சென்னையில் டிசம்பர் 2 அன்று 'சென்னை விப்ரோ மாரத்தான் ஓட்டம்' நடந்தது. 6000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த மாரத்தானில் 600க்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் பங்கேற்றனர்.

ஏற்கனவே மும்பை, ஹைதராபாத் நகரங்களில் இது போன்ற மாரத்தான் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதில் ஈஷா வித்யா தன்னார்வத் தொண்டர்கள் கடந்த 4 ஆண்டுகளாகப் பங்கேற்று ஓடி ஈஷா வித்யாவிற்காக நிதி திரட்டி வருகிறார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இதே போன்ற மாரத்தான் தற்போது முதல் முறையாக சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஈஷா வித்யா பள்ளிகளுக்கு நிதி திரட்டுவதற்காக நம் தன்னார்வத் தொண்டர்கள் 500க்கும் மேற்பட்டோர் இதில் பெயர் பதிவு செய்தனர். இந்தத் தன்னார்வத் தொண்டர்கள், ஈஷா வித்யா பள்ளிக்கு நிதி திரட்டும் ஆர்வத்தில்தான் இதில் கலந்து கொள்ள பெயர் பதிவு செய்திருந்தனரே தவிர இவர்களில் பெரும்பாலானோர் பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்தில் விளையாட்டு வீரர்களோ அல்லது தினசரி அளவில் நடைப்பயிற்சி அல்லது ஓட்டப்பயிற்சி செய்பவர்களோ அல்ல.

எனவே நம் தன்னார்வத் தொண்டர்கள் அவர்கள் வட்டாரத்தில் உள்ள பள்ளி மைதானம் அல்லது பூங்கா அல்லது கடற்கரை போன்ற இடங்களில் கூடி இந்த மாரத்தானிற்காக கடந்த 2 மாதங்களாக தினசரி பயிற்சி செய்ய ஆரம்பித்தார்கள்.

அதே நேரத்தில் இவர்கள் தங்கள் அலுவலக நண்பர்கள், உறவினர்கள் போன்றோரிடம், கிராமத்துக் குழந்தைகளுக்கான பள்ளி வசதிக்காக தாங்கள் ஓட இருப்பதை எடுத்துக் கூறி நிதி திரட்டி வந்தனர். இதைத் தவிர ஈஷா வித்யா பள்ளிக்கு நிதி திரட்டுவதற்காக L&G, முருகப்பா குழுமம் மற்றும் Chennai Trekking Club பை சேர்ந்தோரும் இந்த மாரத்தானில் ஓட முன்வந்தது குறிப்பிடத்தக்கது.

'பல நிறுவனங்கள் பங்கு கொண்ட இந்த மாரத்தானில் ஈஷாவில் மட்டும்தான் இப்படி மொத்தமாக 600 பேர் பதிவு (bulk registration) செய்துள்ளனர். இதற்காக ஈஷாவிற்கு நன்றி கூறுகிறோம்' என்று மாரத்தான் நாளிற்கு முதல் நாள் நடந்த ஒரு விழாவில் மாரத்தான் ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்ததும் பலத்த கரவொலிகள்.

கடைசியில் அந்த திருவிழா நாளான டிசம்பர் 2ம் வந்தது. மாரத்தான் நடைபெறும் இடமான கிண்டி ஐஐடி மைதானத்தில் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் அனைவரும் ஓரிடத்தில் கூடி 'உள் எழுச்சிப் பாடல்' பாடி, ஓடுவதற்குத் தயாராயினர். இந்த தன்னார்வத் தொண்டர்களில் மிகச் சிலர் 21 கி.மீ.க்கும் மற்ற அனைவரும் 10 கி.மீ.க்கும் தயாரானார்கள். இவர்களில் 50 வயதிற்கு மேற்பட்டோரும் உண்டு. அம்மா, பெண் என கலந்து கொண்டோரும் உண்டு.

இளைஞர்களெல்லாம் 10 கிமீ ஓடி முடிக்க திணறிக் கொண்டிருக்கும்போது நம் மையத்தை சேர்ந்த ஸ்வாமி நிராகாரா தனது 56 வயதில் அதுவும் 3 மணி நேரத்திற்குள் 21 கி.மீ ஓடி முடித்தது பலரை ஆச்சரியப்படுத்தியது. தான் தனது இளமைப் பருவத்தில் ஒரு விளையாட்டு வீரர் அல்ல என்றும் ஹட யோகா தொடர்ந்து செய்து வருவதாலேயே தன்னால் இப்படி ஓட முடிந்தது என்றும் அவர் பகிர்ந்து கொண்டார். 'மேலும் காவி உடையுடன் சாலையில் ஓடியபோது, பாதுகாப்பிற்காக நின்றிருந்த காவலர்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து உற்சாகப் படுத்தியதாக அவர் பகிர்ந்து கொண்டார்.

ஓடுவது என்பது உடலுக்கு ஒரு நல்ல பயிற்சி. அதுவும் மனதுக்கு உகந்த ஒரு காரியத்திற்கு நிதி திரட்ட ஓடும்போது அது இரட்டிப்பு மகிழ்ச்சி. எனவே அன்று அங்கு ஓடிய ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் இடையே ஒரே உற்சாகம்தான். ஓடியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பகிர்ந்த ஒவ்வொரு தன்னார்வத் தொண்டரின் முகத்திலும் ஒரே ஆனந்தம்தான்.

பிறருக்காக நாம் எதை செய்தாலும் அது ஆனந்தத்தைத்தானே தரும்!