நம் சமூகத்தில் பொதுவாக, சந்நியாசி என்றாலே காவி நிற உடை, நீண்ட தலைமுடி, மெலிந்த உடல் கொண்டவர்கள் என்ற பிம்பம் உருவாகியுள்ளது. ஆனால் இந்த பிரம்மச்சரியத்தைப் பற்றி முற்றிலும் வேறு பரிமாணத்தில் விளக்குகிறார் சத்குரு. பிரம்மச்சரியத்தின் சாரம், ஈஷாவில் அளிக்கப்படும் பிரம்மச்சரிய தீட்சை போன்றவற்றை எடுத்துரைக்கிறது சத்குருவின் இக்கட்டுரை...

சத்குரு:

பிரம்மச்சரியம் என்றால் என்ன?

பிரம்மச்சரியம்... சந்நியாசம்... ஆகிய இரண்டுக்குமே அடிப்படையான சாரம் எதுவென்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். உதாரணமாக பிரம்மச்சரியம் என்ற சொல்லின் பொருளே, புனிதத்தின் பாதையில் நடையிடுவது என்பதுதான். பிரபஞ்சத்தின் பெருஞ்சக்தியானது ஒவ்வொரு தனிமனிதனின் எல்லைக்குள்ளும் குறுகி நிற்கிறது. நாம் தனிமனிதர்களுக்கு எதிரானவர்களல்லர். ஆனால் தனிமனிதன் என்பது குறுகிய எல்லையின் அடையாளம். பிரபஞ்சம் என்பது எல்லையின்மை.

ஒரு காலத்தில் நம் தேசத்தில் மக்கள் தொகையில் 30% பேர் சந்நியாசிகளாக இருந்துள்ளார்கள்.

உலகின் எல்லாப் பகுதிகளிலுமே கலாச்சார ரீதியிலும், வளர்ச்சியிலும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நாடுகளிடையே கூட, ஆன்மீகம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் சந்நியாசமும் இருந்து வந்துள்ளது. ஒவ்வொரு கலாச்சாரமும் ஒன்றையொன்று பார்த்து கற்றுக் கொள்ளவில்லை. வாழ்வின் நிர்ப்பந்தங்களுக்குள் நிற்பவர்கள் கண்டுணராத ஒன்றை ஆன்மீகப் பாதையில் நடையிடுபவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் நம் தேசத்தில் மக்கள் தொகையில் 30% பேர் சந்நியாசிகளாக இருந்துள்ளார்கள், இது குறிப்பிடத்தக்க சதவிகிதம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

குடும்ப வாழ்க்கைக்குள் போக வேண்டிய தேவை யாருக்கெல்லாம் உண்டோ அவர்களெல்லாம் அந்த பந்தத்தில் ஈடுபடலாம். உண்மையில் குடும்ப வாழ்வில் ஈடுபடுபவர்களில் பலருக்கும் அது சிறிது கால சுவாரசியம்தான். ஆனால் அந்த சிறிது கால சுவாரசியத்திற்காக வாழ்நாள் முழுவதும் சிக்கிக் கொள்கிறார்கள். இதைவிட மோசம் என்னவெனில் இதைக் கண்டறிந்து மேலைநாட்டிலும், மெதுமெதுவாக இந்தியாவிலும் இதற்குத் தீர்வு என்கிற பெயரில் குறுகிய கால உறவுகளைத் தேர்ந்தெடுத்து வாழத் தொடங்குகிறார்கள்.

இது மிக மோசமானது. ஏனெனில், உங்கள் உறவு குறுகிய காலமாக இருந்தாலும் சரி, வாழ்நாள் முழுமைக்குமாக இருந்தாலும் சரி, மனித உடலுக்கென்று சில ஞாபகப் பதிவுகள் உள்ளன. கர்மவினை குறித்துப் பேசுகிறபோது, பிரபஞ்சத்தின் முதல் பெரும் பேரோசை தொடங்கி உடலளவிலான அனைத்து நெருக்கங்களும் உங்கள் கர்மவினையின் நினைவுப் பதிவில் உள்ளன. இதற்கு யோக மரபில் ‘ருனனு பந்தம்‘ என்று பெயர். சக்திநிலையின் ஸ்தூல பரிமாணத்தில் உருவாகிற பந்தங்களை இச்சொல் குறிக்கிறது. இந்த பந்தத்தைக் கரைக்க பலர் பல பிறவிகள் எடுக்க வேண்டியுள்ளது. கட்டற்ற பாலியல் உறவைப் பலகாலமாய் சமூகம் எதிர்க்கக் காரணம் ஒழுக்கம் சார்ந்த அம்சங்களால் அல்ல. இதில் ஒழுக்கம் சார்ந்து எதுவுமில்லை. கட்டுடைக்க முடியாத பந்தங்களை அது ஏற்படுத்தும் என்பதே காரணம்.

ஈஷாவில் பிரம்மச்சரியம்...

ஈஷாவில் ஒருவர் பிரம்மச்சர்யத்திற்கோ, சந்நியாசத்திற்கோ வந்தால் நாம் அவர்களின் உடைகளை மட்டும் மாற்றுவதில்லை. அவர்களின் சக்திநிலைகளையே மாற்றி விடுகிறோம். ஈஷாவில் பிரம்மச்சர்ய தீட்சை பெறுபவர்களை நீங்கள் அருகிலிருந்து கவனித்தால் தீட்சை பெற்ற 24 மணி நேரங்களுக்குள் அவர்களிடம் அசாத்தியமான மாற்றங்கள் நிகழ்வதைக் கண்டுணர்வீர்கள். 24 மணி நேரங்களுக்குள் அவர்களின் சக்தி நிலையையே முழுமையாக மாற்றியமைப்பதன் மூலம் அவர்களிடம் மிகப் பிரம்மாண்டமான முதலீடு ஒன்றைச் செய்கிறேன்.

ஈஷாவில் ஒருவர் பிரம்மச்சர்யத்திற்கோ, சந்நியாசத்திற்கோ வந்தால் நாம் அவர்களின் உடைகளை மட்டும் மாற்றுவதில்லை. அவர்களின் சக்திநிலைகளையே மாற்றி விடுகிறோம்.

கௌதமபுத்தர் மேற்கொண்ட அணுகுமுறையை நான் மேற்கொண்டால் நம்மிடம் இந்நேரம் பல்லாயிரக்கணக்கான சந்நியாசிகள் இருப்பார்கள். நாம் பிரம்மச்சர்யம் கேட்டு வருபவர்களிடம் அதற்கெதிரான பாஷையிலேயே பேசுகிறோம். அவர்களில் மிகச் சிலரே இந்தப் பாதைக்கு வருகிறார்கள். மாற்றுப் பாதை யாருக்கெல்லாம் இல்லையோ அவர்களைக் கண்டறிந்து அவர்களை மட்டுமே இப்பாதையில் ஈடுபடுத்துகிறோம்.

இத்தகைய முதலீடு ஏன் செய்யப்படுகிறதென்றால் அவர்களை தங்கள் உயிர் விடுதலைக்கு மாத்திரம் நாம் தயார் படுத்துவதில்லை. மாறாக, சமூகத்தில் உள்ள பலருக்கும் பல வாய்ப்புகளை உருவாக்கக் கூடியவர்களாக அவர்களை நாம் காண்கிறோம்.

எனவே சிலருடன் தங்கள் உறவைப் பகிர்ந்து கொள்பவர்களுக்கும், சந்நியாசிகளுக்கும் இருக்கிற வித்தியாசம் இதுதான். உங்கள் உடலின் செயல்பாடே ஒருவகையான சக்தி தொழில்நுட்பம். இதை பல முனைகளிலும் திறந்த நிலையில் வைத்து உலகில் பலவிதமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுமிருக்கலாம். முழுமையாக மூடிவைத்த நிலையில் உங்களுக்குள்ளேயே சக்தியை ஒருங்கிணைத்தும் வாழலாம். ஏவுகணைகளை இயக்கும் போது எல்லாப் பக்கங்களையும் நன்றாக அடைத்து வைத்து, ஒருபக்கம் மட்டும் நெருப்பு வைத்து விண்ணில் ஏவுவார்கள். எல்லாப்பக்கங்களிலும் நெருப்பு வைத்தால் அது எங்கேயும் போகாமல் வெடித்துச் சிதறும். ஒரு பிரம்மச்சாரியையும், சந்நியாசியையும் தயார் செய்வதும் ஓர் ஏவுகணையை உருவாக்குவது போலத்தான். எல்லாத் திசைகளையும் அடைத்து வைத்து ஒரு திசையில் மட்டும் நெருப்பு வைப்பதால் விண்ணில் உந்திச் செல்லும் விண்கலம் போல் அவருடைய சக்திகள் ஒருமுகப்படுத்தப்படுகின்றன.

ஒருமுகப்படுத்தப்படும் போதுதான் சக்திமிக்க கருவிகள் உருவாகின்றன. இவர்களும் அப்படி ஆக்கபூர்வமான ஆன்மீக அணுகுண்டுகளாக உருவாகிறார்கள். உங்கள் எல்லைக்கு அப்பாற்பட்டவற்றைத் தெரிந்து கொள்ள விண்கலங்களை ஏவுவதுபோல் உங்கள் எல்லைக்கு அப்பாற்பட்டவற்றையும் உங்களுக்கு சாத்தியமாக்கவே இவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

சத்குரு ஏன் பிரம்மச்சரிய தீட்சை அளிக்கிறார்?

மூன்று பிறவிகளாக மனிதர்களுடன் எவ்விதத் தொடர்புகளையும் உருவாக்கிக் கொள்ளாமல் சென்று கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் மிகச் சிலரே என்னைப் பின்தொடர்ந்து வந்தார்கள். மற்றபடி மக்களுக்கும், எனக்கும் தொடர்புகள் இல்லாமலே இருந்தது. இப்போதோ எப்போது பார்த்தாலும் மனிதர்கள் மத்தியிலேயே இருக்கிறேன். ஏனென்றால் அவர்களை நான் மனிதர்களாக மட்டும் பார்க்கவில்லை. அவர்களை பல மாற்றங்களுக்கான வாய்ப்புகளாகப் பார்க்கிறேன். வாய்ப்புகள் நடைமுறைக்கு வருவது ஒரே இரவில் கூட நடக்கலாம். நீங்கள் முழு விருப்பத்துடன் இருக்கும்போது ஒரே நொடியில் கூட அது நிகழ்வது சாத்தியம்.

அத்தகைய வாய்ப்புகளாக மலரக் கூடியவர்கள் தங்கள் தோள்களில் எல்லா பந்தங்களையும் தாங்கிக் கொள்ளாமல் இன்னும் பெரிய நோக்கங்களுக்கான சாத்தியங்களாக மலருகிறார்கள். அவர்கள் பிற பந்தங்களிலிருந்து விலகி நடக்கிறார்கள். கௌதம புத்தரிடம் ஆன்மீகப் பாதையில் தனியாய் நடப்பது நல்லதா, துணையுடன் நடப்பது நல்லதா என்று கேட்டபோது தனியாய் நடப்பதே நல்லதென்றார். இல்லற வாழ்க்கை யாருக்குத் தேவையோ அவர்கள் அதிலே ஈடுபடலாம். அவரவர் பாதை அவரவருக்கு!