கைலாஷ் மலையின் மகத்துவம் இந்த வாரப் பகுதியில் சத்குருவால் வெகுவாகப் பேசப்படுகிறது. கைலாஷ் மலை பற்றிப் பல கதைகள், பல கருத்துக்கள் நிலவினாலும், சத்குருவின் அனுபவத்தைக் கேட்கும்போதுதான், கைலாஷின் சிறப்பு முழுமையாய் விளங்குகிறது.

கைலாஷ் யாத்ரா - பகுதி 9

டாக்டர்.ராதா மாதவி:

மானசரோவரில் இருந்து புறப்பட்ட நாங்கள், இரண்டு மணி நேரம் பயணித்து கைலாஷ் மலைக்குச் செல்லும் பேஸ்மென்ட் கேம்ப் வந்தோம்.

அனைவரும் சத்குருவோடு சேர்ந்து ‘சிவஷம்போ, சிவஷம்போ’ என்று உச்சாடனை செய்தவாறே, அந்த மகத்தான மலையை நோக்கிச் சென்றோம். மலையை நோக்கி என்பதைவிட, மலைக்குள்ளேயே செல்கிறோம் என்பதாகத்தான் எங்கள் உணர்வு பெருகிக்கொண்டு இருந்தது.

புத்தர் வேற்றுலகத்தவரா...!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சக்திமிகுந்த மனிதர்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன். நான் அவர்களை வணங்கும்போது உண்மையாகவே வணங்குவேன். ஆனாலும் என் குருவை நான் வணங்குவதைக் காட்டிலும் அது சற்றுக் குறைவாகவே இருக்கும். ஆனால், கைலாயத்தை வணங்கும்போது என் குருவை நான் எப்படி வணங்குவேனோ, அப்படியே வணங்குகிறேன்!

அன்றைய இரவு, கைலாஷ் மலைக்கு நான்கு கி.மீ முன்னர் கூடாரம் அமைத்துத் தங்கினோம். கூடாரத் திரையை விலக்கினால், முகத்தில் முட்டும் அளவுக்கு கைலாஷ் வெகு நெருக்கமாய் காட்சியளித்தது. பொதுவாக, மற்றவர்கள் மலையை வலம் வரும் நோக்கத்தில் செல்வர். ஆனால், சத்குரு அதில் நேரத்தை விரயம் செய்வதைவிட முடிந்த அளவு மலையை நெருங்கி அதனோடு இருக்க முயற்சிப்போம் என்றார். அங்கிருந்து மீண்டும் நடந்து கைலாஷ் மலையினை நெருங்கி, எல்லோரும் ஓரிடத்தில் கூடினோம்.

சத்குரு உச்சக்கட்ட உணர்வுப் பிளம்பாய் இருந்தார். இறைமை கொப்பளித்த அந்த மலையைப் பார்த்ததும் நாங்கள் அத்தனை பேரும் வெடித்து அழுதோம். அந்த மண்ணில் மண்டியிட்டு உயிர் முழுவதையும் கொட்டி வணங்கினோம். அந்த மலை எங்களை அப்படி வணங்கச்செய்தது. பரவசமாய் கண்களில் தாரைதாரையாகக் கண்ணீர் வழிய கை கூப்பி வணங்கிய சத்குரு, தரையில் மண்டியிட்டு நமஸ்கரித்தார். அவர் அப்படி நமஸ்கரித்ததை இதற்கு முன்னர் யாரும் பார்த்ததில்லை.

அந்த இடத்தின் வீரியம் ஒவ்வொரு கணமும் எங்கள் ஒவ்வொருவரின் உயிரையும் தொட்டது. சிறிது நேரம் கழித்து, சத்குரு எங்கள் அனைவருக்கும் கைலாஷ் மலையின் முன்னிலையில் தீட்சை அளித்தார். “பிரம்மானந்த சொரூபா ஈஷா ஜகதீஷா... அகிலானந்த சொரூபா ஈஷா மஹேஷா...” என நாங்கள் அனைவருக்கும் தீட்சை அளிக்கப்படும் வரை பாடிக் கொண்டே இருந்தோம்.

கைலாஷின் மடியில் குருவின் திருவடியில் அந்த கணங்கள் அருளை வாரி இறைத்தன. கைலாஷ் மலை, அதன் தொடர் மலைகள், சத்குரு, நாங்கள், மற்றவை எல்லாம் ஒன்றாய் சங்கமித்த ஒரே உயிராய் உணர்ந்தோம்.

சத்குரு அங்கே எதுவுமே பேசவில்லை. அங்கே பொங்கிப் பெருகிய இறைமையை எங்களுக்கு உணர்த்தும் உன்னத சக்தியாய் வீற்றிருந்தார். பின்னர் திரும்பி வரும் வழியில் காத்மாண்டுவில் சத்சங்கத்தில் பேசத் தொடங்கினார்.

“உண்மையிலேயே புனிதமான பல இடங்களில், சக்தி வாய்ந்த பல இடங்களில் நான் இருந்திருக்கிறேன். சக்திமிகுந்த மனிதர்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன். நான் அவர்களை வணங்கும்போது உண்மையாகவே வணங்குவேன். ஆனாலும் என் குருவை நான் வணங்குவதைக் காட்டிலும் அது சற்றுக் குறைவாகவே இருக்கும். ஆனால், கைலாயத்தை வணங்கும்போது என் குருவை நான் எப்படி வணங்குவேனோ, அப்படியே வணங்குகிறேன்! என் வாழ்வில் வேறெங்கும் நான் இப்படிச் செய்ததே இல்லை. இந்தப் பிரபஞ்சத்தில் சிவனின் தன்மையை வெளிப்படுத்தும் நெருக்கமான ஓர் உருவம் இருக்குமானால், அது இந்த கைலாஷ் மலைதான். நான் இதை உணர்ச்சிவசப்பட்டுச் சொல்லவில்லை. மிகவும் கவனமாக பல விஷயங்களைப் பார்த்த பின்னரே சொல்கிறேன்.

புத்தர் வேற்றுலகத்தவரா...!-1

அவர்கள் சொல்ல முயல்வது என்னவென்றால், பூமிக்குச் சொந்தமில்லா வேறு பல உயிர்களின் தாக்கம் கௌதமரின் பிறப்பில் இருந்தது என்பதைத்தான். ஏனென்றால், அவர் வாழ்ந்தவிதமும் அவரைப்பற்றிய விஷயங்களும், அவர் இந்த பூமிக்கு சற்றே அந்நியமானவர் என்பதாகத்தான் தோன்றும்.

பல அற்புதமான உயிர்கள் தங்களுக்குத் தெரிந்த உன்னத விஷயங்களை இங்கே பொதித்து வைத்திருக்கிறார்கள். புவியியல் ரீதியாக இதனை நீங்கள் கருங்கல் பாறை என்றுதான் சொல்வீர்கள். கடந்த 4000 ஆண்டு கால வரலாறு மட்டுமே வெளியே தெரியும். தற்போது இந்த இடத்தின் சக்தியும், தன்மையும், அறிவும், உலகுக்குத் தெரியத் தொடங்கியிருக்கிறது.

இந்த இடத்தில் பொதித்து வைக்கப்பட்டுள்ள அறிவு இன்னும் உயிர்ப்போடு உலகின் ஒவ்வொரு மதத்தையும் ஈர்த்துள்ளது. ஜைன மதத்தினர் இது தங்களின் புனித இடம் என்கின்றனர். புத்த மதத்தினர் தங்களுடையது என்கின்றனர். பான் மதத்தினர் தங்களுக்கு உரியது என்கின்றனர். இது யாருக்கும் சொந்தமானதல்ல. இது உலகின் பொக்கிஷம். வாழ்க்கையைப்பற்றி ஒருவர் அறிய விரும்பும் அனைத்தும் இங்கே பொதித்து வைக்கப்பட்டுள்ளது. இங்கே ஆன்மீக ரீதியாக, அறிவியல்ரீதியாக என்ன உள்ளதோ, அதன் சங்கேதக் குறிப்புகளிலிருந்து விஷயத்தை விளங்கிக் கொள்ளும் தெளிவும் புரிதலும் இருந்தால், அங்கே இருப்பவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அறிவியலும் ஆன்மீகமும் வெவ்வேறானவை அல்ல. இருசாராரும் உண்மையைத்தான் தேடுகின்றனர். ஆனால், அணுகுமுறைதான் வித்தியாசப்படுகிறது. இருவருமே ஒன்றைத்தான் தேடுகிறோம் எனில், எது சிறந்த வழி என்பதை கூடிய சீக்கிரம் உணரத் தொடங்கிவிடுவார்கள். ஏறத்தாழ தற்போது உணரத் தொடங்கிவிட்டார்கள்.

உண்மையைக் கண்டுணரும் அவர்களது வழிமுறைகள் போதுமானவை அல்ல என்பதை அறியத் தொடங்கிவிட்டார்கள். அந்தக் கருத்து உலக அளவிலும் பெருமளவில் பரவத் தொடங்கிவிட்டது. ஆனால், ஆன்மீகம் சரியான முறையில் தற்போது வழங்கப்படவில்லை. வெப்பக் காற்றை வெறுத்து ஒதுக்குவது போல வெறுத்து ஒதுக்குகிறார்கள். நாம் அதற்கு ஒரு சரியான அடித்தளத்தை அமைத்துத்தர விரும்புகிறோம்.

கைலாஷ் மலையுடன் புத்த மதம் மிக முக்கியத் தொடர்புகொண்டுள்ளது. பல கதைகள் அதைப்பற்றி உள்ளது. ஆனால் அந்தக் கதைகளின் பின்புலம், சில அறிவார்ந்த அம்சங்களுடன் உள்ளது. கௌதம புத்தரின் தாயார் மாயா, அவரது வயிற்றில் கௌதமர் இருந்தபோது மானசரோவருக்குச் சென்று குளித்தார் என்கிறார்கள். அவர்கள் சொல்ல முயல்வது என்னவென்றால், பூமிக்குச் சொந்தமில்லா வேறு பல உயிர்களின் தாக்கம் கௌதமரின் பிறப்பில் இருந்தது என்பதைத்தான். ஏனென்றால், அவர் வாழ்ந்தவிதமும் அவரைப்பற்றிய விஷயங்களும், அவர் இந்த பூமிக்கு சற்றே அந்நியமானவர் என்பதாகத்தான் தோன்றும். அவரது கருணைகூட இந்த பூமிக்கு உரியதாகவோ, மனிதனின் இயல்பாகவோ இல்லை.

அவர் மனித நல வாழ்வுக்காக எல்லாம் செய்திருந்தாலும் அவை பலவிதங்களிலும் மனிதனின் தன்மையோடு மட்டும் நிற்கவில்லை என்பதை ஆழமாகப் பார்த்தால் புரிந்து கொள்வீர்கள்” என்றார்.

சத்சங்கம் தொடர்ந்தது.!


பயணம் தொடரும்...