துறவிகளுக்கு மாரத்தானில் என்னப்பா வேலை என்கிறீர்களா? இது விளம்பரத்திற்காகவா, பணம் சம்பாதிப்பதற்காகவா, இல்லை போட்டியில் வெற்றி பெறவா? உங்கள் கேள்வியும் இதுதானா? பதில் இந்தப் பதிவில் ஒளிந்திருக்கிறது, அறிந்துகொள்ளுங்கள்.

20 ஈஷா பிரம்மச்சாரிகள், ஆசிரமவாசிகள் இணைந்து ஜனவரி 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நிகழவிருக்கும் விப்ரோ சென்னை மாரத்தான் போட்டியில் கலந்துகொள்கிறார்கள். ஆனால், இவர்களின் குறிக்கோளும் இலக்கும் பரிசையோ புகழையோ நோக்கியல்ல!

விப்ரோ சென்னை மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டு, ஈஷா வித்யா பள்ளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இவர்கள் ஓடவிருக்கிறார்கள். பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு தரமான ஆங்கிலக் கல்வியும், கனிணி அறிவும் வழங்கும் ஈஷா வித்யா பள்ளிகளின் முயற்சிக்கு, நன்கொடையும் ஆதரவும் தன் ஓட்டத்தின் மூலம் திரட்டுகிறார்கள். ஈஷா வித்யா மூலம் தமிழ்நாட்டில் சுமார் 6400 கிராமப்புற குழந்தைகள் குறைந்த செலவில் தரமான கல்வியைப் பெற்று வருகிறார்கள்.

ஒருமாத கால பயிற்சி செயல்முறையில், ஓடுதல்-நடத்தல்-ஓடுதல்-நடத்தல் பயிற்சி நுணுக்கத்தின் மூலம் பலர் முறையான ஓட்ட முறையைப் பெற்றுள்ளனர். 2 கி.மீ தூரத்திலிருந்து படிப்படியாக பலரும் 10 கி.மீ தூரத்தை வலியில்லாமல் ஓடிக் கடக்கும் நிலையை அடைந்துள்ளனர்.

கோவை ஈஷா யோகா மையத்தின் ஆசிரமவாசிகளான இந்த 27 பேரும் சென்னைக்கு பயணமாகி, அங்கே சுமார் 600 ஈஷா தன்னார்வத் தொண்டர்களுடன் இணைந்து ஜனவரி 31ஆம் தேதி நிகழவுள்ள மாரத்தானில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இதுகுறித்து பிரம்மச்சாரி ஒருவர் பகிர்ந்துகொள்ளும்போது “எங்களால் முடிந்த உதவியை ஈஷா வித்யாவில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு வழங்க விரும்புகிறோம். மாரத்தானில் கலந்துகொள்வதன் மூலம் எங்களது சிறிய பங்களிப்பு அவர்களை சேரும்!” எனக் கூறினார்.

கடுமையான பயிற்சி

சில மாதங்களாக மாரத்தான் பந்தயத்தில் கலந்துகொள்வதற்கான பயிற்சியில் ஈஷா பிரம்மச்சாரிகளும் ஆசிரமவாசிகளும் தங்களை தீவிரமாக ஈடுபடுத்தி வந்துள்ளனர். ஆசிரமத்தில் பெரும்பாலானவர்கள், காலணி அணியாமலேயே நடந்து பழக்கப்பட்டவர்கள் என்பதால் வெறும் கால்களில் ஓடிப் பழகினர். அவர்கள் வைத்திருந்த பழைய ஷூக்கள் சரியாகப் பொருந்தாமல், காலில் எரிச்சல் உண்டாகியது. இந்நேரத்தில்தான், மும்பை மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த ஓட்டப்பயிற்சி வீரர்களிடமிருந்து காலணிகள் நன்கொடையாக வந்தடைந்தது. எதிர்பாராத ஒரு உதவி இது.

பெங்களூரு மாரத்தான் ஓட்டத்திற்கான இயக்குனர் நாகராஜ் அடிகா அவர்கள் புதிய ஓட்டப்பந்தய ஷூக்களை வழங்கி உதவினார். சில நாட்களாக ஷூ அணியாமல் வெறும்காலில் ஓடிய ஒருவர் ஷூ கிடைத்தபின், “ஷூ அணிந்து ஓடுவது, எத்தனை அற்புதமான அனுபவம் என்பதை உணர்ந்தேன்!” என்றார்.

பெரும்பாலானவர்களுக்கு தங்கள் பள்ளி, கல்லூரி காலங்களில் ஓடியதைத் தவிர, ஓடிப் பழக்கமில்லை! செப்டம்பர் 2015 இறுதியில் ஈஷா யோக மையத்தை சுற்றிப்பார்க்க வந்திருந்த, அனுபவமிக்க தடகள வீரரும், ஓட்டப்பந்தய வீரருமான திரு. அஜித் சிங் அவர்கள் இவர்களுக்கு மாரத்தான் ஓட்டப் பயிற்சி வழங்க முன்வந்தார்.

ஈஷா ஆசிரமவாசியான பெக்கி உல்ஃப் மற்றும் சுவாமி நிராகரா ஆகிய இருவரும் அரை மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டவர்கள். இவர்கள் இருவரின் துணையுடன், அனைவரும் போட்டிக்கு, தீவிர பயிற்சியுடன் தங்களைத் தயார்படுத்திக் கொண்டனர். வாரத்தில் 3 நாள் ஓட்டப் பயிற்சி, 2 நாள் பலப்பயிற்சி, 2 ஓய்வு நாட்கள் என பயிற்சி தீவிரமாய் நடந்தது. வாட்ஸ்-அப் மூலமாக பயிற்சியாளர் அஜித் சிங் அனுப்பிய செய்தியில், “நீங்கள் 18-19கி.மீ. தூரத்தினை கடக்கும் அளவிற்கு பயிற்சி பெற்றுள்ளீர்கள் என்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. வரும் ஞாயிற்றுக்கிழமை, நீங்கள் சிறப்பாக செயல்பட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!" எனச் சொல்லியுள்ளார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஓய்வு எடுப்பதும் மீண்டும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் செயல்முறையும் போட்டியாளர்கள் பலருக்கும் ஆரம்பத்தில் அனுபவமில்லாத விஷயமாக இருந்தாலும், போகப்போக தங்களை பயிற்சியின் மூலம் ஒருங்கிணைத்துக் கொண்டனர். அதிகதூரம் ஓடுவதற்கு விரும்பிய இவர்கள், நாளாவட்டத்தில், குறுகிய காலடி எடுத்து வைத்து ஓடுவது, நிறுத்தி நிறுத்தி ஓடுவது போன்ற பல்வேறு பயிற்சிகளைப் பெற்றதோடு, மலையில் ஓடும் பயிற்சியையும் மேற்கொண்டனர்.

ஒருமாத கால பயிற்சி செயல்முறையில், ஓடுதல்-நடத்தல்-ஓடுதல்-நடத்தல் பயிற்சி நுணுக்கத்தின் மூலம் பலர் முறையான ஓட்ட முறையைப் பெற்றுள்ளனர். 2 கி.மீ தூரத்திலிருந்து படிப்படியாக பலரும் 10 கி.மீ தூரத்தை வலியில்லாமல் ஓடிக் கடக்கும் நிலையை அடைந்துள்ளனர். குழுவாக பயிற்சி செய்வதன் மூலம் ஒருவருக்கொருவர் ஊக்குவித்துக்கொண்டு பயிற்சி செய்தனர். பிரம்மச்சாரி ஒருவர் கூறும்போது, “நான் உடற்பயிற்சிகளைத் திறம்பட செய்பவன் கிடையாது, ஆனால் ஒருவருக்கொருவர் ஆனந்தத்தோடும் உற்சாகத்தோடும் உறுதுணையாய் இருந்ததால், இந்தப் பயிற்சியில் என்னை நிலைநிறுத்திக்கொள்ள அது பெரும் துணையாய் இருந்தது” எனத் தெரிவித்தார்.

இன்னொரு பங்கேற்பாளர் பயிற்சி செயல்முறை பற்றி கூறும்போது, “முன்னங்கால் தசையை தயார்படுத்தும் செயல்முறை துவக்கத்தில் எனக்கு வலி தருவதாய் இருந்தது. இதனால் என்னால் ஓடமுடியுமா என நான் கவலையில் இருந்தேன். ஆனால், இப்போது அந்த தசைகளெல்லாம் இருப்பதே தெரியாத அளவிற்கு என்னால் அனைத்து தசைகளையும் உபயோகிக்க முடிகிறது” என மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

ஆசிரமத்திற்கு வெளியில் நீண்டதூர ஓட்டத்தை மேற்கொள்ளும்போது, தன்னார்வலர்கள் பயிற்சி மேற்கொள்பவர்களுடன் சென்று, குரைக்கும் நாய்களிடமிருந்தும், சாலையில் எதிர்ப்படும் பேருந்துகள், வண்டிகளிடமிருந்தும் பாதுகாப்பாக செல்வதற்கு உதவினர். இவர்கள் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு உற்சாகம் அளித்ததோடு, மோட்டார் பைக்குகளில் தண்ணீர் கொண்டு வந்து பயிற்சி சூழலை அற்புதமாக்கினர். நீண்டதூர ஓட்டத்திற்குபின் சோர்வான தசைகள், தன்னார்வலர்கள் வழங்கிய சாக்லேட்களால் இன்புற்றன.

டிசம்பரில் பெங்களூருவைச் சேர்ந்த மிகத் திறமைவாய்ந்த 5 பேர்கொண்ட குழுவினர் - ஷ்ரேயா, ஹர்ஷா, ராகுல், கஜேந்திரா மற்றும் மகாலக்ஷ்மி ஆகியோர் இவர்களுக்கு மலையில் ஓடுவது, நிறுத்தி நிறுத்தி ஓடுவது, அதிவேக ஓட்டம், குறுகிய நேர ஓட்டத்தில் எதிர்வரும் சவால்களை சமாளிப்பது குறித்த பயிற்சி என பலதரப்பட்ட பயிற்சிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஈஷா வித்யாவிற்காக ஓடுங்கள்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழும் பெரிய மாரத்தான் போட்டிகளில் தன்னார்வத் தொண்டர்கள் கலந்துகொள்வதன் வாயிலாக, ஈஷா வித்யாவிற்கு பல்வேறு வகையில் ஆதரவுகள் கிடைத்து வருகின்றன. இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி மற்றும் சென்னை மட்டுமல்லாது சான்பிரான்ஸிஸ்கோ மாரத்தான் போன்ற வெளிநாடுகளிலும் ஈஷா வித்யாவிற்காக ஓடும் தன்னார்வத் தொண்டர்களாலும் ஆதரவாளர்களாலும் பெரும் அளவிலான எதிர்பார்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தொடர்ந்து பல ஆண்டுகளாக திரட்டப்படும் நிதியைக் கொண்டு 40 வகுப்பறைகள், 8 பள்ளிகளின் சுற்றுச்சுவர்கள், பள்ளிகளுக்குத் தேவையான மரச்சாமான்கள் மற்றும் 2000 மாணவர்களுக்கான வருடாந்திர கல்வி உதவித்தொகை என பல்வேறு உதவிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய மாநில கல்விமுறை குறித்த சில புள்ளிவிவரங்கள்

கீழ்க்கண்ட புள்ளிவிவரங்கள் மூலம் இந்திய கிராமப்புற குழந்தைகளுக்கு தேவைப்படும் உதவிகள் எவ்வளவு என்பது குறித்த ஒரு பார்வையைப் பெறலாம்!

  • 2011 ஆண்டு, 73 நாடுகள் பங்கேற்ற, உலக அளவிலான திறன் மதிபீட்டுத் தேர்வில் (PISA - Programme for International Student Assessment) இந்திய மாணவர்கள் பெற்றது 72வது இடம். அதில் பங்கேற்றவர்கள் இந்தியாவில் கல்வியில் மிகச்சிறந்த மாநிலங்களாக விளங்கியவை தமிழ்நாடு மற்றும் ஹிமாச்சல பிரதேசம்.
  • ஆனால், 2014ல் வெளியிடப்பட்ட கல்வித்தரம் குறித்த ஒரு அறிக்கை Annual Status of Education Report, கிராமப்புறங்களில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 20% பேருக்கு, முதல் வகுப்பு பாடபுத்தகத்தின் ஒரு பத்தியை வாசிக்கும் திறன்கூட இல்லை என்கிறது.

edupercent

  • அரசு பள்ளிகளில் பயிலும் 9ஆம் வகுப்பிலுள்ள 35% மாணவர்கள், தங்களது தாய்மொழியில் கூட எழுதவும் படிக்கவும் இயலாத நிலையில் உள்ளனர். பாதிக்கும் மேற்பட்ட மாணவர்களால் கூட்டல், கழித்தல் போன்ற அடிப்படை கணிதம் செய்யவும் இயலவில்லை.

rural-india-behind-urban-india-in-progress_net-attendance

  • உலக வங்கியின் கூற்றுப்படி, மாணவர்களின் அடிப்படைக் கல்வியறிவு மற்றும் புத்திக்கூர்மை என்பது சர்வதேச கணக்கீட்டின் படி தனிநபர் வளர்ச்சியில் தோராயமாக 2% அளவிற்கு GDP ல் வேறுபடுகிறது.

Percentage-of-Government-Schools-in-India-without-Facilities

ஒரு கணக்கெடுப்பின்படி, பெரும்பாலும் இளைஞர்களின் எண்ணிக்கை கொண்ட ஒரு நாடாக உள்ள இந்தியாவில் 70% பேர் 2025ல் தொழிலாளர்களாக மாறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியானால் இந்தியாவின் தோல்வி உறுதியாகும். தரமான கல்வி இல்லையென்றால் தேசத்தின் எதிர்காலம் இருளில் மூழ்கும் என்பதோடு இவ்வளவு பெரிய மக்கள்தொகை பெரும் சுமையாக மாறிவிடும்!

ஈஷா வித்யா எப்படி உதவுகிறது!

ஈஷா வித்யா பள்ளிகள், இலாப நோக்கமில்லாமல், கிராமப்புறக் குழந்தைகளின் வாழ்வில் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்த, ஒரு முதற்படியாக 2006ஆம் ஆண்டு தமிழத்தின் தென் பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இந்த முயற்சியின் மூலம் பின்தங்கிய கிராமப்புற குழந்தைகள் தங்கள் முழுத் திறனை வெளிப்படுத்தி தங்கள் நிலையை உயர்த்த வழிவகுக்கிறது ஈஷா வித்யா!

தென் இந்தியாவில் உள்ள 9 ஈஷா வித்யா பள்ளிகளில் 6415 குழந்தைகள் பயில்கிறார்கள். 58% மாணவர்கள் முழுமையான கல்வி உதவித்தொகை பெற்று வருவதோடு, சிறப்பு பயிற்சி வகுப்பும் பெறுகின்றனர். மற்றவர்கள் கட்டணச் சலுகை பெறுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முதல் தலைமுறை பள்ளி மாணவர்களாவர். பெண் கல்வியை முன்னிறுத்தும் ஈஷா வித்யாவில் 46% மாணவிகள் ஆவர்.

மாணவர்கள் பள்ளிக்கு சென்று வீடு திரும்புவதற்குமான போக்குவரத்து வசதியை ஈஷா வித்யா வழங்கியுள்ளது. மதிய உணவு சில பள்ளிகளில் வழங்கப்படுவதோடு, மாணவர்களுக்கு ஊட்டச்சத்துமிக்க அன்றாட உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. திறந்தநிலை கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள ஈஷா வித்யா பள்ளிகள், மாணவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் வகுப்பறைகளின் கட்டிட அமைப்பு அமைந்துள்ளன. பள்ளியில் நிகழும் பாரம்பரிய கொண்டாட்டங்கள் மற்றும் விடுமுறை தின நிகழ்வுகள் ஆகியவை கலாச்சார மதிப்புமிக்கதாக அமைகின்றன.

படிப்பறிவு, உடல்திறம், மனவளம் என கிராமப்புற மாணவர்களின் நல்வாழ்வை பலவகையில் உயர்த்தும் நோக்கில் ஈஷா வித்யா தனது கல்வி வழங்கும் முறையைத் திட்டமிட்டுள்ளது. ஆங்கிலம் பேசும் சூழல் வீட்டில் இல்லாததையும், தகுதிமிக்க ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதையும் கருத்தில் கொண்டு, பள்ளிகளில் ஈஷா வித்யாவின் அணுகுமுறை மிகக் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புத்தகங்கள், ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு மற்றும் கனிணி உபகரணங்கள் என பல்வேறுபட்ட பரந்த நூலகங்கள், கற்றல் செயல்முறையை மேம்படுத்துவதாய் அமைந்துள்ளது. கிராமப்புற மக்களின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை முன்னிறுத்தும் வகையிலும், அவற்றிற்கு மதிப்பளிக்கும் வகையிலும் ஈஷா வித்யாவின் அனைத்து கல்விசார்ந்த அணுகுமுறையும் அமைந்துள்ளது. பாடங்களின் வாயிலாக இயற்கை வேளாண்மை குறித்த கல்வியை வழங்கி கிராமப்புற மாணவர்களின் தொழில் வாய்ப்பிற்கான சாத்தியக்கூறுகளை மேம்படுத்துவதாய் அமைகிறது.

அரசுப் பள்ளி தத்தெடுப்புத் திட்டம்

ஈஷா வித்யாவின் சீரிய முயற்சியால் தமிழ்நாட்டில் 56 அரசு பள்ளிகளும் ஆந்திராவில் 460 அரசு பள்ளிகளும் தத்தெடுக்கப்பட்டுள்ளதால், சுமார் 72,000 மாணவர்கள் இதன்மூலம் பலனடைகின்றனர். மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரம் 35:1 என்ற விகிதத்தில் இருக்க, கூடுதல் ஆசிரியர்களை வழங்குதல், ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்குதல், மொழி மற்றும் கணிதத் திறனை மேம்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் வழங்குதல், யோகா, விளையாட்டு, இசை போன்ற பல்வேறு கலைகளில் மாணவர்களை ஈடுபடுத்துதல் என பல்வேறு நிலைகளில் ஈஷா வித்யா இப்பள்ளிகளுக்கு துணைநிற்கிறது!

CC-BY Factly.in