்டாட்டத்தின் பதிவுகள், உங்கள் முன்னே சில வரிகளில்...

லிங்கபைரவியில் 9 நாட்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் நவராத்திரி திருவிழாவின் இன்றைய ஏழாம் நாள் கொண்டாட்டத்தில், சின்மயா சகோதரிகளின் கர்நாடக வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 5.30 மணியளவில் ஈஷா யோகா மையத்திலுள்ள சூரியகுண்டம் முன்பாக துவங்கிய இந்நிகழ்ச்சியை ஆயிரக் கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சின்மயா சகோதரிகள் என்றழைக்கப்படும் கர்நாடக சங்கீத உலகில் பிரபலமானவர்களான உமா மற்றும் ராதிகா சகோதரிகள், தங்களது இளம் பிராயத்தில் தாயார் பவானி நடேசனிடம், பாலபாடத்தைக் கற்றுக் கொண்டனர். தொடர்ந்து பத்மபூஷண் மதுரை டி.என் சேஷ கோபாலனிடமும், இசை பேரொளி நெய்வேலி ஆர்.சந்தான கோபாலனிடமும் சங்கீத தீட்சை பெற்றனர்.

இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை வழங்கியுள்ள இவர்கள், தூர்தர்ஷன் மற்றும் பிற தொலைகாட்சிகளிலும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்கிவருகின்றனர். அதுமட்டுமல்லாமல், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் "தித்திக்கும் தேன்" தமிழ் நிகழ்ச்சிக்காக திவ்யபிரபந்தங்களுக்கு இசை அமைத்து பாடி வருகின்றனர்.

சரஸ்வதி தேவியை துதித்துப் பாடப்பட்ட கீர்த்தனையுடன் இன்றைய நிகழ்ச்சியைத் துவங்கிய சகோதரிகள், தொடர்ந்து பல அற்புத ராகங்களில், பல அழகிய கீர்த்தனைகளைப் பாடி ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றனர். மிருதங்கம், கடம், வயலின் ஆகிய பக்க வாத்தியங்கள் அவர்களின் குரலிசைக்குப் பக்கபலமாக அமைந்தன. பிரபல வயலினிசைக் கலைஞர் திரு. V.V.ரவி அவர்கள் வயிலினிசை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அந்த அற்புத இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தியின் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. நவராத்திரி விழாக் காலங்களில் லிங்கபைரவி, முதல் மூன்று நாட்கள் குங்கும அலங்காரத்திலும் அடுத்த மூன்று நாட்கள் மஞ்சள் அலங்காரத்திலும், இறுதி மூன்று நாட்கள் சந்தன அலங்காரத்திலும் பக்தர்களுக்குக் காட்சியளிப்பாள். ஏழாம் நாளான இன்று, சந்தன அலங்காரத்தில் காட்சியளித்த லிங்கபைரவி தேவி, பக்தர்களுக்கு அருளை வாரிவழங்கினாள்.


நாளை...

எட்டாம் நாள் திருவிழாவான நாளை, அஞ்சனா டோங்க்ரே மற்றும் குழுவினரின் ஃப்யூஷன் நடனம் நிகழவுள்ளது!